மகாகவி பாரதியார் மாநாடு வெல்க!
புதுவைக்குப்
புகழளித்தார்! சுற்றும் இந்தப்
பூமிக்கு நெறியளித்தார்! மேல்கீழ் ஒன்றும்
பொதுமைக்குக்
கவியளித்தார்! புரட்சி வேந்தர்
போற்றிடவே தமிழளித்தார்! சந்தம் சிந்தும்
எதுகைக்கும்
மோனைக்கும் எளிமை சூடி
எழில்கொடுத்த பாரதியார் ஆக்கம் தம்மை
முதுமைக்கும்
இளமைக்கும் கொண்டு சேர்க்க
முழக்கமிடும் மாநாடு வெல்க! வெல்க!!
திருவெல்லாம்
தமிழ்மக்கள் காண வேண்டித்
திறமெல்லாம் தந்நாடு ஏற்க வேண்டி
உருவெல்லாம்
ஞானவொளி மின்ன வேண்டி
உலகெல்லாம் படைத்தவனை வணங்க வேண்டித்
தெருவெல்லாம்
தமிழ்முழக்கம் ஒலிக்க வேண்டித்
சிறப்பெல்லாம் பாரதியார் பாட்டுள் வைத்தார்!
கருவெல்லாம்
அன்பூறும் ஆக்கம் ஆய்ந்து
கமழ்கின்ற மாநாடு வெல்க! வெல்க!!
சொல்புதிது!
பொருள்புதிது! சுவைக்கும் வண்ணம்
சோதிமிகு நவகவிதை படைத்தார்! முத்தாய்ப்
பல்புதிது முளைக்கின்ற
மழலைக் கின்பம்
படைக்கின்ற நற்றமிழை வடித்தார்! காட்டில்
நெல்புதிது
காணுகின்ற உழவன் போன்று
நெஞ்சுவந்து பாரதியார் நெய்த நுால்கள்
வல்புதிது நமக்கேற்றும்!
மனிதம் போற்றும்!
வரலாற்று மாநாடு வெல்க! வெல்க!!
பாட்டரசர்
கி. பாரதிதாசன்
25.08.2025
Aucun commentaire:
Enregistrer un commentaire