vendredi 9 août 2019

தேர்ப்பந்தம்


தேர் ஓவியக் கவிதை - 15
  
தனித்தமிழறிஞர் க. தமிழமல்லனார்
புகழைப் போற்றுகவே!
  
நேரிசை வெண்பா
  
மதுத்தந்த பூவினை,வான் கொண்டபுகழ் சீரைப்
புதுப்..பார் நிறைபொற்பைத் தாழைப் - பதமணத்தை
யிங்களிக்க மல்லா்புனை பாட்டுக்கு நற்சங்கே!
பொங்கு! புகழைப் புனைந்து!
  
கருத்துரை:
  
தனித்தமிழறிஞர் க. தமிழமல்லனார் எழுதுகின்ற பாடல்கள் இனிக்கும் தேனை அளிக்கும். வானளவு புகழைப் பெருமையை வழங்கும். புத்துலக நிறையழகைப் பொழியும். தாழைபோல் மணக்கும், நற்சங்கே அவரின் புகழைப் போற்றிப் பொங்குகவே!
  
வஞ்சி விருத்தம்!

நீடு பாடல் காடு..நீ!
நீடு காணும் நாடு..நீ!
நீடு நாடல் மேடு..நீ!
நீடு மேவும் பாடு..நீ!
    
கருத்துரை:
    
நீடு - நிலைத்திருக்கை.
நீடுதல் - செழித்தல், நிலைத்தல், மேம்படுதல்.
மேடு - பெருமை.
பாடு - உலகவொழுக்கம்.
  
நிலைத்த பாக்காடு நீ! செழித்த நாடு நீ! நிலைபெறத் தேடும் பெருமை நீ! மேன்மை தரும் உலகவொழுக்கம் நீ!
  
நீடு கூட்டு மேடு..நீ!
நீடு மேற்று மேரு..நீ!
நீரு மேற்ற மேரு..நீ!
நீரு மேற்ற கூடு..நீ!
    
கருத்துரை:
    
கூட்டும் ஏடு [ஏடு - நுால்]
ஏற்றும் ஏர்
மேரு - மலை
கூடு - உடல்
  
நிலைத்த வாழ்வைக் கூட்டுகின்ற நுால் நீ! செம்மையை அளிக்கும் ஏர் நீ! மழையைத் தருகின்ற மலை நீ! இளநீர் போன்று தண்ணெஞ்சம் கொண்டாய் நீ!
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
09.08.2019

Aucun commentaire:

Enregistrer un commentaire