mercredi 25 novembre 2015

வெண்பாக் கொத்து


பெண்ணின் பெருந்தக்க யாவுள?

குறள் வெண்பா!
பெண்ணின் பெருமையைப் பேணும் உலகினில்
மண்ணும் மணக்கும் மலர்ந்து!

நேரிசைச் சிந்தியல் வெண்பா

பெண்ணின் அழகால் பெருகிவரும் பாட்டாறு!
கண்ணுள் புகுந்து களிப்பூட்டும்! - தண்மலரின்
வண்ணம் மணக்கும் மலர்ந்து!

இன்னிசைச் சிந்தியல் வெண்பா

பெண்ணின் விடுதலையைப் பேணாத் திருநாட்டில்
நண்ணும் இருளே! நரிகள் அரசாண்டால்
மன்னும் மடமை மலர்ந்து?

நேரிசை வெண்பா

பெண்ணின் சிறப்பால் பெருகும் வளம்ஏற்போம்!
பண்ணின் இனிய பயனேற்போம்! - விண்ணருளின்
ஆட்சி மணக்கும் அழகேற்போம்! அந்தமிழின்
மாட்சி மணக்கும் மலர்ந்து!

இன்னிசை வெண்பா


பெண்ணின் தவமுணர்ந்து பேசும் நிலத்தினிலே
எண்ணிலா ஏற்ற எழில்மேவும்! நல்லியற்கைத்
தண்மை தழைக்கும்! தமிழ்அருள் வள்ளலென
வண்மை தழைக்கும் மலர்ந்து!

பஃறொடை வெண்பா

பெண்ணின் வடிவமாய்ப் பேசும் மொழிகொண்டோம்!
மண்ணின் வடிவமாய் மாண்பளித்தோம்! - தண்ணதிக்கும்
அன்னை பெயர்படைத்தோம்! அன்பு வயலென்றோம்!
பொன்னை நிகர்த்த பொலிவென்றோம்! - உன்னை
அளித்த அருமறையே அம்மா! இதனை
உளத்துள் பதித்தால் உயர்வோம்! - வளமெய்தக்
கண்ணின் மணியாய்க் கவிக்கருத்தைக் காத்திடுவோம்!
உண்மை உணர்ந்தே உலகம் உருண்டால்
நலங்கள் மணக்கும்! நறுஞ்சோலை போன்றே
வளங்கள் மணக்கும் மலர்ந்து!

இலக்கண விளக்கம்

வெண்பா கொத்தெனும் இப்பாட்டில் குறள் வெண்பா, நேரிசைச் சிந்தியல் வெண்பா, இன்னிசைச் சிந்தியல் வெண்பா, நேரிசை வெண்பா, இன்னிசை வெண்பா, பஃறொடை வெண்பா இடம்பெறவேண்டும்.

அனைத்து வெண்பாக்களிலும் முதல் சீர் ஒன்றாக வரவேண்டும். ஈற்றுச்சீரும் ஒன்றாக வரவேண்டும்.

மேல் உள்ள வெண்பாக்கள் 'பெண்ணின்', என்ற சீரை முதல் சீராகக் கொண்டுள்ளன. 'மலர்ந்து' என்ற சீரை ஈற்றுச் சீராகக் கொண்டுள்ளன.

09.08.2015

6 commentaires:

  1. அருமை ஐயா... சிறப்பான விளக்கம்...

    RépondreSupprimer
  2. வெண்பாக் கொத்து !
    ===================

    மொழியானவள் !
    ================
    குறள் வெண்பா !

    அன்பில் முகிழ்ந்த அருந்தமிழாள் இவ்வுலகில்
    முன்னை முகிழ்த்த மொழி !

    இன்னிசை நேரிசை வெண்பா !

    அன்பில் விளைந்த அருங்கவியால் ஆன்றோரும்
    மன்புகழ் பாடி வளம்சேர்க்க - என்றென்றும்
    முன்னின்று காக்கும் மொழி!

    இன்னிசைச் சிந்தியல் வெண்பா !

    அன்பில் அணைத்தொருகை ஆடை களைந்தொருகை
    இன்பக் குளியலுடன் இன்னிசையும் தந்துவிட
    அன்னையே ஆர்த்த மொழி !

    நேரிசை வெண்பா !

    அன்பில் மலரும் அடிநெஞ்சில் தேன்சுரக்கும்
    பொன்னின் நிகராய்ப் பொலிந்திருக்கும் - என்னவளின்
    கன்னக் குழியின் கவிதை இலக்கணத்தில்
    முன்னே இருக்கும் மொழி !

    இன்னிசை வெண்பா !

    அன்பில் பிறப்பொளிரும் ஆன்ம வலம்மேவும்
    சின்னவள் மூச்சென்று செங்காந்தாள் பூத்திருக்கும்
    புன்னை வனக்குயிலும் பூபாளம் பாடிநிற்கும்
    என்னுயிரும் ஏற்ற மொழி !

    பஃறொடை வெண்பா!

    அன்பில் அகம்நிறையும் ஆயுள் அதிகரிக்கும்
    முன்பின் முடிவென்ற மூத்தோரின் - பொன்னுரைகள்
    சென்னி புகுந்தளிக்கச் சித்தம் தெளிவடையத்
    துன்னார் தவறைத் தொலைவாக்கும் ! ஔடதமாய்
    வன்மம் மறைக்கும் மொழி !

    RépondreSupprimer
  3. ஐயா வணக்கம்.
    1) வெல்லும் எழுத்தோடும் வெண்பாப் படைநடத்திச்
    செல்லுமும் எண்ணம் சுவை!

    2) வெல்லும்! பிழைமலிந்து வீழும் தமிழினத்தைக்
    கொல்லும்! பிரிக்கின்ற கூறகற்றும்! – பல்பொருளைச்
    சொல்லுமும் சீர்கள் சுவை!

    3) வெல்லும் மறத்தின் விளைநிலமாய்ப் பாட்டெழுதிச்
    செல்லும் இடமெல்லாம் சேர்ப்பிக்கும்! செந்தமிழச்
    சொல்லுண்ணும் இன்பச் சுவை!

    4) வெல்லும் விதிசெய்யும்! வாக்கு நதிபாயத்
    தொல்மரபுத் தோப்புத் துளிர்த்தோங்கும்! – கல்லும்
    கரம்பட்டுச் சிற்பக் கவியாகும் அன்பர்
    சிரங்கவியும் சொற்கள் சுவை!

    5) வெல்லும் கணையுண்டு! வீழும் மனமுண்டு!
    சொல்லில் தமிழாள் சுடருண்டு! கற்றிடவே
    மிக்க அறிவுண்டு! மேலோர் தொடர்புண்டு!
    சொக்க..வெண் பாவின் சுவை!

    6) வெல்லும் தமிழுக்காய் வீர மரபுயர்த்திச்
    செல்லும் வழியின் சிதலகற்றி – கல்லாதோர்
    கற்க வருகவெனக் கல்வி வரமளித்துச்
    சொற்சிலம் பாடா செயல்வீர! – வற்றுகின்ற
    எங்கள் தமிழ்ப்புலத்தின் ஏழ்மை விரட்டுதற்குப்
    பொங்கும் இலக்கணத்தின் போர்வாளே! – சிங்கமது
    காட்டிற் கரசென்றால் கண்காட்டு மெந்தமிழப்
    பாட்டிற் கரசான பாவலரே! – கூட்டில்‘உம்
    சூட்டில் எழுதல் சுவை.!

    தாமதம் பொறுத்தருள வேண்டும்.

    நன்றி !

    RépondreSupprimer
  4. Ce commentaire a été supprimé par un administrateur du blog.

    RépondreSupprimer
  5. Ce commentaire a été supprimé par un administrateur du blog.

    RépondreSupprimer
  6. பொண்ணின் பெருமையைப் பேசும் கவியடிகள்
    விண்ணின் உயர்வைாய் விளைந்தனவே! - மண்ணின்
    நலங்கள் நவின்றனவே! நற்றமிழ் நல்க
    உளங்கள் குடித்ததுவே ஓர்ந்து!

    RépondreSupprimer