vendredi 4 mai 2018

வெண்டாழிசை - 1


வெண்பா மேடை - 66
  
வெண்டாழிசை
  
சிந்தியல் வெண்பாவின் இனமாக வெள்ளொத்தாழிசையும், வெண்டாழிசையும் அமைகின்றன.
  
மூன்று சிந்தியல் வெண்பாக்கள் ஒரு பொருண்மேல் அடுக்கிவருதல் வெள்ளொத்தாழிசை. [தளை தட்டாமல் அமையும்]
  
வெண்டாழிசையும் சிந்தியல் வெண்பாபோல் வடிவத்தைப் பெற்றிருக்கும். முதல் இரண்டடிகள் நாற்சீராய் [அளவடியாய்], ஈற்றடி வெண்பாவைப்போல் முச்சீராய், நாள்,மலர், காசு, பிறப்பு என்னும் வாய்பாட்டால் முடியும்.
  
வேற்றுத்தளை பயின்று வரும் குறளைக் குறட்டாழிசை எனக் கொண்டதுபோல், வேற்றுத்தளை வந்துறும் சிந்தியல் வெண்பாவை வெண்டாழிசை எனக் கொண்டனர்.
இது ஒருபொருண்மேல் ஒன்றோ, இரண்டோ, மூன்றோ அல்லது மூன்றின் மிகுந்தோ வருதல் உண்டு. வெவ்வேறு பொருள் பற்றி அடுக்கியும் வருதல் உண்டு. மூன்றடிகளும் ஓரெதுகை பெற்றுவரும்.
  
1.வெண்டளையோடு வேற்றுத்தளை விரவி வந்த வெண்டாழிசை
2. ஆசிரியத் தளையால் வந்த வெண்டாழிசை
3. நேரொன்று ஆசிரியத் தளையால் வந்த வெண்டாழிசை
4. நிரையொன்று ஆசிரியத் தளையால் வந்த வெண்டாழிசை
5. கலித்தளையால் வந்த வெண்டாழிசை
6. வஞ்சித்தளையால் வந்த வெண்டாழிசை
7. ஒன்றிய வஞ்சித்தளையால் வந்த வெண்டாழிசை
8. ஒன்றாத வஞ்சித்தளையால் வந்த வெண்டாழிசை
  
எனப் பலவகையாக வெண்டாழிசை நுாற்களில் பயின்று வருவதைக் காணலாம்.
  
வெண்டாழிசைக்கும் வெள்ளொத்தாழிசைக்கும் இடையே உள்ள வேறுபாடு
  
வெண்டாழிசை சிந்தியல் வெண்பாப்போல் நாற்சீரடியிரண்டும் முச்சீராய் இறுதியடி ஒன்றும் பெற்று, பல தளைகளும் விரவித், தனித்தும், ஒரு பொருள்மேல் பலவாக அடிக்கியும் வரும்.
  
வெள்ளொத்தாழிசை தனித்து வாராது. சிந்தியல் வெண்பா ஒரு பொருள்மேல் மூன்றாக அடுக்கி வருவதாகும். நாற்சீரடி இரண்டு முன்வர, முச்சீரடி ஈற்றடியாக வருதலொன்று தவிர பிறவெல்லாம் இவற்றிடையே வேறுபாடுகளாம்.
  
வெண்டாழிசை வெள்ளொத்தாழிசை என்ற இரண்டினையும் ஒன்றாகக் கொள்வர் காக்கைபாடினியார், சிறுகாக்கைபாடினியார், அவிநயனார் முதலானோர். [யா.க. 66 உரை]
  
வெண்டளையோடு வேற்றுத்தளை விரவி வந்த வெண்டாழிசை
  
நேரிசை வெண்டாழிசை!
  
கண்ணே! கவிக்காடே! கனித்தோப்பே! காதல்
பெண்ணே! பெரும்பேறே! பிணியகற்றும் - விண்ணமுதே!
மண்ணே மயங்கும்உன் வடிவு!
  

இன்னிசை வெண்டாழிசை!
  
விழியிரண்டும் வலைவீசும்! விந்தைச் சுவைகூட்டி
மொழிதிரண்டு கலைபேசும்! மோக மழைபொழியும்!
வழியிழந்து வாடும்என் வயது!
  
[பாட்டரசர் கி. பாரதிதாசன்]
  
மேலுள்ள வெண்டாழிசையில், வெண்டளையுடன், கலித்தளையும் [கவிக்காடே! கனித்தோப்பே] நேரொன்றிய ஆசிரியத் தளையும் [காதல் பெண்ணே] வந்துள்ளதைக் கண்டுணர்க.
  
இலக்கண விளக்கம்
  
இப்பாடல் மூன்றடிகளைப் பெறும். முதலிரண்ரடிகள் நாற்சீரடிகள். மூன்றாம் அடி முச்சீரடி. மூன்றடிகளும் ஓரெதுகை பெறும்.
  
வெண்டளை விரைவியும் வேற்றுத்தளை அருகியும் வரும்.
  
ஈற்றுச்சீர் நாள், மலர், காசு, பிறப்பு என்ற வாய்பாடுகளுள் ஒன்றால் முடியும்.
  
'தமிழினிமை' என்ற கருத்தமைய வெண்டளையோடு வேற்றுத்தளை கலந்து வந்த வெண்டாழிசை ஒன்றைப் பாடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
  
"பாவலர் பயிலரங்கம்" என்ற குழுவில் இணைந்து தங்கள் வெள்ளொத்தாழிசையைத் தனிப்பதிவாகப் பதிவிட வேண்டுகிறேன்!
  
அன்புடன்
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
05.05.2018

Aucun commentaire:

Enregistrer un commentaire