கலைமகள் வெண்பா!
1.
வெண்டா மரைமணக்க வீற்றிருக்கும் என்தாயே!
வண்டாய்ப் பறந்து வருகின்றேன்! - கண்டாய்க்
கவிபடைக்கச் செய்வாய்! கமழ்குறள் ஏந்திப்
புவிபடைக்கச் செய்வாய் பொலிந்து!
2.
கலைகள் அனைத்தையும் கற்பிக்கும் தாயே!
அலைகள் எனத்தொடரும் ஆற்றல் - நிலையாக்கிப்
பொல்லா உலகைப் புரட்டும் எழுத்துாட்டி
எல்லாம் அளிப்பாய் எனக்கு!
3.
இன்னிசை மீட்டும் இதயத்துள் வாழ்பவளே!
என்னசை சீரினிக்க நீ..எழுவாய்! - மின்விசைபோல்
இந்த உலகின் இருளகற்ற என்னாவில்
தந்து மகிழ்வாய் தமிழ்!
4.
கண்ணுள் கமழும் கலைப்பேறே! என்தாயே!
பண்ணுள் படரும் பசுந்தேனே! - எண்ணும்
எழுத்தும் உலகெல்லாம் ஏந்தவழி செய்வாய்!
பழுத்துன் அருளைப் படைத்து!
5.
கற்றோர் உளத்துள் களிக்கின்ற கற்பகமே!
சொற்போர் அவையில் துணையிருப்பாய்! - மற்போர்
வலிமை வழங்கிடுவாய்! வையம் செழிக்கப்
புலமை வழங்கிடுவாய் பூத்து!
6.
வீணை இசைப்பவளே! வெல்லும் மறவனென்
நாணை இழுப்பவளே! நற்றாயே! - ஆணையொன்று
இட்டருள்வாய் எல்லாரும் இவ்வுலகில் ஒன்றென்றே!
தொட்டருள்வாய் ஞானச் சுடர்!
7.
துாய்மை நிறத்தவளே! தொண்டன்என் சொல்லுக்குள்
வாய்மை நிலைக்க வரம்தருவாய்! - தாய்மையொளிர்
அன்பமு துாட்டி அணிசெய்வாய்! இப்புவியை
இன்னமு துாட்டி இயக்கு!
8.
எண்ணுள் எழுத்துள் இருந்து மணப்பவளே!
மண்ணுள் உளமடம் மாய்த்திடுவாய்! - வண்ணப்
பிரிவுகளைப் போக்கிடுவாய்! பீடுடைய சீரின்
விரிவுகளை ஆக்கிடுவாய் வென்று!
9.
பச்சைப் பசுங்கொடியே! பண்பரசி உன்னருளால்
அச்சம் அனைத்தும் அகன்றதுவே! - மிச்சமிலா
வண்ணம் அறிவை வழித்துாட்டு! மண்ணோங்கும்
எண்ணம் எனக்குள் இணைத்து!
10.
கல்விக் கடலே! கலைமகளே! சொற்பொருளைச்
சொல்லித் தருகின்ற சுந்தரியே! - மல்லிகையாய்ப்
பார்மணக்கச் செய்வாய்! பணிகின்றேன்! பாட்டரசின்
சீர்மணக்கச் செய்வாய் செழித்து!
பாட்டரசர் கி. பாரதிதாசன்
22.10.2015
22.10.2015
வணக்கம்
RépondreSupprimerஐயா
கல்விக்கு அதிபதியாம் கலைமகளை
எண்ணத்தில் ஏற்றினாய் என்னுயிர் பாவினை.
மாட்சிமை கொண்ட மாதேவி புகழினை
தமிழ்மணக்க ஓதின வரிகள்
சிந்தை குளிர்ந்தது மனம்..
மிக சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள் ஐயா
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
Supprimerவணக்கம்!
கலைமகள் சீர்வேண்டிக் கட்டிய வெண்பா
மலையென நிற்கும் மனத்து!
அருமை
RépondreSupprimer
Supprimerவணக்கம்!
அருமைத் தமிழ்மொழியை அள்ளி அளித்துப்
பெருமைதரும் வல்லியைப் பேணு!
வணக்கம் ஐயா!
RépondreSupprimerவீணைய ஏந்திய வாணியை வேண்டிப் படைத்த
வெண்பாக்கள் மிகமிகச் சிறப்பாக இருக்கின்றன!.
நாமகளருளால் எல்லோருக்கும் யாவும் சிறப்பாக
அமைந்திட நானும் வேண்டுகிறேன்!
விஜயதசமி நன்நாளாம் இன்நாளில்
தங்களின் ஆசியையும் வேண்டுகிறேன் ஐயா!
Supprimerவணக்கம்!
மோனையும் வண்ண எதுகையும் மின்னிவர
வீணை யரசியை வேண்டு!
வெண்பா விருந்தொன்றை வைத்துள்ளார் பாட்டரசர்
Supprimerகண்பார்க்க வேண்டும் கலையரசி! - பண்பாட்டுப்
பொற்கவிஞர் எங்களுக்குப் பூந்தமிழ் யாப்பணியக்
கற்பிக்க நல்லருள் காட்டு!
பாட்டும் பரதமும் கூட்டும் கலைமகளைச்
சூட்டும் கவிகள் சுவைத்தேனாம்! - காட்டுமலர்
போல்தமிழைப் போற்றிப் புனைந்துள்ளீர்! உம்முடைய
நூல்தமிழை நோக்கும் உலகு!
Supprimerவணக்கம்!
நோக்கும் உலகெனும் நுண்மைக் கவிபடித்தால்
பூக்கும் மனம்முழுதும் புத்துணா்வே! - காக்கும்
கலைமகள் திருவருளால் வெண்ணிலவு காண்க
தலைமகள் சீா்கள் தழைத்து!
எனது பின்னூட்ட முதலாவது வெண்பாவில் தட்டச்சிடும்போது
Supprimerவந்த தவற்றிற்கு வருந்துகிறேன்!
//பொற்கவிஞர் எங்களுக்குப் பூந்தமிழ் யாப்பணியக்//
இங்கே .. பொற்கவிஞர் எங்களுக்குப் பூந்தமிழ் யாப்பணியைக்..
என்ற திருத்தத்தைச் சேர்த்துக்கொள்க.
நன்றி!
வற்றா நதியாக வாசமுள்ள செண்டாக
RépondreSupprimerபொற்றா மரையாள் பொழிவளுமக் - குற்றவளாய்
சொற்சுவை கூட்டி சுடரும் கவிதையெலாம்
பற்றுடன் நல்குவள் பார் !
வெகு சிறப்பான வேண்டுதல்களும் வெண்பாக்களும். மெய் சிலிர்க்க வைத்தன வார்த்தைகளின் கட்டமைப்பு கண்டு. நிறைய கற்க வேண்டுமே என்று மலைப்பாகவும் உள்ளது. மகிழ்வாகவும் உள்ளது. நீங்கள் கடல் நான் ஒரு துளியும் இல்லை.
மிக்க நன்றி ஐயா ! தொடர வாழ்த்துக்கள்...!
Supprimerவணக்கம்!
பற்றுடன் வந்து படைத்த கவி..கண்டேன்!
பொற்புடன் வாழ்த்தைப் பொழிகின்றேன்! - நற்றமிழைக்
கற்றுக் களிக்கக் கலையரசி தாள்பணிவோம்!
பெற்றுச் சிறந்திடுவோம் பீடு!
பூவில் கமழும் புதுவாசம் போல்தமிழும்
RépondreSupprimerபாவில் படைக்கின்ற பாட்டரசே - நாவில்
கலைவாணி நாளும் களித்திருப்பாள் உங்கள்
புலமைக்குள் அன்பைப் பொழிந்து !
அத்தனையும் அருமையான வெண்பாக்கள் கவிஞர் அண்ணா
இனிய விசயதசமி நல்வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் !
தம +1
Supprimerவணக்கம்!
பூக்களை நாடிவரும் ஈக்களைப் போல்நெஞ்சம்
பாக்களை நாடிப் பறந்திடுமே! - நோக்கமெலாம்
செம்மைத் தமிழான சீராளன் வாழியவே
அம்மை அருட்கடலில் ஆழ்ந்து!
RépondreSupprimerகலைமகளை வேண்டிக் கமழும் கவிதை
அலையெனப் பாயும் அகத்துள்! - மலையாய்த்
திகைத்துநான் நிற்கின்றேன்! தீட்டும் திறன்முன்
பகைத்துநான் நிற்கின்றேன் பார்!
Supprimerவணக்கம்!
சகலகலா வல்லியைச் சற்றும் கவிகள்
உலகெலாம் ஓங்கவொளி நல்கும்! - கலம்நிறை
பால்சுரக்கும் வள்ளல் பசுக்களெனக் கல்வியை..நம்
மேல்சுரக்கும் இன்பம் மிகுத்து!
வெள்ளை நிறத்தவளை வீணை இசைப்பவளை
RépondreSupprimerதுள்ளிவரச் செய்திடும் சொற்களை - அள்ளியே
வெண்பாவாய் தந்தீர்கள் வேறென்ன வேண்டுமினி
எண்ணம் சிறக்கும் இனி.
இனியென்ன வேண்டு வரங்களைத் தந்திடுவாள் கலைவாணி.
இனிக்கும் வெண்பாக்கள் என்னையும் பாட வைத்தது.
நன்றிங்க ஐயா.
Supprimerவணக்கம்!
தென்றல் நலமாகத் தேனின் சுவையாக
உன்றன் கவிதை உளமினிக்கும்! - என்நன்றி!
நல்ல தமிழ்மொழியை நாளும் படைத்திடவே
வல்ல கலைமகளை வாழ்த்து!
எத்தனை முறை படித்தாலும் திகட்டாத வெண்பாக்கள்
RépondreSupprimer
Supprimerவணக்கம்!
எண்எண் கலைதரும் ஈடில் கவிகளை
உண்..உண் ஒளிரும் உளம்!
வெண்பா அருமை ஐயா...
RépondreSupprimerசிறந்த பாவரிகள்
RépondreSupprimerஅருமையான எண்ணங்கள்
http://www.ypvnpubs.com/
அய்யா வணக்கம்...நான் ராகசூர்யா...( கவிஞர் சுவாதியின் மகள்) உங்கள் பதிவுகளில் நான் கருத்திட முடியாது...நான் இந்த வலை தளம் வந்தேன் என்று சொல்ல வே இது. என் வலை தளம் வாருங்கள்...( நலம்மா? பிரான்ஸ் நலமா? புதுகைக்கு வந்தது போல் சென்னைக்கும் எங்கள் இல்லம் வருவீர்களா?)
RépondreSupprimerதொண்டன் என் சொல்லுக்குள் வாய்மை நிலைக்க -------நல் எண்ணத்துக்கு நல் அருள் கிடைக்கும் .வாழ்க! வளமுடன்!
RépondreSupprimerதொண்டன் என் சொல்லுக்குள் வாய்மை நிலைக்க ------நல் உள்ளம் .....உம் வாக்கு நிற்கும் .
RépondreSupprimerதொண்டன் என் சொல்லுக்குள் வாய்மை நிலைக்க ------நல் எண்ணம் -----வாக்கு பலிதமாகும் .வாழ்க ! வளமுடன்!
RépondreSupprimerதொண்டன் என் சொல்லுக்குள் வாய்மை நிலைக்க ----நல்ல சிந்தை ---சிந்தை போல் வாழி
RépondreSupprimer