mercredi 9 mars 2016

கண்ணீர் வெண்பா!கண்ணீர் வெண்பா!


[பாவலர் இளமதியார் கணவர் பாலசந்திர சர்மா அவர்கள் 07.03.2016 அன்று இறையடியை இணைந்தார். அவரின் ஆன்மா சாந்தியடைய வேண்டுவோம்]

உற்ற கணவன் உனைப்பிரிந்து சென்றானோ?
நற்றவ நாதனை நாடியே! - சுற்றி
விழுந்தாயோ? வெந்து விழித்தாயோ? யாவும்
இழந்தாயோ உள்ளம் எரிந்து!

முன்னை வினைகழிந்து முந்திப் பறந்தானோ?
உன்னைப் பிரிந்தே ஒளிந்தானோ? - பொன்னைப்
புழுதியில் போடுவரோ? பொங்குதென் நெஞ்சம்
புழுவெனச் சூட்டில் புரண்டு!

கண்ணின் மணியெனக் காத்திட்ட உன்துணைவன்
விண்ணில் பறந்து விரைந்தானோ? - பெண்ணே..நீ
கத்தித் துடித்தாயோ? புத்தி வெடித்தாயோ?
ஒத்திக் கிடந்தாயோ ஊர்ந்து!

நீடுதுயில் நீங்கி நிமலன் மலரடியை
நாடுமனம் கொண்டு நடந்தானோ? - கூடுதுயர்
கண்டு சுருண்டதுவோ? கண்ணீர் வறண்டதுவோ?
உண்டு முடித்ததுவோ ஊழ்!

பிள்ளையெனக் காத்த பெருஞ்சொத்தைக் காலனவன்
கொள்ளை அடித்துக் குதித்தானோ? - வெள்ளைமனம்
முற்றும் கருப்பாகி மூலையில் நின்றாயோ?
வற்றி வறண்டாயோ வாய்!

காற்றில் கலந்தானோ? தன்கடன் தீர்த்தானோ?
சேற்றில் உனைவிட்டுச் சென்றானோ? - ஆற்றிலுறும்
வெள்ளமெனத் துன்பம் விளைந்ததுவோ? என்தோழி
உள்ளமெனும் கூட்டை உடைத்து!

பட்டது போதுமெனப் பாய்ந்து பிரிந்தானோ?
விட்டது பாவம்! விரைந்தானோ? - சுட்டதுபோல்
உன்றன் உயிர்ஊசல் ஆடியதோ? என்தோழி!
என்றெழு வாயோ இயம்பு?

எப்படி இன்னல் எரித்ததுவோ? காரிருள்
அப்படி யே..வந்[து] அழுத்தியதோ? - செப்புமொழி
யாவும் மறந்தாயோ? எல்லாம் வெறுத்தாயோ?
மேவும் துயரில் விழுந்து!

பூவெங்கே? பொன்னெங்கே? போற்றிப் புனைந்திட்ட
பாவெங்கே? செய்த பணியெங்கே? - தேவெங்கே?
தேம்பி அழுதாயோ? திக்கற்று நின்றாயோ?
கூம்பிவிழுந் தாயோ குலைந்து?

பொல்லா உலகென்று போனானோ? உன்வாழ்வின்
எல்லாக் கதவுகளை இங்கடைத்து! - கல்லாய்
மனம்மாறி மண்ணில் கிடந்தாயோ? நட்பாம் 
இனம்வாடி நிற்க இணைந்து!

பாட்டரசர் கி. பாரதிதாசன்
07.03.2016

21 commentaires:

 1. சகோதரி இளமதி அவர்களின் கணவரது ஆன்மா சாந்தியடைய எமது பிரார்த்தனைகள் - கில்லர்ஜி

  RépondreSupprimer
  Réponses

  1. ஈசன் திருவடியில் இவ்வான்மா நன்காழ்ந்து
   மாசில் நிலைக்கு வணங்கு!

   Supprimer
 2. அன்பின் சகோதரி இளமதியாரின் துயர்தீர்க்க வார்த்தைகளில்லை அய்யா.
  நெஞ்சு கனக்கும் செய்தியை வெண்பாவில் வடித்து, நெகழவைத்துவிட்டீர்கள்.
  சகோதரிக்குப் புதுக்கோட்டைக் கணினித் தமிழ்ச்சங்கம் சார்பிலும் என் சார்பிலும் ஆழ்ந்த இரங்கலைப் பகிர்ந்து கொள்கிறோம். தங்களின் பா அஞ்சலிக்கும் வணக்கம்.

  RépondreSupprimer
  Réponses

  1. இன்னல் கடல்நீந்தி ஏற்ற வழிகாண
   என்றும் இறையை இறைஞ்சு!

   Supprimer
 3. ஐயா ஆடிவிட்டேன் கவிக்கருவில் தூயநின் அருஞ்சொல் நெஞ்சேற்றி
  காய நினைவலைகள் கணப்போதும் சூழ்ந்துநின்ற
  ஆய்ந்த அறிஞனுக்கோர் அஞ்சலி கெலுத்துவமே!நன்றி கவிஞரே

  RépondreSupprimer
  Réponses

  1. இளமதி உற்ற இடுக்கண் அகன்றே
   வளம்வர வேண்டும் வரம்!

   Supprimer
 4. இளமதி அவர்களின் எத்தனையோ பாடல்களைப் பாடி அவரது தளத்திலே என் பாடல்கள் குறியிட்டு காண்பிக்கப் பட்டு இருக்கும் இந்த வேளையில்,

  இந்த இரங்கல் பாட்டினை எப்படி பாடுவேன் ?

  முன்னை வினை கழிந்து முந்திப் பறந்தானோ ?

  ஆம். உண்மையே.
  இருப்பினும் இளமதிக்கு இன்ன ஆறுதல் கூறுவது ? தெரியவில்லை.

  முப்பெரும் சக்திகளைப் பற்றிய பாடல் எழுதிய இளமதிக்கு அந்த
  இறைவி தான் துயரினைத் தாங்கும் மன திடத்தைத் தரவேண்டும்.

  சுப்புதாத்தா.

  RépondreSupprimer
  Réponses

  1. துன்பத்தைப் போக்கித் துணையிருக்க வேண்டுவோம்
   அன்பகத்து கண்ணன் அடி!

   Supprimer
 5. Réponses

  1. மீண்டுவர வேண்டும்! விழுந்த துயர்நீங்கி
   ஈண்டுவர வேண்டும் எழு!

   Supprimer
 6. Réponses

  1. ஊழினை வெல்ல உலகினில் யாருள்ளார்?
   ஆழியங் கையனை அண்டு

   Supprimer
 7. வணக்கம் !

  கோமா நிலையால் கொடுத்தவலி போதுமேன்றோ
  தாமாக மூச்சுவிட்டீர் ! தண்ணொளியாம் - பூமா(து)
  இளமதியார் வாழ்வும் இனித்தொடர! அன்பின்
  வளங்கொடுத்துச் சென்றீரோ வான் !


  அன்னாரின் இழப்பால் துயருறும் அன்புமிக்க சகோ இளமைதிக்கு எல்லாம் வல்ல இறைவன் ஆன்ம பலத்தைக் கொடுக்கட்டும் இவ்வுலகை நீத்தார் என்றும் இறையடியைச் சேர்ந்திருக்க வல்லோனை வணங்கி நிற்கின்றேன்  RépondreSupprimer
  Réponses

  1. இறப்பும் விடுதலையே! ஏங்கும் மனமே
   பிறப்பும் விடுதலையே பேணு!

   Supprimer
 8. பூவெங்கே? பொன்னெங்கே? போற்றிப் புனைந்திட்ட
  பாவெங்கே? செய்த பணியெங்கே? - தேவெங்கே?
  தேம்பி அழுதாயோ? திக்கற்று நின்றாயோ?
  கூம்பிவிழுந் தாயோ குலைந்து?

  ஆழ்ந்த இரங்கல்கள்...

  அக்கா, இந்த மீளாத்துயரில் இருந்து வெளிவர இறைவன் அருள் புரியட்டும்...

  RépondreSupprimer
  Réponses

  1. பிறந்தவர் ஓர்நாள் இறப்பார்! உலகில்
   இறந்தவர் காண்பார் பிறப்பு!

   Supprimer
 9. Réponses

  1. இறப்பும் பிறப்பும் இறைவனிடம்! காலம்
   பறக்கும்! பரமனைப் பற்று!

   Supprimer
 10. தன்னிலை இன்றியுடல் புண்ணிலை கொண்டவுயிர்
  மின்னிலை காண விரைந்ததுவோ? - துன்னிலையில்
  வாடும் இளமதிக்குக் கூற வழியேது?
  ஆடும் விதியே அடங்கு!

  RépondreSupprimer
  Réponses

  1. ஆடும் விதிநடம் மெல்ல அடங்கட்டும்!
   கூடும் துயரைக் குறைத்து!

   Supprimer
 11. வணக்கம் ஐயா!

  நன்றியினைச் சொல்லவந்தேன் நானும் இங்கே!
   நங்கையிவள் நாதனுக்காய் இரங்கல் கண்டே!
  என்னுளமும் நெகிழ்ந்ததுவே கண்கள் மல்க!
   இருகரமும் கூப்பியுமை வணங்கு கின்றேன்!
  நின்றுபின்னர் துடிக்கிறதென் இதயம் மீண்டும்!
   நிலைத்திடாத வாழ்விலிந்தப் பாடம் போதும்!
  சென்றவர்கள் மீளாரே தெரிந்தே சொன்னார்!
   சிந்தையின்று தெளிவுற்றேன்! நன்றி! நன்றி!

  என் ஆருயிர்க் கணவரின் மறைவுக்காகக் கண்ணீர்ப் பா இசைத்து அஞ்சலித்து
  எனக்கு ஆறுதல் கூறிய மதிப்பிற்குரிய கவிஞர் ஐயாவுக்கு
  என் உளமார்ந்த நன்றிகள்!
  சில நாட்களுக்கு முன்னர்தான் உங்களின் இப்பதிவினைக்
  கண்ணுற்றுற்றேன் ஐயா!
  காலதாமதமாக வந்து நன்றி கூறுகிறேன். பொறுத்தருள வேண்டுகிறேன்!..

  ஐயாவுடன் இங்கு என் துயரத்தில் பங்குகொண்டு
  என் கணவரின் ஆத்ம சாந்திக்காகப் பிரார்த்தித்தும் எனக்கும் ஆறுதல் கூறிய
  அன்புள்ளங்கள் உங்கள் அனைவருக்கும் என் உணர்வு பூர்வமான அன்பு நன்றிகள்!

  வாழ்க வளமுடன்!

  RépondreSupprimer