மூன்றுமலர் ஓவியக் கவிதை
மகாகவி பாரதியார்
ஞானமன மான,இன மானமன மான,கன
வானமன மானகவி! கானமன - மானகவி!
சிந்துக் கவித்தந்தை! சீர்மைமிகு பாரதியை
முந்துபுகழ் நெஞ்சே முழங்கு!
பாவேந்தர் பாரதிதாசனார்
காலைநிலை வேலையலை சோலைமலை ஓலையிலை
மாலைநிலை கொண்ட வடிவழகை - ஆலைமது
ஏந்தும் கவிதைகளி லீந்திட்ட பாவேந்தர்!
நீந்துமென் நெஞ்சம் நினைந்து!
கவியேறு வாணிதாசனார்
தேடிமுடி! நாடியடி! ஓடியிடி! பாடிவெடி!
கோடியடி தீட்டிக் கொடுத்தவர்! - பாடி
யழகள்ளித் தந்தவர்!மாண் பாண்டகவி யேறு
மொழியள்ளி நெஞ்சே முழங்கு!
படிக்கும் முறை
இம்மலர் வெண்பா 64 எழுத்துக்களைப் பெறும். ஓவியம் 57 எழுத்துக்களைப் பெறும். முதலடி 16 எழுத்துக்களையும், இரண்டாமடி 16 எழுத்துக்களையும், ஈற்றிரண்டடிகள் 32 எழுத்துக்களையும் பெற்று வெண்பா அமையும். முதலடியின் இரட்டை எண்களில் அமையும் எழுத்துக்கள் ஒன்றி ஒரே எழுத்தாக மலரின் நடுவில் நிற்கும். இரண்டாமடி நடுவிதழ் வட்டத்தில் சுற்றி அமையும். மூன்று நான்காம் அடிகளிள் மேலிதழ் வட்டத்தில் சுற்றி அமையக் காணலாம்.
புதுவைக்குப் புகழ்சேர்த்த கவிஞர் மூவரை மும்மலர் ஓவியத்தில் பாடியுள்ளேன்.
முதல் வெண்பாவின் கருத்துரை
பாட்டுக்கோர் புலவர் பாரதியார் ஞான நெஞ்சுடைக் கவிஞர். இனத்தின் பெருமையுடைக் கவிஞர். விரிந்த வானம்போன்று மனமுடைக் கவிஞர். இசைமனமுடைக் கவிஞர். சிந்துக்கவிக்குத் தந்தையெனப் போற்றப்படுபவர். சீர்மை மிகுந்தவர். புகழை முந்திநின்று ஏந்தும் என்னெஞ்சே மகாகவியின் மேன்மையை முழங்குகவே.
இரண்டாம் வெண்பாவின் கருத்துரை
விடியலின் அழகை, கடலலையின் எழிலை, சோலை, மலை, ஓலை, இலைகளின் வடிவை, மதி தவழும் மாலை அழகை, மதுவேந்தும் பாக்களில் படைத்தவர் பாவேந்தர் பாரதிதாசனார். அவரை நினைத்து என்நெஞ்சம் நீந்தி மகிழும்.
மூன்றாம் வெண்பாவின் கருத்துரை
பகைவர் எங்குள்ளார்? தேடி, நாடி, அழிக்க, விரைந்தோடித் தீயவரை இடிக்க, கவிபாடி அவரை வெடிக்கக் கோடி அடிகளைப் பாடிக் குவித்தவர். [பாடி - ஊர்] ஊரின் அழகை எழுதிக் களித்தவர். மாண்பினை ஆட்சி செய்த கவியேறு வாணிதாசனாரின் மொழியை முழங்குவாய் என்னெஞ்சே!
பாட்டரசர் கி. பாரதிதாசன்
15.08.2019
Aucun commentaire:
Enregistrer un commentaire