samedi 18 avril 2015
lundi 13 avril 2015
பாரீசு பார்த்தசாரதி
பாரீசு பார்த்தசாரதி மணிவிழா வாழ்த்துமலர்!
நன்பார்த்த சாரதியும் நற்றவ வத்சலாவும்
இன்பார்த்த வாழ்வின் எழில்பெறுக! - பொன்னார்த்த
நல்லிணையர் நண்ணும் மணிவிழா ஓங்கிடுக!
நல்லணையான் நாமம் நவின்று!
ஓங்குதமிழ் உயர்புதுவைக் குடிபிறந்த அன்பர்
ஒப்பில்லாக்
குருசாமி பேர்விளங்கச் செய்தார்!
வீங்குதமிழ் படைத்திட்ட வியனாழ்வார் உருவை
விழியேந்திக்
களித்திங்குப் பெருவாழ்வைப் பெற்றார்!
தாங்குதமிழ் தலைக்கொண்டு நற்பணிகள் ஆற்றித்
தாயடியைத்
தாம்தொழுதார்! தருமநெறி காத்தார்!
தேங்குதமிழ்ச் சீரேந்தி மணிவிழாக் கண்டார்
செழும்பார்த்த
சாரதியும் வத்சலாவும் வாழ்க!
வில்லாதி வீரன்தன் சரணங்கள் சொல்வார்!
விருதங்கள்
மேற்கொண்டு வேங்கடனைத் தொழுவார்!
நல்லாதிப் பண்புகளை நாடிமனம் மகிழ்வார்!
நல்லதமிழ்ப்
பேரவையை நன்கேங்கச் செய்வார்!
சொல்லோதி உவக்கின்ற தூயதமிழ் மேடை
சுவை..கோடி
வழங்கிடவே புத்தாண்டு வைப்பார்!
வல்லோதி வரமுற்று மணிவிழாக் கண்டார்
வளர்பார்த்த
சாரதியும் வத்சலாவும் வாழ்க!
மதுக்கவிதை வடிக்கின்ற மணி.சித்தன் தாளை
மனத்துக்குள்
பதித்தவர்கள்! இதழுலகம் ஏத்த
புதுக்கவிதை வடிக்கின்ற பொங்குதிறன் பூத்துப்
புகழ்நூல்கள்
புனைந்தவர்கள்! புதுமைஅணிந் தவர்கள்!
எது..கவிதை கேட்பவர்க்கே என்னெழுத்தைக்
காட்டி
எழிலுரைக்கும்
இனியவர்கள்! நட்பைவளர்த் தவர்கள்!
இதுகவிதை என்றுரைக்க மணிவிழாக் கண்டார்
இன்பார்த்த
சாரதியும் வத்சலாவும் வாழ்க!
வளம்மணக்கும்! நலம்மணக்கும்! வண்டமிழ்ச்சீர்
மணக்கும்!
வாழையடி
வாழையெனத் தலைமுறைகள் மணக்கும்!
உளம்மணக்கும்! உரைமணக்கும்! உறவுகள்தாம்
மணக்கும்!
ஒளிர்கின்ற
திருப்பாவை ஊறும்தேன் மணக்கும்!
குளம்மணக்கும் தாமரைபோல் கொண்டொளிரும்
வாழ்வில்
குறள்மணக்கும்!
குணம்மணக்கும்! இன்பமெலாம் மணக்கும்!
தலம்மணக்கும் திருவருளால் மணிவிழா மணக்கும்
தண்பார்த்த
சாரதியும் வத்சலாவும் வாழ்க!
12.04.2015
jeudi 9 avril 2015
என்னை மாற்றியவள்!
என்னை மாற்றியவள்!
(பதிற்றந்தாதி)
வஞ்சித்துறை (விளம் + தேமா)
என்னுயிர்ப் பெண்ணே!
பொன்முகம் காட்டு!
உன்னருள் நெஞ்சால்
இன்னமு[து] ஊட்டு!
ஊட்டிடும் தாய்..நீ!
ஈட்டிடும் சீர்..நீ!
வாட்டிடும் துன்பை
ஓட்டிடும் கார்..நீ!
நீ..தரும் சொற்கள்
பூ..தரும் வாசம்!
பா..தரும் பார்வை
மாதவம் வீசும்!
வீசிடும் காற்றாய்ப்
பேசிடும் மங்கை!
மாசிடும் என்னுள்
தேசிடும் கங்கை!
கை..மணம் நல்கும்
தைமணம் என்பேன்!
பைமனம் மேவும்
மைமணம் என்பேன்!
மணந்திடும் சோலை!
அணிந்திடும் சேலை!
இணைந்திடும் வேளை
குணந்தரும் பாலை!
பாமலர்ச் செல்வி!
நாமலர் காக்கும்!
காமலர் போன்றே
மா..மகிழ் வோங்கும்!
ஓங்குசீர் தந்தாய்!
தேங்குநீர் போன்றே!
வீங்குசீர் பாட
ஏங்கும்சீர் என்பேன்!
சீரொளிர் எண்ணம்!
பேரொளிர் செய்கை!
தாரொளிர் வாழ்வு!
பார்..இவை ஏற்பேன்!
ஏற்றிடும் இப்பா
போற்றிடும் உன்னை!
ஆற்றிடும் சேவை
மாற்றிடும் என்னை!
அந்தாதி
விளக்கம்:
அந்தாதி
என்பது தமிழில் வழங்கும் 96 வகைச் சிற்றிலக்கியங்களில் ஒன்றாக வைத்து
எண்ணப்படுகிறது.
அந்தம்
முதலாய்த் தொடுப்பது அந்தாதி. ஒரு
செய்யுளின். ஈற்றில் உள்ள எழுத்தோ, அசையோ,
சீரோ, அடியோ அடுத்த செய்யுளின் முதலாக வருவது. (இஃது ஒரு செய்யுளுக்குள்ளும்
அடிதோறும் நிகழவும் கூடும்)
ஓா் அந்தாதி
நுாலின் இறுதிச் செய்யுளின் இறுதி எழுத்தோ, அசையோ, சீரோ, அடியோ அந்நுாலின் முதற்
செய்யுளின் முதலடியின் முதலாக வருமாயின் அது மண்டல அந்தாதியாகும். அப்படி வாராமல்
செந்நடையாகச் சென்று முடிந்துவிடுமாயின் அது செந்நடையந்தாதி ஆகும். இந்த
மண்டலித்திலும் செந்நடையாக அமைதலும் ஒரு செய்யுளுக்குள்ளே நிகழவும் பெறும். [சிலர்
அந்தாதி நுாலின் காப்புப் பாடலின் முதல் சீரை நுாலின் ஈற்றுச்சீராய் அமைப்பார்.
காப்புப் பாடல் நுாலில் சேராது. காப்புப் பாடல் நுாலில் சேராது என்பதற்கு
அம்பிகாபதி வரலாறு சான்றாகும்]
புறநானுாறு,
நற்றிணை, சிறுபாணாற்றுப்படை, சிலப்பதிகாரம், ஐங்குறுநுாறு, பதிற்றுப்பத்து,
பெருங்கதை, திருக்குறள் ஆகிய நுால்களில் சில செய்யுள்கள் அந்தாதி அமைப்பைப்
பெற்றுள்ளன.
நாயன்மார்களில்
காரைக்காலம்மையார், சேரமான் பெருமான், நக்கீரதேவ நாயனார், கபிலதேவ நாயனார், பரணதேவ
நாயனார், பட்டினத்துப் பிள்ளையார், நம்பியாண்டார் நம்பி, ஆளுடைப் பிள்ளையார்,
மாணிக்க வாசகர் ஆகியோர் அந்தாதி பாடியுள்ளனர்.
ஆழ்வார்களில்
பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், திருமழிசையாழ்வார், மதுரகவியாழ்வார்,
நம்மாழ்வார் ஆகியோர் அந்தாதி பாடியுள்ளனர். (நம்மாழ்வார் பாடிய திருவாய்மொழி 1102
பாடல்களைக் கொண்டது)
அந்தாதியின்
வகைகள்
1. தொடை
அந்தாதி: ஒரே பாடலுக்குள் நிகழும்
அந்தாதிக்குத் தொடை அந்தாதி என்று பெயர்.
2. செய்யுள்
அந்தாதி: இரண்டு செய்யுட்களுள் நிகழும் அந்தாதிக்குச் செய்யுள் அந்தாதி என்று
பெயர்.
3.
பதிற்றந்தாதி: பத்துப் பாடல்கள் அந்தாதியாக அமைந்தது பதிற்றந்தாதியாகும்.
4.
நுாற்றாந்தாதி: நுாறு பாடல்கள் அந்தாதியாக அமைந்தது நுாற்றந்தாதியாகும்.
5.
பதிற்றுப் பத்தந்தாதி: இதுவும் ஒரு நுாற்றந்தாதிதான். ஆனால் நுாற்றந்தாதிக்கும்
இதற்கும் ஒருவேறுபாடு உண்டு. நுாற்றந்தாதி ஒரே வகைப் பாவினால் பாடப்படும்.
பதிற்றுப்பத்து அந்தாதி பத்துப் பத்துப் பாடல்கள் வெவ்வேறுவகைப் பாக்களால்
பாடப்படும்.
6.
ஒலியந்தாதி: பதினாறு கலை ஒரடியாக வைத்து, நாலடிக்கு 64 கலையாக வகுத்து, பல
சந்தமும், வண்ணமும் கலை வைப்பும் தவறாமல்
முப்பது பாடல்கள் அந்தாதி யாப்பில் பாடப்படும்.
பாக்களின்
அடிப்படையில் 1. வெண்பா அந்தாதி, 2. கலித்துறை அந்தாதி, 3. அகவல் அந்தாதி, 4.
கலிவிருத்த அந்தாதி, 5. வஞ்சித்துறை அந்தாதி, 6. வஞ்சிவிருத்த அந்தாதி, 7. திரிபு
அந்தாதி, 8. திரிபு வெண்பா அந்தாதி, 9. கொம்பிலா வெண்பா அந்தாதி, 10. யமகவந்தாதி,
11. நிரோட்டக அந்தாதி, 12. நிரோட்டக யமக அந்தாதி, 13. ஏகபாத நுாற்றந்தாதி, 14.
ஏகத்தாள் இதழகல் அந்தாதி, 15. சிலேடை அந்தாதி, 16. கலியந்தாதி, 17. பல்சந்த
அந்தாதி, 18. மும்மாலை அந்தாதி, 19. சித்திரக் கவி அந்தாதி ஆகியவை உள்ளன.
09.04.2015
samedi 4 avril 2015
முதலடி முதல் மடக்குக் குறள்
முதலடி முதல் மடக்குக் குறள்கள்
1.
மரைபோல் மரைபோல் மலர்ந்தவிழி! முன்னோர்
உரைபோல் இனிக்கும் உளத்து!
மரை = தாமரை, மான்
2.
கண்டுமலர் கண்டுமலர் ஏங்குகிறாள்! கற்பனையில்
கொண்டுலாக் காணுகிறாள் கூத்து!
கண்டுமலர் = தேன்மலர், காணும்பெண்
3.
பாவாடை பாவாடை வீசுதடி! உன்மேனி
பூவாடை வீசுதடி பூத்து!
பாவாடை - உடை, பாடல்
4.
மடலும் மடலும் மணம்வீசும்! மங்கை
உடலும் மணம்வீசும் ஓது!
மடல் = தாழை, கடிதம்
5.
மாலையவள்! மாலையவள்! மஞ்சம் விளைகின்ற
சோலையவள் என்பேன் சுவைத்து!
மாலை = பூமாலை, மாலைப்பொழுது
6.
அணையே! அணையே! அமுதுாறும் அன்பே!
இணையே இலையுனக்[கு] இங்கு!
அணை = படுக்கை, அணைத்தல்
7.
கண்ணமுதைக் கண்ணமுதைக் கண்டு கதைக்கின்றேன்!
பெண்ணமுதை வெல்லல் பெரிது!
கண்ணமுதம் = பாயாசம், கண்ணழகு
8.
பாடியாள்! பாடியாள் கின்றாள்என் நெஞ்சத்தை!
கோடி..ஆள் வன்மை கொடுத்து!
பாடியாள் = பாடி ஊரைச் சோ்ந்தவள்,
பாடி ஆள்கின்றவள்
9.
மலைத்தேன்! மலைத்தேன்! பருகத் துடித்தேன்!
கலைத்தேன் அவளெனக் கண்டு!
மலைத்தேன் = தேன், வியப்பு
10.
மெய்யறிந்து மெய்யறிந்து சொல்கின்றேன்! உன்மேனி
செய்யவள் கொண்ட சிறப்பு!
மெய் = உடல், உண்மை
இலக்கண விளக்கம்
முதலடியில் முதல் சீரும் இரண்டாம் சீரும் ஒன்றாக இருக்க
வேண்டும். இவ்விரு சீரும் வேறுவேறு பொருளில் வரவேண்டும். இதனை முதலடி முதல் மடக்கு
என்பர்.
04.04.2015
mercredi 1 avril 2015
மாயப் பெண்ணே!
மாயப் பெண்ணே!
உள்ளத்துள் உலவுகின்ற எழிலே! இன்ப
உறவாடி
நலங்கோடிக் கண்முன் மின்னும்!
பள்ளத்துள் பாய்ந்தோடும் நதியைப் போன்று
பாவையுன்றன்
பார்வையெனை இழுத்தே செல்லும்!
வெள்ளத்துள் அகப்பட்ட பொருளாய் ஆனேன்!
வேழத்தின்
மதமாக ஆசை கொண்டேன்!
மல்லத்துள் கொடிகட்டும் மறவன் வாழ்வை
மௌனத்துள்
ஆழ்த்துவதோ? மாயப் பெண்ணே!
01.04.2015
Inscription à :
Articles (Atom)



