dimanche 5 mai 2013

காதல் ஆயிரம் [பகுதி - 83]




காதல் ஆயிரம் [பகுதி - 83]
 
786.
ஆளை அசத்தும் அழகே! கவிபாடும்
காளை மனத்தைக் கலக்குகிறாய்! - மாலைவரும்
வேளை கோல விழிப்பெண்ணே! போதையிலே
மூளை முழுகும் உருண்டு!

787.
நிறைந்திருக்கும்  வேலையிலும்  உன்நினைவே  நெஞ்சுள்
மறைந்திருக்கும்!  மானே! மயிலே! -  குறைந்திருக்கும்
என்றன் துயரங்கள்! என்றென்றும் வேண்டுமடி
உன்றன் உயிரின் உறவு!

788.
என்மடல்  ஏனோ?   எனதுயிர் உன்னிடமே!
இன்மடல் தீட்டும் எழிற்கோவே! - பொன்மடல்
என்றன் திருமேனி! ஏந்திப் படித்திட..வா!
என்றும் இனிமை இசைத்து!

789.
தேன்குடிக்கும்  பொன்வண்டே! தேகம் சிலுசிலுக்க
நான்குடிக்கும் நற்சுவையை  என்னென்பேன்?  -  வான்குடிக்கும்  
நீரே மழையாகும்! நெஞ்சம் குடிக்கும்உன்
சீரே கவியாகும் சீா்த்து!

790.
ஏக்கம் நிறைந்ததடி! தூக்கம் தொலைந்ததடி!
தாக்கும் நினைவு தழைக்குதடி! - போக்கிட..வா!
வாக்களித்து நிற்கும் வறியவரைாய்க் காத்துள்ளேன்!
நாக்களித்துக் காதல் நடத்து!
 
(தொடரும்)

samedi 4 mai 2013

ஈருடல் ஓருயிர்





ஈருடல் ஓருயிர்

சின்னவள் என்றே எண்ணிச்
     சிந்தையில் கொள்ள வேண்டாம்!
என்னவள் சாதி யாலே
     எங்களைப் பிரிக்க வேண்டாம்!
தென்னவள் மொழியோ தேனாம்!
     தேவியின் விழியோ மீனாம்!
பொன்னவள் மாதும் நானும்
     புதியதோர் உலகைக் காண்போம்!

ஈருடல் ஒன்றே யாகி
     ஓருயி ராக வாழ்வோம்!
பேருடன் புகழுஞ் சேரப்
     பெருநெறிக் குறளை ஏற்போம்!
பாருடன் கூடி நாளும்
     பைந்தமிழ்த் தாயைக் காப்போம்!
சீருடன் பணிகள் செய்து
     சிறப்பெலாம் சூழக் காண்போம்!

அன்பெனும் அமிழ்தி னாலே
     அழகுடன் திகழ்வோம்! நல்ல
பண்பெனும் பயிர்வி ளைத்துப்
     பாரினில் உயர்வோம்! வாழ்வில்
துன்பெனும் பேயை யோட்டித்
     துணிவுடன் நிற்போம்! என்றும்
இன்பெனும் தமிழைப் போற்றி
     ஈடிலாப் புகழைக் காண்போம்!

முத்தமிழ் நல்கும் தேனாய்
     முக்கனி சேர்ந்த சாறாய்ச்
சித்திரைத் தென்றல் காற்றாய்ச்
     சிந்தனை சுரக்கும் ஊற்றாய்
முத்திரை பதித்த பொன்னாய்
     மூதுரை கூறும் பண்பாய்
இத்தரை வாழ்வோர் போற்ற
     இணையிலா வாழ்வைக் காண்போம்!

18.01.1985

vendredi 3 mai 2013

அன்பைப் பொழிந்தான்




அன்பைப் பொழிந்தான்

பட்டு வேட்டிக் காரன் - என்னைப்
பார்த்துப் பார்த்துச் சிரித்தான்!
கிட்ட வந்து நெஞ்சை - அவன்
கிள்ளிக் கிள்ளி முறைத்தான்!

வட்ட முகத்துக் காரன் - மனதில்
வந்து வந்து நடித்தான்!
கட்டுப் பாடே இன்றிக் - கனவில்
கட்டிக் கட்டிப் பிடித்தான்!

வெட்ட வெளியின் பக்கம் - என்னை
வேண்டி வேண்டி அழைத்தான்!
திட்டம் போட்டு வந்தே - அழகைத்
தீண்டித் தீண்டிச் சுவைத்தான்!

தொட்டுத் தொட்டு என்னைத் - தோழி
தொடா்ந்து அரட்டை அடித்தான்!
அட்டை போல ஒட்டி - நாளும்
அமுதை அள்ளிக் குடித்தான்!

10.01.1985

jeudi 2 mai 2013

காதல் ஆயிரம் [பகுதி - 82]




காதல் ஆயிரம் [பகுதி - 82]
 
781.
உன்மடல் இன்றி உலகே வெறுப்பாகும்!
என்னுடல் வாடும்! இறுகும்உயிர்! ! - பொன்மகளே
ஓா்சொல் எழுதுக! உள்ளம் உவந்தெழச்
சீா்சொல் எழுதுக சோ்த்து!

782.
தேனருந்தும் வண்டாகித் தேவியுனைப் பற்றுகிறேன்!
நானருந்தும் போதை நரம்பேற -  மான்மருண்டு
பார்ப்பதுபோல் பார்க்கின்றாய்! பார்கொண்ட இன்பத்தைச்
சோ்ப்பதுபோல் பார்க்கின்றாய் தோ்ந்து!

783.
உன்குரல் கேட்க உயிரலைந்து ஏங்குதடி!
இன்குரல் மாதே! இளையவளே! - பொன்குரல்
சூடிப் பிறந்தவளே! துாய மனத்தவளே!
ஓடி வருவாய் உடன்!

784.
மாலை மயங்கிவரும்!  மங்கை நினைவுகளைச்
சோலை மணந்துதரும்! சொக்குகிறேன்! - பாலை
நிகா்த்த மலா்மகளே! நெஞ்சத் துயரைத்
தகா்த்த அமுதினைத் தா!

785.
நான்எழுதும் சொல்லெல்லாம் நங்கையுன் பேரழகால்
தேன்எழுதும் சொல்லாகத் தித்திக்கும்! - மீன்எழுதும்
காட்சியைக் கண்கின்றேன்! உன்முகத்தில் அன்பொளிரும்
ஆட்சியைக் காண்கின்றேன் ஆழ்ந்து!  

(தொடரும்)

mercredi 1 mai 2013

மேதினம்




மேதினி போற்றும் மேதினமே!

ஏடுபுகழ்ந் தேத்துகின்ற ஏற்றமிகு பொன்னாளாம்!
நாடுபுகழ்ப் பாட்டாளி நன்னாளாம்! - வாடி
உழைக்கின்ற மக்களின் ஒப்பற்ற நாளாம்!
தழைக்கின்ற மேதினமே தான்!

ஊதியத்தைக் கூட்டி உரிமையைக் காப்பதற்கு
நாதியற்ற வர்க்கெல்லாம் நற்றினமாம்! - மேதினியில்
பூத்த புகழ்ச்சுடராய்ப் போற்றித் தொழிலாளர்
காத்த திருநாளாம் காண்!

போதிய ஓய்வு! பொழுதெல்லாம் நல்லின்பம்!
நீதியாய் நல்வசதி நேர்ந்ததுவே! - மேதினம்
ஏங்கிக் கிடந்த எளியவர்க்கு நற்பயன்கள்
வாங்கித் தருநாளாம் வாழ்த்து!

ஆயிரத்தெண் ணூற்றெண்பத் தாறாம் வருடம்..பல்
லாயிரம் மக்கள் அகமகிழ்வர்! - தாயென்[று] 
அமெரிக்க நாட்டின் அழகு சிகாகோ
நமக்களித்த திட்டம்'மே' நாள்!

முதலாளி ஆணவத்தை மூலையிலே வீழ்த்தி
மிதவாதப் போக்கை மிதித்து - நிதமும்
உரிமை கிடைக்க உழைப்போர் மகிழப்
பெருமை யளித்த'மே' பேறு!

சுற்றுசெக்கு மாடெனவே துன்புற்ற தோழர்க்கு
வெற்றியுடன் ஓய்வளித்த மேதினமே - கற்றுணர்ந்த
எந்தமத வாதிகட்கும் இங்கெவர்க்கும் இன்றமிழ்போல்
வந்தினிக்கும் பொன்தினமே வா!

22.6.1985