lundi 14 décembre 2015

குன்றேந்திக் காப்பாய்!




குன்றேந்திக் காப்பாய்!

இன்பம் அளிக்க இறங்கிவரும் நல்லமுதம்
துன்பம் கொடுத்துத் தொடருவதேன்? - அன்றுலகைக்
குன்றெடுத்துக் காத்தவனே! கோகுலத்து நாயகனே!
இன்றெடுத்துக் காப்பாய் எமை!

கொட்டும் மழையென்று கூறுவதால் தேள்போன்று
கொட்டும் துயரைக் கொடுப்பதுவோ? - கட்டின்றி
நீர்புகுந்து ஓங்குவதோ? நின்னைச் சரணடைந்தேன்!
ஊர்புகுந்த ஊழை ஒழி!

தழைத்தோங்கும் தண்மைநலம் தந்துவக்கும் நன்னீர்
இழைத்தோங்கும் பேரின்னல் ஏனோ? - அழைத்தோங்கும்
என்குரல் கேட்காமல் எங்குற்றாய் ஒண்கண்ணா!
உன்னருள் வேண்டும் உடன்!

தாயென வந்து தழைப்பூட்டும் தண்மழை
பேயென ஆட்டம் பிடித்ததுமேன்? - மாயவனே!
ஆநிரை காத்திட அன்று விரைந்தனையே!
பூநிறை துன்பத்தைப் போக்கு!

வள்ளல் மழையின்று வாட்டுவதேன்? எம்மண்ணின்
உள்ளம் உடைத்தே ஒழுகுவதேன்? - வெள்ளத்துள்
இல்லம் முழுகுவதோ? என்றன் எழிற்கண்ணா!
அல்லல் அனைத்தும் அகற்று!

பொல்லார் புகுந்து புரட்டும் அரசியலால்
நில்லா திறங்கும் நெடுமழையே! - நல்லார்
குரல்கேட்(டு) உடன்வரும் கோவிந்தா! எங்கள்
இருளோட்ட வா..வா எழுந்து!

கொள்ளை அடிப்போர் குவிந்துள்ள காரணத்தால்
பிள்ளை மனம்நீங்கிப் பெய்கிறதோ? - வெள்ளத்துள்
பள்ளி கிடக்கும் பரம்பொருளே! எம்துயரை
அள்ளி உடனே அகற்று!

ஓதும் மறையாளர் சூது மனங்கொண்டு
மோதும் உணர்வேந்தி முன்னின்றார்! - போதுமெனப்
பொங்கிப் பொழிந்ததுவே? புட்கொடி நாயகனே!
எங்கள் துயரை எடு!

பண்பட்டு வாழ்ந்தவர் புண்ணுற்றுப் போனதனால்
விண்கெட்டுத் துன்பம் விளைந்ததுவோ? - கண்கெட்டு
நிற்கின்றோம்! மாதவனே! நின்னிடத்தில் எம்முயிரை
விற்கின்றோம் காப்பாய் விரைந்து!

தொடரும் பெருமழை தொல்லை அகலச்
சுடரும் கதிரொளி சூழச் - படர்பசுமை
எங்கும் செழித்தொங்க என்னுயிர் மாயவனே!
இங்குன் அருளை எழுது!

14.12.2015

10 commentaires:

  1. ஐயா வணக்கம்.

    எமைக்காக்க வாவென்று இரங்கி அழைக்க
    நமைக்காக்க வாரானோ நாதன்? – சுமைதுன்பம்
    போக்க வருகின்ற பார்த்தன் விரைந்தோடி
    நீக்கவரு கின்றான் நிலை!

    ஒழித்தல் பிறவித்தீ ஒண்ணருளால் வல்லான்
    செழிக்க நலம்நல்குஞ் செம்மல் – அழிப்போம்நாம்
    வெள்ளத் துயரணைத்தும் வேகத் தினில்விலக
    உள்ளத் துயிரணைப்பா னோடு !

    உடன்வந்து உறையும் உயிர்போல்வன் கண்ணன்
    இடர்வந்து நாம்சாய இங்கே – படவென்று
    விட்டுப் புறப்படான்! வீழ்த்தவரு வான்துயரைச்
    சுட்டுப் பொசுக்கும் சுடர்!

    போக்கு வரத்தாகும் பொய்மைப் பிறவியழி
    தீக்கன லாகுந் திருவருளோன்! – காக்கவரு
    கின்றான்தன் கன்றேநாம் என்றேவாழ் கின்றோமால்
    நன்றேதான் என்றும் நமக்கு!

    அகற்ற அகந்தையெனும் ஆழியலை ஓயத்
    திகட்டாப் பெருவிருப்புந் தீர – புகட்டுமவன்
    கீதத்தை நாதத்தை வேதத்தை ஏதந்தீர்
    பாதத்தை யேநத்திப் பார்.

    எழுந்தும் பழவினை என்னும்பாழ் சேற்றில்
    அழுந்திக் கிடக்கின்ற ஆன்மா – வழுத்தும்நா
    ஆகவினை சாகுவடி வாகுமவ னேகுமுயிர்
    தாகமெலாம் போகுந் தணிந்து.

    எடுக்கும் திருப்பாதம் என்னுள்ளே வைப்பாய்
    கெடுக்கும் மதிசாய் கதிரே! – கொடுப்பாயோ
    எல்லாம் இனிதென்றே ஏற்கும் மனம்?‘அஃதே
    கொல்லும் துயர்கொல் கொடுக்கு!

    விரைந்து வருகவிவ் வையத் துயரம்
    கரைந்த பனியாகிக் காண – இரையாகச்
    சிக்கிப்போம் மக்கள்துன் பத்தைசாய் வித்தேயுன்
    பக்திக்குள் ளத்தைப்ப டுத்து.

    எழுதி உனைவேண்டி எந்தமிழ்ப் பாட்டில்
    உழுத மரபுழவி னூடே - பழுதெல்லாம்
    ஓட்டவுனைத் தீட்டிதமிழ் மீ்ட்டியிசை கூட்டுமெங்கள்
    பாட்டரசர் வேட்டலையும் பார்!

    நன்றி.

    RépondreSupprimer
  2. நல்லதே நடக்க அவன் அருள் புரியட்டும்.....

    RépondreSupprimer
  3. விரைவில் சோதனைகள் தீரட்டும் ஐயா...

    RépondreSupprimer
  4. வணக்கம் ஐயா!

    கண்ணனை வேண்டிக் கரைந்தீர் ! துயர்தீர
    வெண்பா சமைத்து விருந்தளித்தீர் - உண்டுமகிழ
    உள்ளுறைவான் வெள்ளழிவின் ஊழல் தடுத்திடுவான்
    உள்ளம் நெகிழ உவந்து !

    ஆஹா அருமை அருமை! பாவலர்கள் இருவரும் படைத்த வெண்பாக்கள் நெஞ்சை நெகிழ வைத்தாலும், அவை எல்லாம் அமுதே உண்டு மகிழ்ந்தேன்.சொக்கிப் போனேன் ஐயா பார்த்து அச் சுவையில். இருவர்க்கும் என் மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும். எனக்கு தகுதி இல்லைதான் பாராட்ட, இருந்தாலும் ஏற்றுக் கொள்ளுங்கள்.

    எண்ணக் கருவெலாம் ஏத்தும் புகழ்மண்ணி
    லென்றும் நிலைக்க வெழில்!

    RépondreSupprimer
    Réponses
    1. எண்ணக் கருவெல்லாம் ஏத்தும் புக(ழ்ழென்றும்
      மண்ணில் நிலைக்க மகிழ்வு!

      ஐயா! மன்னிக்கவும் தவறு கண்டு இப்படி இட்டேன்.பொறுத்தாற்றுக.

      Supprimer
  5. உண்மையே.
    அந்தக் கோகுலத்தின் மழை வெள்ளத்தில் இருந்து மக்களைக் காத்த கண்ணன் இன்றும் வந்து
    சென்னை கடலூர் மக்களைக் காப்பது ஒன்றே
    தீர்வு.
    மனித யத்னங்ககள் வெற்றி பெறும் எனத் தொடரவில்லை.
    சுப்பு தாத்தா.
    www.subbuthatha72.blogspot.com

    RépondreSupprimer
  6. வணக்கம்
    ஐயா
    இயற்கை அன்னையை உருகிப்பாடிய பாடல் சிறப்பு படித்து மகிழ்ந்தேன் த.ம 9
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    RépondreSupprimer
  7. வானிலிருந்து - கடவுள்
    தன் திருவிளையாடலைக் காட்ட
    தரையிலிருந்து - மக்கள்
    துயருறும் நிலை தொடராமலிருக்க
    கடவுளைத் தான் வேண்டுகிறேன்...

    போதும் போதும் கடவுளே! - உன்
    திருவிளையாடலை நிறுத்தினால் போதுமே!
    http://www.ypvnpubs.com/2015/12/blog-post_6.html

    RépondreSupprimer
  8. கொட்டும் மழையும் குறையும் குலம் மீண்டும் செழிக்கும் தங்கள் இனிய பாக்கள் கண்டபின்னே ! அருமையான பாக்கள் ஐயா படித்தேன் இரசித்தேன் வாழ்க வளமுடன் தம +1

    RépondreSupprimer

  9. கொட்டும் மழைதன் கொடுமை அடங்கிடவே
    கட்டும் கவிகள் எனைக்கவ்வும்! - பட்டதுயர்
    யாவும் தொலைய எழிற்கண்ணன் நற்பேரைக்
    கூவும் மனமாம் குயில்!

    RépondreSupprimer