காதல் ஆயிரம் [பகுதி - 21]
201.
மீட்டுதடி பொன்வீணை! மின்னுதடி
உன்பருவம்!
கூட்டுதடி காதல் கொதிப்பினையே –
வாட்டமுறத்
தீட்டுதடி ஆசைகளைத் தேவியே! கார்காலம்
மூட்டுதடி மோகம் முனைந்து!
202.
கொடைகொடுத்த பாரிபோல் கொஞ்சுதமிழ்ச்
சீா்போல்
தொடைதொடுத்துப் பாடும் சுவைபோல் -
கடைக்கண்
படைதொடுத்து வெல்லும்பூம் பாவையுனை
நல்ல
நடைதொடுத்துப் பாடுவேன் நான்!
203.
பூத்துக் குலுங்கும் பொழில்களிலே
உன்னுருவைப்
பார்த்துக் மகிழும்நற் பாவலன்நான்! –
சேர்த்துயிர்
வேர்த்துக் ஒழுகும்! விரைந்தெனக்கு
இன்னமுதை
வார்த்து வழங்கும் வடிவு!
204.
வசந்தமே வந்தாட! வண்டுபறந் தாட!
அசைந்து மலராட! அன்பால் - இசைந்து
மதுவூற! உண்டு மனமாட! வேறே
எதுகூற வேண்டும் இனி?
205.
ஓராயி ரம்பாட்டில் உன்னழகை நான்பாடச்
சீராயி ரம்தருவாள் செந்தமிழாள்! -
கூரறிவால்
பார்..ஆயி ரம்முறை! பைங்கொடியே!
காதலின்
பேராயி ரம்சொல்லும்! பேணு!
206.
சீருலாப் போகும் பொழுது! சிரித்தாடி
யாரிலா நேரம் எதிர்ப்பார்த்துச் –
சேர்ந்துளம்
பார்..உலாப் பைந்தமிழைப் பாடிப்
பறந்தனமே
காருலா வானில் களித்து!
207.
கூடை சுமந்து, குழலில் மலர்முடித்து
ஆடை நெகிழ்ந்தே, அழகொளிர - வாடிடச்
சாடை புரிந்தென்னைத் தாக்கும் தளிர்க்கொடியே!
கோடை தணியும் குளிர்ந்து!
208.
மார்கழிப் பூக்கள் மலர்ந்தாடும்!
என்னுடைய
ஊர்வழி எங்கும் ஒளிகோலம்! - தேர்வரும்
சீர்வழிப் பாதையில் சின்னவள்
செல்கிறாள்!
கூர்விழித் தாக்கம் கொடுத்து!
209.
பனியின் விடியல்! பளிச்சிடும் புற்கள்!
கனியின் சுவைகொடுக்கும் காலை! -
இனியாள்
அணியின் அழகில் அடியேன் உருகத்
தணியும் மனத்தின் தவிப்பு!
210.
கண்ணுள் இருந்தே கவிதை படிக்கின்றாய்!
இன்னூல் இயம்பி இனிக்கின்றாய்! -
பெண்ணணங்கே!
பொன்னூல் பொலிவே! புதையலே! உன்னழகு
என்னுள் இயங்கும் இணைந்து!
(தொடரும்)


.jpg)
.jpg)
