dimanche 31 août 2025

வெண்டுறை

 

வெண்டுறை  

 

மூன்றடி முதலா ஏழடி காறும்வந்து

ஈற்றடி சிலசில சீர்தப நிற்பினும்

வேற்றொலி விரவினும் வெண்டுறை யாகும்

                      [யாப்பருங்கலம் - 67]

 

        மூன்றடியாலும், நான்கடியாலும், ஐந்தடியாலும் ஆறடியாலும் ஏழடியாலும் வெண்டுறை வரும். [சிற்றெல்லை மூன்றடி, பேரெல்லை ஏழடி] கடைக்கண் ஓரடியிலும் பல அடிகளிலும் ஒரு சீரும் பல சீரும்  குறைந்து வரும். முன்னடிகளில் நான்கு சீர்களுக்குக் குறையாமல் எத்தனைச் சீர்களும் வரலாம். ஈற்றடிகளில் முச்சீருக்குக் குறையாமல் எத்தனைச் சீர்களும் வரலாம். [முதலில் நான்குச் சீர்களுக்குக் குறையாமல் வருதல், ஈற்றில் மூன்று சீர்களுக்குக் குறையாமல் வருதல் வெண்பா இனத்தின் பொது நெறியாகும்] ஒவ்வோர் அடியிலும் தகுந்த இடங்களில் மோனை அமைய வேண்டும். வெண்பாவினப் பொதுவிலக்கண நெறிப்படி அடிகள் யாவும் ஓரெதுகை பெற வேண்டும்.

 

        எல்லா அடிகளும் ஒரே ஓசையாய் வருவதும் உண்டு. வேறு வேறு ஓசைகளில் வருதலும் உண்டு. முதல் சில அடிகள் ஓரோசையாகவும், ஏனைய அடிகள்  வேறோர் ஓசையாகவும் வருதலுமுண்டு. பாடல் முழுதும் ஓரோசையாக வருவது ஓரொலி வெண்டுறை, வெவ்வேறோசையாக வருவது வேற்றொலி வெண்டுறை.

 

        மூன்றடி வெண்டுறை இன்னிசைச் சிந்தியல் வெண்பாவின் இனம், நான்கடி வெண்டுறை இன்னிசை அளவியல் வெண்பாவின் இனம், ஐந்து, ஆறு, ஏழு அடிகளைக் கொண்ட வெண்டுறை பஃறொடை வெண்பாவின் இனம்.

 

        ஓரொலி வெண்டுறை, வேற்றொலி வெண்டுறைப் பாடல்களில் ஓரொலி எவ்வாறு அமையும் என்ற விளக்கம் யாப்பிலக்கணத்தை உரைக்கும் முன்னை விளக்கவுரைகளிலும், இக்கால யாப்பிலக்கண உரை நுால்களிலும் காணவில்லை.

 

        சிதம்பரப் பாட்டியல் வெண்டுறையைக் கூறவில்லை. பாப்பாவினம் வேற்றொலிப் பாடல்களை மட்டும் காட்டுகிறது. தவத்திரு தண்டபாணி சுவாமிகள் இயற்றிய  அறுவகை இலக்கணம் வேற்றொலி வெண்டுறையை மட்டும் கூறுகிறது அவ்வேற்றொலி நான்கடியால்வர வேண்டும் என்று புதியநெறியை உரைக்கிறது. இனப்பாடல்கள் ஓரெதுகையில் அமையும் பொதுவிதியைக் கடந்து இரண்டு விகற்பத்தால் அமைந்த வேற்றொலி வெண்டுறையைக் நுால்களில் காண்கிறோம். வீரமாமுனிவா் அருளிய தொன்னுால் விளக்கத்திலும் இரு ஒலிக்கான குறிப்பு இல்லை. சில இலக்கண நுால்கள் ஓரொலி வெண்டுறையை வேற்றொலி என மாற்றி உரைக்கின்றன. இலக்கணப் புலவர் த. சரவணத்தமிழின் இயற்றிய யாப்பு நுாலில் வெண்டுறை இல்லை.      ஆர். சீனிவாசராகவாசார்ய சிரோமணி இயற்றிய யாப்பொளி எனும் நுாலில் ஓரொலி வேற்றொலி என்ற நெறியின்றி பாடல்கள் உள்ளன.

 

        புத்தமித்திரனார் இயற்றிய வீரசோழிய உரை நேரிசை வெண்பா தளை தட்டி ஓசை கொடின் வெண்டுறை என்று உரைக்கிறது. [வெண்பா பெற்றிருக்கும் உயர்வைக் கருதி இக்கருத்தை விட்டுவிட வேண்டும் என்பது என் கருத்து]

 

புலவர் குழந்தை எழுதிய தொடையதிகாரம் நுாலில் குறள் வெண்செந்துறையை வெண்டுறை என்று பதிவு செய்துள்ளார்.

 

கூவாய் பூங்குயிலே! குளிர்மாரி தடத்துகந்த

மாவாய் கீண்டமணி வண்ணனைவரக்

கூவாய் பூங்குயிலே

[நாலாயிரப் பனுவல், பெரிய திருமொழி - 1942]

 

        வெண்டுறையின் ஈற்றடி முச்சீருக்குக் குறைந்துவருதல் வெண்பா இனத்தின் பொது விதிக்கு மாறுபட்டதாகும்.

 

        முகநுால் பதிவுகளில் ஓரொலி என்று பெரும்பான்மை வேற்றொலி பாடல்களே பதிவாகி உள்ளன.

 

        ஓரொலி வேற்றொலி ஆகிய ஓசை வேறுபாட்டினையெல்லாம் வல்லார்வாய் கேட்டுணர்க என்னும் கருத்தும் யாப்பியல் நுாலில் பதிவாகி உள்ளது.

 

        இக்காலப் புலவர் பலர் ஓரே வாய்பாட்டில் அனைத்து அடிகளும் அமைதல் ஓரொலி வெண்டுறை என்றும், மேலுள்ள அடிகள் ஒரு வாய்பாட்டிலும் கீழுள்ள அடிகள் வேறு வாய்பாட்டிலும் அமைதல் வேற்றொலி வெண்டுறை என்றும் பாடல் எழுதியுள்ளனர். இவ்வாறு எழுதிய பாடல் முன்னை இலக்கண நுால்களில் உள்ள வெண்டுறைக்குப் பொருந்தவில்லை.

 

        ஓரொலி என்றால் என்ன? வேற்றொலி என்றால் என்ன? என்பதை அறிந்து கொள்ள எந்நுாலிலும் விளக்கம் இல்லை.

 

        ஓரொலி வெண்டுறை வேற்றொலி வெண்டுறை சிறப்புடைய ஏழு தளையாலும் சிறப்பில் ஏழு தளையாலும் கூறுபடுப்பப் பதினான்காம். பிறவாற்றால் விகற்பிக்கப் பலவாம் என யாப்பருங்கல விருத்தி யுரையில் காண்கிறோம்.

 

வெண்டுறை பாடலில் உள்ள அடிகள் அனைத்தும் முதல் இரு சீர்கள் ஒரே தளை பெற்று வருதல் ஓரொலி வெண்டுறை. வேறு வேறு தளை பெற்று வருதலும், முன்னடிகள் ஒரு தளையைப் பின்னடிகள் வேறு தளை பெற்று வருதலும் வேற்றொலி வெண்டுறை. இந்நெறியின்படி இலக்கண நுால் காட்டுகின்ற பாடல்கள் பெரும்பான்மை ஒத்து வருகின்றன. 

      

மூன்றடி வெண்டுறை

 

பரசிருக்கும் தமிழ்மூவர் பாட்டிருக்கும் திருமன்றில்

        பரசொன் றேந்தி

அரசிருக்கும் பெருமானார்க்[கு] ஆட்செய்யர் என்செய்வார்

முரசிருக்கும் படைநமனார் முன்னாகும் அந்நாளே

                                                  [சிதம்பரச் செய்யுட்கோவை மேற்கோள்]

 

பொன்னேந்திப் பொருளேந்திப் புவிபோற்றும்

புகழேந்திப் பூத்த வாழ்வு

துன்பேந்திக் கிடக்கிறது! துணையின்றித் தவிக்கிறது!

அன்பேந்தி அணைத்தவளே! அழவைத்துப் போனதுமேன்?

                         [பாட்டரசர் கி. பாரதிதாசன்] 31.08.2025

     
           இவை முதலடி அறுசீராய் ஏனையடி நாற்சீராய் அடிதோறும் முதல் இருசீர்கள் சிறப்புடைய கலித்தளையை வந்த ஓரொலி வெண்டுறை.

பாட்டரசர் கி. பாரதிதாசன்

31.08.2025


Aucun commentaire:

Enregistrer un commentaire