samedi 26 décembre 2015

கர்த்தர் திருத்தாலாட்டு!




கர்த்தர் திருத்தாலாட்டு!
(கலித்தாழிசை)

கண்ணே! மணியே! கமழும் மலர்க்காடே!
விண்ணே! ஒளியே! விளைந்த பசும்வயலே!
மண்ணே மணக்க வரம்தரும் மாமறையே!
தண்ணே தழைக்கும் தவமகனே தாலேலோ!
   தமிழாய் இனிக்கும் தவமகனே தாலேலோ!

அன்பின் சுரப்பே! அருட்கடலே! ஆண்டளிக்கும்
இன்பின் சுரப்பே! இறைமகனே! என்மனத்
தொண்டின் சுரப்பே! சுடர்வடிவே! மேன்மைதரும்
பண்பின் சுரப்பே! பரம்பொருளே தாலேலோ!
   பசுந்தமிழ் ஊற்றே! பரம்பொருளே தாலேலோ!

ஓலைக் குடிற்பிறந்த ஒப்பில் மறையவனே!
காலைக் கதிரே! கனிந்த கனிக்குலையே!
சோலை புகுந்துவரும் துாய மணக்காற்றே!
பாலை நிகர்த்த பசுஞ்சுவையே தாலேலோ!
   படர்தமிழ் நல்கும் பசுஞ்சுவையே தாலேலோ!

விண்மீன் வழிகாட்டும் விந்தைச் செயல்புரிந்தாய்!
கண்மீன் களிக்கக் கலையென நீ..மலர்ந்தாய்!
பெண்ணின் துயரகற்றிப் பேணும் நலமளித்தாய்!
பண்மீன் எனக்குள் படைத்தவனே தாலேலோ!
   பைந்தமிழ்த் தேனைப் படைத்தவனே தாலேலோ!

கண்ணீர் பெருகிவர மண்ணின் சுமையுற்றாய்!
புண்ணீர் மனத்தார் புகன்ற மொழிபொறுத்தாய்!
நுண்ணீர் உயிர்முதல் நின்சீர் படைப்பன்றோ?
விண்ணீர் அருளே! வியனரசே தாலேலோ!
   வெல்லுதமிழ்ப் பாகே! வியனரசே தாலேலோ!

கற்பகப் பூவே! கருணைப் பெருங்கடலே!
நற்றவத் தேனே! நலமருள் தந்தையே!
அற்புத சீரே! அமுதுாறும் நற்சுனையே!
பெற்புற என்னுள் புகுந்தனையே தாலேலோ!
   பூந்தமிழாய் மின்னிப் புகுந்தனையே தாலேலோ!

மலைமேல் பொழிந்த மணியுரையை என்னென்பேன்!
அலைமேல் நடந்த அருஞ்செயலை என்னென்பேன்!
கலைமேல் சுரக்கும் கனியமுதை என்னென்பேன்!
தலைமேல் தரித்து வணங்குகிறேன் தாலேலோ!
   தண்டமிழ் பாடி வணங்குகிறேன் தாலேலோ!

முள்ளணி சூடியவா! முல்லை அகத்தழகா!
வள்ளணி ஏற்றுயிர் வாடி வதங்கியவா!
உள்ளணி நானுற உன்றன் திருவடிக்குச்
சொல்லணி சூடித் தொழுகின்றேன் தாலேலோ!
   துாயதமிழ் பாடித் தொழுகின்றேன் தாலேலோ!

சிலுவை சுமந்து..நீ சிந்திய செங்குருதி
உலகைப் புரட்டி உயர்நெறி தந்ததுவே!
வலமை வழிகாண வந்துன்னைப் போற்றுகிறேன்
நிலவை நிகர்த்தவனே! நெஞ்சுருகித் தாலேலோ!
   நீடுதமிழ் போன்றவனே நெஞ்சுருகித் தாலேலோ!

வெள்ளிப் பணம்வேண்டிக் காட்டிக் கொடுத்தவனை
அள்ளி அணைத்த அரும்பெருஞ் சோதியனே!
கொள்ளிப் பிசாசுகளின் கொட்டம் ஒழித்தவனே!
பள்ளி கிடத்தியுனைப் பாடுகிறேன் தாலேலோ!
   பைந்தமிழ்ப் பாரதிநான் பாடுகிறேன் தாலேலோ!

25.12.2015

4 commentaires:

  1. கர்த்தர் தாலாட்டு கவிதையை எளிமை படுத்துமே!

    தாலாட்டு தாலாட்டே!

    RépondreSupprimer
  2. வணக்கம்
    ஐயா
    காலம் உணர்ந்து கர்த்தர் தாலாட்டு இயற்றிய விதம் சிறப்பு ஐயா த.ம 2
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    RépondreSupprimer
  3. கர்த்தர் திருத்தாலாட்டு அருமை ஐயா...

    RépondreSupprimer
  4. வணக்கம் ஐயா!

    இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    கனிவான தாலாட்டைக் கர்த்தரும் கேட்டே
    இனிதாய் அருள்வான் இரந்து!

    தாழிசையாய் தந்த தாலாட்டு மிக அருமை!
    நுட்பங்களைப் புரிந்து கற்றுக்கொள்ள
    இலகுவாகத் தந்துள்ளீர்கள். மிக்க நன்றி ஐயா!

    வாழ்த்துக்கள்!

    RépondreSupprimer