குறள்
வெண்செந்துறை!
1.
பன்மொழி கற்றுப் பயனறும் வாழ்வு
தன்மொழி இலையேல் துன்னிழி வெய்தும்!
2.
ஊழ்வகை
என்றே உட்கார்ந் திருந்தால்
வாழ்வகை யாவும் வற்றிப் போகும்!
3.
என்னிறை ஒன்றே ஏற்றம் என்று
வன்னிறை கொண்டால் மண்ணிறை மாயும்!
4.
அன்பின் சிறந்த அரும்பொருள் உலகில்
என்றும் இலையென நன்றே உணர்க!
5.
தாய்மை
உலகைத் தாங்கும் சக்தி!
வாய்மை
உயிருள் ஓங்கும் சக்தி!
6.
ஆல்போல் தழைக்கும்! அறுகாய்ச் செழிக்கும்!
பால்போல் தூய்மை படைத்த மனமே!
7.
உன்னுள் அறங்கள் ஓங்கி ஒளிர்ந்தால்
பொன்னுள் மணியாய்ப் பொலியும் வாழ்வே!
8.
ஊக்கம்
உன்றன் உறவெனக் கொண்டால்
ஆக்கம்
உன்றன் அடிதொழும் என்பேன்!
9.
ஒழுக்கம் உன்றன் உயிரெனக் கொண்டால்
அழுத்தும் துயரம் அடியோ டோடும்!
10.
விண்ணொளி போன்று விரிநிலை யுற்றுப்
பண்ணொளி மின்னும் பைந்தமிழ் மொழியே!
இலக்கண விளக்கம்!
ஓரடியில் நான்கு சீர்கள் முதல் எத்தனைச் சீர்கள்
வேண்டுமானாலும் வரலாம்.
மற்றோர் அடியும் அதே அளவு அமைந்திருக்க வேண்டும்.
இரண்டடியும் ஓரெதுகை பெற்றிருக்க வேண்டும்
நாற்சீரடியாயின் 1, 3 ஆம் சீர்களில் மோனை அமைய வேண்டும்.
சீர்களுக்கள் எந்தத் தளையும், எவ்வகைச் சீரும் வரலாம்.
குறள் வெண் செந்துறை விழுமிய பொருளும் ஒழுகிய ஓசையும் பெற்றிருக்க
வேண்டம். இவ்வாறு இரண்டடியாய்த் தம்முள் அளவொத்து வருவதை வெண்செந்துறை என்று
கூறுவர். இதற்கு வெள்ளைச் செந்துறை என்றும் பெயருண்டு.
03.11.2015
அருமை ஐயா...
RépondreSupprimerவணக்கம்!
Supprimerவருகைக்கும் வாழ்த்துக்கும் வண்ணமலர் துாவி
இருகை குவித்தேன் இணைத்து!
I know this site provides quality depending content and extra information, is there any other web site
RépondreSupprimerwhich presents these kinds of information in quality?
Take a look at my blog post :: The Walking Dead Road to Survival Cheats ()
அருமை...அருமை....
RépondreSupprimerவிண்ணொளி போன்று விரிநிலை யுற்றுப்
பண்ணொளி மின்னும் பைந்தமிழ் மொழியே!
மிக மிக அருமை...
'வெண்செந்துறை' பற்றி மிக எளிமையாக விளக்கம் கொடுத்தது அருமை.. அறிந்துகொண்டேன்.....
நன்றி..
எனது வலையில் இன்று: உச்சரிப்பு பிழை இல்லாமல் ஆங்கிலம் வாசிக்கும் மென்பொருள்
Supprimerவணக்கம்!
தங்கம் பழனியார் தந்த கருத்துக்கள்
அங்கம் புகுந்தன ஆழ்ந்து!
வணக்கம் கவிஞர் அண்ணா !
RépondreSupprimerவற்றிப் போனால் மனத்தின் வலிமை
பற்றிப் பிடிக்கும் பயத்தின் கரங்கள் !
தீராக் கவலையைத் தீர்க்கும் மருந்தாம்
சேராப் பொருளைச் சிந்தையில் அறுத்தல் !
தன்னிறை வின்றித் தவிப்பார் வாழ்வில்
பொன்னிறை கண்டும் புகழினைச் சேரார் !
பாரில் விதைத்த பாவம் பிறப்பில்
நீரில் கரைத்த நெய்யாய் மிதக்கும் !
நெஞ்சில் துணிவை நிறுத்திக் கொண்டால்
அஞ்சும் வலிகள் அணைத்திட எம்மை !
அகழ்ந்திட ஊறும் அருந்தும் நீராய்ப்
புகழ்ந்திட மாறும் பொல்லார் மனமும் !
உழவன் வலியை உணர்ந்தே அவனைத்
தொழவுன் பசியும் தொலைந்தே போகும் !
வாழும் கலையினை வகுத்தவர் தொடர்ந்தால்
தாழும் நிலையினைத் தடுத்திடும் மனமே !
உழைக்கும் கரத்தில் ஒட்டிய வலியை !
அழைக்கும் குரலால் அழித்திடும் மழலை !
பொல்லாக் குணமும் பொறுமையிலாச் செயலும்
செல்லாப் பணமும் சிறுமையும் ஒன்றே !
அழகான உங்கள் குறள் வெண்செந்துறை போல
நானும் முயன்றேன் முடிந்தவரை தங்கள் பாக்கள் அத்தனையும் மிக அருமை
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
தம +1
Supprimerவணக்கம்!
சிந்தனை மின்னும்! சிறப்பெல்லாம் தாம்மின்னும்!
செந்துறை மின்னும் செழித்து!
வணக்கம் ஐயா!
RépondreSupprimerஅழகிய குறள் வெண்செந்துறைகளும் அதன் இலக்கண விளக்கமும் கண்டேன்.
மிக அருமை! நானும் முயன்றதை இங்குத் தருகின்றேன்!
தவறெனில் சுட்டுங்கள்! மிக்க நன்றியுடன் வாழ்த்துக்கள் ஐயா!
செந்தமிழ் கற்றால் சிறக்கும் வாழவே!
அந்தமில் இன்பம் அளிக்கும் நன்றே!
ஒப்பில் உயர்வருள் ஒழுக்கம் தன்னை
எப்பொழுதும் உன்றன் உயிரென ஓதும்!
அன்னைத் தமிழுடன் ஆங்கிலம் சேர்ப்பதோ?
உன்னை இழிவாய் உரைக்கும் உலகு!
ஆங்கிலம் கலந்ததே அன்பு மொழியை
ஏங்கிடச் செய்பவர் இங்கே தமிழரா?
தேயும் நிலையைத் தேடி அழிப்பீர்!
பாயும் புலியாய்ப் பகையை வென்றே!
Supprimerவணக்கம்!
சொல்லிய வண்ணம் சுடரும் கவியைந்தும்
மல்லிகை கொண்ட மணம்!
குறள் வெண்செந்துரை..... அனைத்து பாடல்களிலும் அருமையான கருத்துக்கள்.
RépondreSupprimerஎன்ன..... அகவலின் இரு வரிகள் போல் உள்ளது.
சீராளன் அவர்களின் படல்களும் அருமை.
Supprimerவணக்கம்!
வெண்புறா வந்து விளைத்த கருத்தேந்திக்
கண்ணுலாப் போகும் களித்து!
செந்துறைப் பாட்டின் சிறப்பினைக் கண்டுவந்தேன்!
RépondreSupprimerநந்தமிழ் நல்கும் நலமறிந்தேன்! - சிந்தனையுள்
நிற்கும் தமிழேந்தி! நெஞ்சம் நெகிழ்ந்தாடிக்
கற்கும் புகழேந்தி காண்!
Supprimerவணக்கம்!
வெண்பா விருந்தை வியக்கப் படைக்கின்ற
நண்பா! தமிழ்ச்செல்வா! நற்றமிழ்த் - தொண்டா!சீர்
கற்கும் தமிழேந்திக் கன்னல் கவியென்னுள்
நிற்கும் புகழேந்தி நீ!