mardi 25 août 2015

சன்னல் ஓரத்து நிலவுகவிஞர் . உரூபனின்
சன்னல் ஓரத்து நிலவு நூலுக்குச் சாற்றுகவி!


பாவலர் ரூபனார் நாவளம் மிக்கவர்!
ஆவலாய்த் தமிழைக் காவல் புரிபவர்!
மின்வலை மின்ன இன்றமிழ் பரவ
எழுதிக் குவிப்பவர்! பழத்தின் சுவையவர்!
சொல்லும் செயலும் வெல்லும் வண்ணம்
தொண்டினை ஆற்றி வண்டமிழ் வடிப்பவர்!
செல்லும் இடமெலாம் அல்லும் பகலும்
அன்னைத் தமிழின் தொன்மை உரைப்பவர்!
பொன்சேர் மனமும் நன்சேர் நினைவும்
தம்சேர் வண்ணம் என்றும் வாழ்பவர்!
அன்பின் ஊற்றாய்ப் பண்பின் காடாய்
நெஞ்சம் பெற்றவர்! தஞ்சம் தமிழ்என
என்றும் கிடப்பவர்! மின்வலைத் தளங்களில் 
நன்றே ஆழ்பவர்! நன்மை சூழ்பவர்!
புவிப்பூ யாவும் கவிப்பூ ஏற்க
வலைப்பூ மணக்கக் கலைப்பூ காண்பவர்!
முகநூல் வழியாய் ஆகநூல் நூற்பவர்!
சுகநூல் பின்னித் தகைநூல் தருபவர்!
நல்லார் நட்பை வல்லார் திறனை
நாடிப் பெற்றுப் பாடிக் களிப்பவர்!
எல்லாத் திசைகளைச் சொல்லால் இழுக்கும்
ஆற்றல் பெற்றவர்! நாற்றாய்த் தழைப்பவர்!

வீரம் விளையும் போரொளிர் ஈழ
மண்ணின் மாண்பைக் கண்ணில் கொண்டவர்!
நாட்டுப் பற்றும் பாட்டுப் பற்றும்
உள்ள உயர்வைச் சொல்லல் எளிதோ?

கவிதைப் போட்டியைப் புவியில் நடத்திக்
கன்னித் தமிழைச் சென்னி தரித்தவர்!
அயலவர் நிலத்தில் இயலிசைத் தமிழை
வயலென விளைத்தே உயிரெனக் காத்தவர்!
உண்ணும் உணவாய் ஒண்மை உடையாய்த்;
தண்டமிழ் மொழியைக் கொண்டு சிறந்தவர்!
நண்பர் ரூபனார் எண்ணிலாக் கீர்த்தியை
என்மனம் எண்ணி இன்புறும் என்பேன்!

சன்னல் வழியே மின்னும் நிலவென
இந்நூல் உள்ளே தந்த கவிதைகள்
செந்தேன் ஊற்றாய் வந்து குதிப்பன!
அன்னையின் அன்பைப் பொன்னெனப் போற்றும்
பாக்கள் மீதே ஈக்கள் போன்றே
கற்றோர் நெஞ்சம் பற்றிக் கொள்ளும்!
கருவறை தந்த அரும்..தாய் வாழக்
கழிவரை உள்ள இழியிடம் கூட
இல்லை என்றே சொல்லும் அடிகள்
படிக்கும் பொழுது துடிக்கச் செய்யும்!
பெற்றவள் பெருமையைப் பற்றுடன் இந்நூல்
ஓதும் அடிகள் வேத அடிகளே!

முதியோர் இல்லம் வதியும் பெற்றோர்
கண்ணீர் துடைக்கும் பண்கள் அருமை!
உழைப்பே உயர்வை விளைக்கும் என்று
தீட்டிய பாடல் ஊட்டும் இனிமை!

மங்கை எழிலைக் கங்கைப் பொழிலாய்
ஏந்தும் பாக்கள்! பூந்தேன் என்பேன்!
காதல் கவிகளை ஓத ஓதக்
கள்ளின் போதை உள்ளம் ஏகும்!
விழிகள் பேசும் மொழியைப் படித்தே
உயிருள் இன்பப் பயிரும் வளரும்!
முத்த மழையில் சித்தம் குளிர்ந்து
தந்த கவிகள் கந்தம் வீசும்!
கன்னி அழகில் கண்ணன் மயங்கிப்
பின்னிப் படைத்த மின்னல் அடிகள்
புலமை தந்த வளமை என்பேன்!
இளமை அளித்த இனிமை என்பேன்!
அழகியல் பொங்கி ஒழுகும் வண்ணம்
புனைந்த கவிதைக் கிணையும் இல்லை!
தேர்போல் சொற்கள் ஊர்வலம் போகும்!
ஏர்போல் உழுது பார்நலம் சூடும்!
சன்னல் நிலவைக் கன்னல் தமிழில்
காட்டும் ரூபனார்! பாட்டுப் புலவோர்
போற்றிப் புகழ்வார்! ஆற்றின் வளத்தால்
செழிக்கும் ஊராய்க்; கொழித்த புகழில்
செம்மைப் புலவன் கம்பன் போன்றே
வாழ்க! வளர்க! சூழ்க அருளே!

கவிஞர் கி. பாரதிதாசன்
தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு
25.08.2015

22 commentaires:

 1. சிறந்த கண்ணோட்டம்

  புதிய வலைப்பூவில் இணைய வாருங்கள்
  இவ்வலைப்பூவில் நான் இதுவரை பேணிவந்த ஆறு வலைப்பூக்களை ஒன்றாக்கிப் பேணுகின்றேன்.
  http://www.ypvnpubs.com/

  RépondreSupprimer
  Réponses

  1. வணக்கம்!

   ஒன்றாய் இணைத்த உயர்ந்த நிலைகண்டேன்!
   நன்றாய் அளித்தீர் நலம்!

   Supprimer
 2. வணக்கம் ஐயா!

  சாற்றுகவி தந்து சகோதரன் ரூபனை
  ஏற்றிப் புகழ்ந்தீர் இனிமையே! - போற்றிடும்
  தேன்தமிழ் நற்புகழ் சேர்த்திடும்! வாழ்கவென
  நானுமிங்கு வாழ்த்தினேன் நன்கு!

  எதுகை எகிறிக் குதிக்கச் சந்தம் துள்ள
  அதன் பொருளும் அற்புதமாக அமைந்த
  சாற்றுகவி தந்தீர்கள் ஐயா!

  போற்றுகின்றேன் உங்களை!
  மிகச் சிறப்பு! வாழ்த்துக்கள் ஐயா!

  இத்தகைய அருமையான வாழ்த்துக் கவி கிடைத்த
  இனிய சகோதரர் ரூபனை
  மேலும் அவர் பணிகள் சிறந்தோங்கி மகிழ
  உளமார வாழ்த்துகிறேன்!

  RépondreSupprimer
  Réponses

  1. வணக்கம்!

   இளமதி வந்தே இயற்றிய வெண்பா!
   உளமதில் நன்றே ஒளிரும்! - வளமுடைய
   வண்ணத் தமிழழகால் வல்ல மரபழகால்
   எண்ணம் சிறக்கும் இனித்து!


   Supprimer
 3. சன்னல் ஓர நிலாவைப் படைத்த நண்பர் ரூபனு வாழ்த்துக்கள். அவருடைய நிலாவை எங்களுக்கு அறிமுகப்படுத்திய உங்களுக்கு மனமார்ந்த நன்றி.

  RépondreSupprimer
  Réponses

  1. வணக்கம்!

   சன்னல் நிலவுக்குக் கன்னல் கவிபடைத்தேன்!
   மின்னும் தமிழால் விரைந்து!

   Supprimer
 4. தங்களின் வார்த்தைகளால் நானும் வாழ்த்துகின்றேன் ஐயா
  செம்மைப் புலவன் கம்பன் போன்றே
  வாழ்க! வளர்க! சூழ்க அருளே!

  தம +1

  RépondreSupprimer
  Réponses

  1. வணக்கம்!

   கரந்தைச் செயகுமார் கையளித்த வாழ்த்தும்
   உரமாய்க் கொடுக்கும் உயர்வு!

   Supprimer

 5. சன்னல் நிலவின் கவிதைகள் அத்தனையும்
  கன்னல் கனிகள்! கடைவிரித்தீர்! - முன்னோர்தம்
  நன்னடையில் தந்தீர் புகழ்அகவல்! அப்பப்பா
  இன்னடையில் தந்தீர் இதை!

  RépondreSupprimer
  Réponses

  1. வணக்கம்!

   ஈழக் கவிஞன்! இனிய தமிழரூபன்
   ஆழம் அளந்தே அணியளித்தேன்! - வேழமென
   வந்த பகைமுன் விளையாடும் வன்மறவன்!
   தந்த தமிழ்!..கனிச் சாறு!

   Supprimer
 6. வாழ்த்துக்கள் ஐயா! சிறப்பான சாற்றுக்கவி!

  RépondreSupprimer
  Réponses

  1. வணக்கம்!

   ஈட்டுபொருள் சாற்றுகவி ஏந்தும் வினைத்தொகை!
   ஓட்டும் வலியை உணர்ந்து!

   Supprimer
 7. சன்னல் நிலவுக்கு சாற்றிய கவியில் உள்ளம் மகிழ்ந்தோம்.
  வாழ்த்துகள் ரூபனுக்கும்.

  RépondreSupprimer
  Réponses

  1. வணக்கம்!

   சாற்றிய செந்தமிழைப் போற்றிய மென்காற்றே!
   ஊற்றிய தேனுண்[டு] உலவு!

   Supprimer
 8. சாற்றுக் கவி கண்டேன்! போற்றியே நானும் விண்டேன்

  RépondreSupprimer
  Réponses

  1. வணக்கம்!

   கவிகண்டு கன்னல் மொழிகொண்டு பூத்த
   குவிசெண்டு தந்தீர் குதித்து!

   Supprimer
 9. Ce commentaire a été supprimé par l'auteur.

  RépondreSupprimer
 10. வணக்கம் ஐயா!
  அருமையாக பாடி இன்னுமழகு சேர்த்திருக்கிறீர்கள் சன்னலோரக் கவிக்கு வாழ்த்துக்கள்...!
  சன்னல் நிலவழகு! சந்தநடை உன்னழகு!

  கன்னல் கவியிலே கண்டுவந்தேன்! - நின்னாற்றல்!
  எண்ணப் பெருவெளியில் ஏற்றம் பெறவேண்டும்
  இன்னும் எழுதும் இனித்து!

  அன்பான ரூபனின் அயராத உழைப்பும் தமிழ் வளர்க்க அரும்பாடு படும் அவர் ஆற்றலும் என்னை மிகவும் கவர்ந்திருகிறது. ஆற்றல் இன்னும் பெருக என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ...! அவர் மேற்கொண்ட இந்நிகழ்வு வெகு சிறப்படைய என் ஆசிகள் ....!

  சிந்தை குளிரும் செயல்கள் உவப்பே!
  வந்தணையும் சீர்பெறும் வாழ்வு !

  பயன்மிகும் காரியத்தை பற்ற புகழும்
  வியன்மிகு வையம் விரைந்து !

  RépondreSupprimer
 11. சாற்றுகவி கண்டு பூரித்து நின்றேன் அருமை !அருமை ஐயா !
  இருவருக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்
  வாழ்க வளமுடன் .

  RépondreSupprimer
 12. Thanks for your personal marvelous posting!
  I really enjoyed reading it, you could be a great author.Iwill remember to bookmark your blog and definitely will come back someday.
  I want to encourage one to continue your great posts, have a nice afternoon!

  Look into my webpage: How To Hack Tap Titans Android

  RépondreSupprimer
 13. அருமை ஐயா...
  தங்கள் இருவருக்கும் என் வாழ்த்துக்கள்.

  RépondreSupprimer
 14. வணக்கம் அய்யா,
  சந்தத்தின் சீர்கள் தங்கள் கரங்களில்
  சிந்தும் பாக்கள் கண்டு மனம்
  களிப்பது கன்னல் கவியில் தேன்
  காட்சி கண்ட தனால்
  வணங்குகிறேன். நன்றி.

  RépondreSupprimer