samedi 2 novembre 2024

கலித்தாழிசை - 1

 


கலிப்மேடை - 58

கலித்தாழிசை - 1

 

அடியெனைத் தாகியும் ஒத்துவந் தளவினில்

கடையடி மிகுவது கலித்தா ழிசையே

[யாப்பருங்கல விரித்தி – 87]

 

அடிவரையறை சீர்வரையறை இன்றிக் கடையடி நீண்டு வருவது கலித்தாழிசையாகும். ஒரு பொருண்மேல் மூன்றாய் வருவனவற்றைக் கலியொத்தாழிசை என்றும், ஒன்றாயும் இரண்டாயும் மூன்றின் மிக்கும், மூன்றாய்ப் பொருள் வேறாயும் வருவனவற்றைக் கலித்தாழிசை என்றும் பெயர் வேறுபடுத்திச் சொல்வாரும் உளர்.

 

கலித்தாழிசை என்ற பெயரே இப்பாடலை இசைப்பா என உணர்த்தும். அடி வரையறை இல்லாமல் இரண்டடி முதல் எத்தனை அடிகளாலும் இப்பாடல் அமையும். ஓரடியில் எத்தனைச் சீர்களும் வரலாம் [நான்கு சீரடிகளே முன்னோர் இலக்கியங்களில் பெரும்பான்மையாக வந்துள்ளன] ஈற்றடி மற்ற அடிகளை விட ஒரு சீர் முதல் பல சீர்கள் மிகுந்து வரும். [ஈற்றடி முன்னடிகளை விட இரட்டிப்பாய் அமைந்த பாடல்களே இலக்கியங்களில் பெரும்பான்மை] மற்ற அடிகள் அளவொத்தும் வரும். அளவொவ்வாமலும் வரும். இறுதியடியின் முற்பாதியும் பிற்பாதியும் இறுதிப் பகுதியில் மடக்காக வரும். இடையடிகிளில் முற்பகுதிகள் மடக்காக வருதலும் உண்டு. வெண்டளையாலும் பிறதளையாலும் இப்பாடல் அமையும்.

 

ஈற்றடி மிக்கு ஏனையடி ஒத்து வருவன எல்லாம் சிறப்புடையக் கலித்தாழிசை எனவும், ஈற்றடி மிக்கு  ஏனையடி ஒவ்வாது வருவன எல்லாம் சிறப்பில்லாக் கலித்தாழிசை எனவும் கூறப்படும்.

 

சிறப்புடைய கலியொத்தாழிசை, சிறப்பில்லாத கலியொத்தாழிசை, சிறப்புடைய கலித்தாழிசை, சிறப்பில்லாத கலித்தாழிசை என்னும் இவற்றைச் சிறப்புடைய தளை ஏழு, சிறப்பில்லாத தளை ஏழு என்ற பதினான்கோடு உறழக் கலித்தாழிசை விரி ஐம்பத்தாறாகும்.

 

கலித்தாழிசை – 1

 

வெண்டளையால் வந்த கலித்தாழிசை

 

பெரியவனை மாயவனைப் பேருலகம் எல்லாம்

விரிகமல உந்தியுடை விண்ணவனைக் கண்ணும்

திருவடியும் கையும் திருவாயும் செய்ய

கரியவனைக் காணாத கண்ணென்ன கண்ணே !

……கண்ணிமைத்துக் காண்பார்தம் கண்ணென்ன கண்ணே !

[சிலப்பதிகாரம் ஆய்ச்சியர் குரவை]

 

தேகம் உருகுதடி! தென்றல் கொதிக்குதடி!

தாகம் பெருகுதடி! தாக்கி வதைக்குதடி!

காகம் கரையுதடி! காலை விடிவதுமேன்?  

மோக உணவூட்டும் மூக்கென்ன மூக்கோ?

……முட்டி யெனைச்சாய்க்கும் மூக்கென்ன மூக்கோ?

[பாட்டரசர்]

 

இது வெண்டளையால் அமைந்த நாலடிப் பாடல்தான். நான்காமடி மற்ற அடிகளைவிட நீண்டிருப்பதால் நடுவில் துணித்து ஐந்தாம் அடிபோல் அமைக்கப்பட்டுள்ளது.  

 

முதல் மூன்றடிகளும் நான்கு சீர்களைப் பெற்றன. நான்காமடி எண்சீர்களைக் கொண்டது. நான்கடியும் ஓரெதுகை பெற்றுவரும். நாலாமடியின்  முதற்சீருக்கு ஏற்ற மோனை ஐந்தாம் சீரில்வரும். முன்னுள்ள மூன்றடிகளில் ஒன்று மூன்றாம் சீர்களில் மோனை வரும்.   இறுதியடியின் முற்பாதியின் இறுதிச்சீர்க்கும் பிற்பாதியின் முதற்சீர்க்கும் வெண்டளை கட்டாயமில்லை. [கண்ணே – கண்ணிமைத்து]

 

இறுதியடியின் முற்பாதியும் பிற்பாதியும் இறுதிப் பகுதியில் மடக்காக வரும். [கண்ணென்ன கண்ணே] 

 

விரும்பிய பொருளில் இவ்வகைக் கலித்தாழிசை ஒன்று பாடுபாடு அன்புடன் வேண்டுகிறேன.

 

இலக்கணக்குறிப்பு

 

அடியெனைத் தாகியும் ஒத்துவந்து அளவினில்

கடையடி மிகுவது கலித்தா ழிசையும்

 

[இலக்கண விளக்கம் – 739]

 

அந்தடி மிக்குப் பலசில வாயடி

தந்தமில் ஒன்றிய தாழிசை யாகும்

 

[காக்கை பாடினியார்]

 

அந்தம் அடிமிக்கு அல்லா அடியே

தந்தமுள் ஒப்பன கலித்தா ழிசையே

 

[சிறுகாக்கை பாடினியார்]

 

ஈற்றடி  மிக்களவு ஒத்தன வாகிப்

பலவும் சிலவும் அடியாய் வரினே

கலிப்பா இனத்துத் தாழிசை யாகும்

 

[அவிநயம்]

 

அடிபல ஆகியும் கடையடி சீர்மிகின்

கடிவரை இல்லை கலித்தா ழிசையே

 

[மயேச்சுரம்]

 

அடிவரை யின்றி அளவொத்து அந்தடி நீண்டிசைப்பின்

கடிதலில் லாக்கலித் தாழிசை யாகும்

 

[யாப்பருங்கலக் காரிகை – 34]

 

ஈரடி யாதி எனைத்தடி யானும்வந்து ஈற்றில்நின்ற

ஓரடி நீளின் கலித்தாழிசை

 

[வீர சோழியம்]

 

கலித்தா ழிசையே கடையடி மிக்குமற்று

அடியெனைத் தாகியும் அளவொத்து ஒவ்வாது

ஒருமூன்று அடுக்கியும் ஒன்றுமாய் வருமே

 

[தொன்னுால் விளக்கம் – 245]

 

இரண்டடி யாய்ஈற்றடி நீண்டு இசைப்பது

கலித்தா ழிசையெக் கருதப் பாடுமே

 

ஒருபொருள் மேல்மூன் றடுக்கி யிரண்டடி

யாக வருவஃது அதன்சிறப் பாகும்

 

[முத்துவீரியம் – 48, 49]

 

பாட்டரசர் கி. பாரதிதாசன்

தலைவர்

கம்பன் கழகம் பிரான்சு

தொல்காப்பியர் கழகம் பிரான்சு

உலகத் தமிழ்ச் சிறகம்

பாவலர் பயிலங்கம்

01.11.2024

dimanche 27 octobre 2024

சாற்றுகவி

 


திருமால் கோயில்கள் நுாலுக்குச்

சாற்றுகவி

 

திருமால் அழகன் பெயரோடு

       சிறந்து விளங்கும் திருத்தளங்கள்

அருளைப் பொழிந்தே அனைவர்க்கும்

       அழகாய் வழங்கும் பலவளங்கள்!

பொருளும் பொன்னும் பொலிந்திடவே

       புனைந்தார் கவிஞர் இளமதியார்! 

திருவும் கலையும் சேர்ந்திடவே

       செய்த இந்நுால் புகழ்சூடும்!

 

நுாற்றெட் டென்னும் திருப்பதிகள்

       நுண்மாண் கலையின் சிறப்போடு

போற்றும் வண்ணம் நம்நாட்டில்

       பொலியும் அழகு கூடங்கள்!

ஏற்ற பெருமைக் கீடேதாம்?

       இசைக்கும் தமிழுக் கிணையேதாம்?

சாற்றி யானும் மகிழ்கின்றேன்!

       தரணி கற்றுப் பயன்சூடும்!

 

கோயில் தொன்மை வரலாற்றைக்

       கொள்கைத் தமிழர் பண்பாட்டை

வாயில் வண்ண வடிவத்தை

       மனத்தைக் கவரும் பேரழகைத்

தாயின் பாயின் தன்மையதாய்த்

       தந்த கவிஞர் இளமதியார்

வேயின் வாணன் திருவருளால்

       மேலும் பன்னுால் தீட்டுகிவே!

 

வெண்பாப் புலவர் வரிசையிலே

       வெற்றி பெற்ற இளமதியார்

பெண்பால் புலவர் பல்லோரின்

       பெருமை யாவும் உற்றாரே!

பண்பால் அன்பால் மனமொன்றிப்

       படைத்த இந்நுால் கற்போர்க்குக்

கண்..பார் காட்சி அத்தனையும்

       கடவுள் அருளை உணர்த்திடுமே!

 

வண்ண வண்ணக் கோலமென

       வடிவாய் மின்னும் வெண்பாக்கள்

எண்ண வெண்ணப் பலகோடி

       இன்ப நல்கும்! நலஞ்சேர்க்கும்!

உண்ண வுண்ணத் தெவிட்டாத

       உயர்ந்த தமிழை நாடோறும்

பண்ணப் பண்ணப் மொழியோங்கும்!

       பாவம் யாவும் நமைநீங்கும்! [199]

 

26.10.2024


கவிஞர் தே. சனார்த்தனனர்

 


அருட்சுடர் அந்தாதி நுாலுக்குச் சாற்றுகவி

 

மரபிலே பாட வல்ல

       மன்னராய்ப் புகழைப் பெற்ற

தரந்தரும் தமிழைக் கற்ற

       சனார்த்தன கவிஞா் இந்நாள்

பொருட்சுவை மிக்க வாறும்

       புலவர்கள் போற்று மாறும்

அருட்சுடர் அந்தா தித்தேன்

       அருமையாய் அளித்திட் டாரே!

 

வள்ளலார் வகுத்த வாழ்வை

       மணந்திடும் மா..மா காயில்

உள்ளமே உருகும் வண்ணம்

       உயர்தமிழ் செழிக்கும் வண்ணம்

தெள்ளிய முறையில் யாத்தார்

       தே.சனார்த் தனனார்! இங்குப்

பள்ளமும் மேடும் இல்லாப்

       பாதையைப் படைத்தார் நன்றே!

 

பண்பிலார் உற்ற வாழ்க்கை 

       பாரினில் பாழாம் என்றார்!

அன்பிலார் உற்ற வாழ்க்கை 

       அதனினும் கேடாம் என்றார்! 

இன்னுயிர்க் காக வென்றும்

       இதயமே கொடுத்து நின்ற

பொன்னிகர் வடலுார் வள்ளல்

       புகழ்நெறி போற்று வோமே!

 

வாடிய பயிரைக் கண்டு

       வாடிய நெஞ்சர்! வள்ளல்

பாடிய பாக்கள் யாவும்

       பைந்தமிழ் யாப்பைக் காக்கும்!

தேடிய செல்வ மாகத்

       திருவருட் பாவைக் கொள்வீர்!

நாடிய வினைகள் நீங்கும்!

       நற்றவச் சோதி யோங்கும்!

 

விடுதலை வீரர்! சந்த

       வியன்கவி வாணர்! வாழ்வின்

தடுநிலை யாவும் வெல்லத்

       சனார்த்தனர் நன்னுால் தந்தார்!

சிடுநிலை உள்ளம் மாறிச்

       சில்லெனும் தண்மை மேவிப்

படர்நிலை இன்பம் கூடும்!

       பற்றுடன் இந்நுால் கற்போம்!

 

அருட்சுடர் எனுமந் தாதி

       அகமுறக் கற்றால் போதும்

வருமிடர் முற்றும் மாறி

       வனமென வாழ்க்கை பூக்கும்!

பொருள்படர் கவிதைக் குள்ளே

       புகழ்படர் வழிகள் கண்டேன்!

இருள்படர் நெஞ்சே கற்பாய்

       இறைதொடர் இந்நுால் காட்டும்!

      

26.10.2024

நிறைமதி நீலமேகம்

 


பாவலர்மணி நிறைமதி நீலமேகம்

பிறந்தநாள் வாழ்த்து!

 

நெஞ்சுறும் தமிழை வேண்டி

      நிறைமதி நீல மேகம்

பஞ்சுறும் மென்மை மிக்க

      பாக்களை நன்றே செய்தார்!

விஞ்சுறும் ஆற்றல் ஓங்கி

      விளைந்துள அகவை நன்னாள்

மஞ்சுறும் சீர்கள் பெற்று

      வளமுடன் வாழ்க! வாழ்க!!

 

நீதியைத் தலைமேல் சூடி

      நிறைமதி நீல மேகம்

சோதியை அகத்துள் ஏற்றிச்

      சுடர்மிகு மேடை கண்டார்!

சாதியைப் போக்கும் எண்ணம்

      சமத்துவம் பூக்கும் வண்ணம்

ஆதியை ஆழ்ந்து கற்றார்

      அறிவொளி சூழ்க! சூழ்க!!

 

நிகரிலா மரபைக் கற்று

      நிறைமதி நீல மேகம்

மிகுபலாத் தோப்பைப் போன்று

      விளைந்திடும் புலமை பெற்றார்!

பகையிலா உலகம் வேண்டும்!

      பசியிலா உயிர்கள் வேண்டும்!

புகழ்விழா நுால்கள் தீட்டிப்

      புவியினை வெல்க! வெல்க!!

 

நிழற்றரும் மரத்தை ஒத்த

      நிறைமதி நீல மேகம்

குழற்றரும் இசையைக் கூட்டிக்

      குயிற்றரும் இன்பம் தந்தார்!

எழற்றரும் ஊக்கம், வாழ்விற்[கு]

      எழிற்றரும் ஆக்கம் இட்டார்!

சுழற்றரும் காற்றாய் என்றும்

      தொடர்நலம் காண்க! காண்க!

 

நிதிதரும் குடிக்கண் தோன்றி

      நிறைமதி நீல மேகம்

ததிதரும் குளிர்ச்சி யாகத்

      தமிழ்தரும் மாட்சி யுற்றார்!

சுதிதரும் இனிமை, நன்றே

      சுவைதரும் மக்கள், காக்கும்

பதிதரும் வாழ்த்துச் சேர்க!

      பல்லாண்டு வாழ்க! வாழ்க! [210]

 

27.10.2024