முனைவர் தமிழண்ணல் கையறுநிலை
வல்லதமிழ் ஓங்க வரலாற்றை நன்காய்ந்து
நல்லபுகழ் நுால்களை நல்கியவர்! - வெல்லுதமிழ்
அண்ணல் மறைந்திட்டார்! ஐயகோ! அன்பருளக்
கண்ணீர்க் கடலெனக் காண்!
ஓங்கும் தமிழணிக்கே ஒப்பில் தலைமையினைத்
தாங்கும் மறவர் தமிழண்ணல்! - ஈங்கெழா
நீடுதுயில் கொண்டதுமேன்? ஐயோ!தன் நெஞ்சுடைந்து
பாடுகுயில் தேடும் பறந்து!
ஆழ்ந்த உரையளித்துத் தாழ்ந்த நிலைதுடைத்துச்
சூழ்ந்த பகையொழித்துத் தொண்டீந்தார்! - வீழ்ந்துயிர்
அக்கக்காய் ஆகிடவே அய்அய்யோ எங்குற்றார்?
இக்கெட்டில் வாடும் இனம்!
அயற்சொல் அகற்றிடுவீர்! அந்தமிழ் நம்மின்
உயிர்கொள் எனவுரை ஓர்ந்தார்! - உயர்வனைத்தும்
தந்த தமிழண்ணல்! எந்த உலகுற்றார்?
சிந்தை அழுமே சிதைந்து!
தாய்மொழிக் கல்வி தழைத்திட வேண்டியே
ஓய்வின்றி நாளும் உழைத்தவர்! - சாய்வின்றி
வாழும் வழியளித்த வள்ளல் பிரிந்ததுமேன்?
சூழும் இருளே தொடர்ந்து!
கோயில் தலமெங்கும் கோலத் தமிழ்மணக்க
வாயில் வடித்த தமிழண்ணல்! - சேயவரைத்
தாயிங்குத் தேடுகிறாள்! போயுள்ள ஊரெதுவோ?
வாயிங்குக் கத்தும் வறண்டு!
உண்ணா துறங்கா துழைத்தவர்! எந்நாளும்
மண்ணார் மடமையை மாய்த்தவர்! - திண்ணமுடன்
இன்னும் பல..பகைவர் இங்குள்ளார்! ஏன்பிரிந்தார்?
மன்னும் துயரால் மனம்!
அண்ணல் பிரிவாலே இன்னல் பலகோடி
நண்ணும் நமதினமே! நற்றாயே! - திண்ணமுடன்
பொன்னை நிகர்த்தகவி பூத்தவர் போனதுமேன்?
என்னையினிக் காப்பார் எவர்?
பொன்னுால் அடைந்திடும் பூந்தமிழ் வாணரை!
நன்னுால் அடைந்திடும் நாவலரை! - தொன்னுால்
அடைந்திடும் துாயவரை! அண்ணலே நானிங்[கு]
அடைந்திடும் பாதை அறை!
பண்கள் அடைந்திடும் பாவலரை! பைந்தமிழ்
எண்கள் அடைந்திடும் ஏற்றவரை! - மண்ணுலகில்
நானெவரை நாடிடுவேன்? அண்ணலே மீள்பிறக்க
வானவரை வேண்டும் மனம்!
31.01.2015
வணக்கம்
RépondreSupprimerஐயா
இழப்பு கவலையிலும் கவலை..விட்டுச்சென்ற தடயங்கள் எப்போதும் பெயர் சொல்லும் ஐயா... த.ம 2
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம் ஐயா!
RépondreSupprimerமுனைவர் தமிழண்ணல் மறைவு குறித்தும்
அவர்தம் பெருமைகளையும் மனம் பதைக்கப் படைத்த
தங்கள் வெண்பாக்களால் அறிந்தேன்!
மனம் கனத்து வருந்துகின்றேன்!..
அவர் மறைவாற் துயருறும் அவர் குடும்பம் மற்றும்
அன்பர்கள் அனைவருக்கும் என் ஆழ்ந்த இரங்கல்கள்!
வானவரை வேண்டி வடிக்கும் கவிகண்டேன்
RépondreSupprimerநானவரைக் காணவில்லை! நற்குருவாய் - ஆனவரை
ஆன்றோரும் சொல்ல அறிகின்றேன் ! அண்ணலார்
ஆன்மா பெறட்டுமமை தி !
நல்ல வேண்டுதல். நன்றி. மகாமகம் காணும் 2016இல் ஐந்தாமாண்டு நிறைவு பெறும் எனது முதல் வலைப்பூவைக் காண அழைக்கிறேன். http://ponnibuddha.blogspot.com/2016/01/blog-post.html
RépondreSupprimer