தேர் ஓவியக் கவிதை
வேதா!தா தா!தகை தந்தரு ளே,தேரு
மோதுருக, ஓங்கு கலைகற்க! கண்ணா
குவிகனி கோத்த கவியே தருக!
புவியே பொழிக கவி !
அருளே! நனிதேவே! ஆரமுதே! தேனே!
தெருளே யளி!தாராய் திண்மை! - திருவாழ்
தகவே தருக! பகருன் தமிழே!
புகழே பொழிக புவி!
இத்தேர் ஓவியக் கவிதையில், தேரின் மேல் தட்டுக் கூரையிலும் நடுவிலும், கீழ்த்தட்டு நடுவிலும் என நான்கு முறை 'வேதா தருக கவி' என்ற தொடர் வந்துள்ளதைக் காணலாம்.
கருத்துரை:
தாதா - தந்தை
தகை - அழகு, அன்பு, அருள், பெருமை, நன்மை.
தகவு - தகுதி, அறிவு, கற்பு, நல்லெழுக்கம், கற்பு, நன்மை.
திரு - திருமகள், செல்வம், சிறப்பு, அழகு, பொலிவு, தெய்வத்தன்மை.
வேதம் உரைக்கும் பரம்பெருளே! தந்தையே! தகையைத் தந்தருள்வாய்! கற்போர் மனம் உருகும் வண்ணத்தில் இத்தேர் கவியை ஓதிடுவாய்! கண்ணா! கனிகளின் சுவை மிகும் வண்ணம் கவிதையைத் தருவாய்! இப்புவி புகழைப் பொழியும் உயர்வை அளித்திடுவாய்!
அருளால் காக்கும் உயர்ந்த இறைவனே! திகட்டா அமுதே! இனிக்கும் தேனே! அறிவின் தெளிவை அளிப்பாய்! திண்மை தருவாய்! என்னுள்ளத்துள் திருமகள் வாழ்கின்ற தகுதியைத் தருவாய்! நீ விரும்பும் தமிழை பகர்வாய்! இப்புவி புகழைப் பொழியும் உயர்வை அளித்திடுவாய்!
பாட்டரசர் கி. பாரதிதாசன்
07.08.2019
Aucun commentaire:
Enregistrer un commentaire