புகழ்பாடும் நுழைவாயில்
மொழியோங்கத்
தொண்டாற்றும், உயர்வை நல்கும்,
மொய்த்தபுகழ்த் தமிழ்ச்சிறகம் தமிழர் தம்மின்
வழியோங்க வளமோங்கத்
திட்டம் தீட்டி
வரலாற்றைத் தானெழுதும்! மூன்றாம் ஆண்டில்
விழியோங்கச்
சிலையமைக்கும்! அந்த மானில்
விழாநடத்திச் சீர்படைக்கும்! உலக மெங்கும்
பொழிலோங்கச்
செயலாற்றும்! எம்மோ டிங்கே
புறப்படுவீர்! பொற்காலம் காண்போம் நன்றே!
தெருவெங்கும்
தமிழ்முழக்கம் கேட்கச் செய்யும்
தென்மறவர் தமிழ்ச்சிறகம் குறள்நுால் சொல்லும்
கருவெங்கும்
விளைந்திடவும், காலம் போற்றும்
கவியெங்கும் பரவிடவும், தமிழின் வீர
உருவெங்கும்
நிலைபெறவும், உலகோர் ஒன்றி
உறவாக வாழ்ந்திடவும் பணிகள் ஏற்கும்!
திருவென்றும்
திறமென்றும் எம்மோ டிங்கே
திரண்டிடுவீர்! தீந்தமிழைக் காப்போம் நன்றே!
ஒன்றிணைந்து
வாழ்ந்திடவே உள்ளங் கொண்டே
உழைக்கின்ற தமிழ்ச்சிறகம் அந்த மானில்
நன்கிணைந்து
சமைக்கின்ற கடாரம் கொண்டான்
நன்வளைவு தமிழ்மறத்தை உலகுக் கோதும்!
குன்றிணைந்து
தொடர்கின்ற அரணைப் போன்று
குவலயத்தோர் திகழ்ந்திடுக! இன்பம் சேரும்!
இன்றுணர்ந்து
பெயர்பதிக்க எம்மோ டிங்கே
இணைந்திடுவீா்! எத்திசையும் போற்றும்
நன்றே!
கடற்படையால்
கடாரத்தை வென்ற காலம்
கணக்கிட்டுத் தமிழ்ச்சிறகம் வாழ்த்திப் பாடும்!
உடற்கொடையால்
உயிர்க்கொடையால் மாட்சி பெற்ற
உயர்தமிழர் வரலாற்றைப் பதிவு செய்யும்!
இடங்கொடையால்
மடங்கொடையால் மேன்மை யுற்ற
ஈடில்லா மாந்தர்களை ஏத்திச் சாற்றும்!
தொடர்கொடையால்
பெருமைபெற எம்மோ டிங்கே
துணையாவீர்! தொன்மொழியை வளர்ப்போம் நாமே!
அந்தமானில்
வாழ்கின்ற மக்கள் வாழ்க!
ஆற்றலுடைத் தமிழ்ச்சிறகத் தொண்டர் வாழ்க!
அந்தமானின்
விழியழகை முகத்தில் காட்டும்
அந்தமிழின் பெண்மணிகள் வாழ்க! வாழ்க!!
வந்தமானின்
எழிற்கண்டு நெஞ்சஞ் சொக்கும்
வளர்கலைஞர் வன்கவிஞர் அன்பர் வாழ்க!
சந்தமானின்
பாட்டழகாய் ஆக்கம் தந்த
சான்றோர்கள் ஆன்றோர்கள் வாழ்க! வாழ்க!!
பாட்டரசர் கி. பாரதிதாசன்
26.07.2025