samedi 9 août 2025

வெள்ளொத்தாழிசை

 



இன்னிசை வெள்ளொத்தாழிசை

[மூன்று சிந்தியல் வெண்பாக்கள் ஒரு பொருள் மேல் வந்தால் அதனை வெள்ளொத்தாழிசை என்பர்]

 

பேரறிஞர் அண்ணா

 

ஒன்றே குலமாம்! ஒருவனே தேவனாம்!

நன்றே நவின்று நலமளித்த பேரறிஞர்!

மன்றே மகிழும் மலர்ந்து!

 

ஏழை சிரிப்பில் இறைவன் இருக்கின்றான்

ஊழை நினைந்தே உருகாதே! பேரறிஞர்

வாழை மனத்தார் வணங்கு!

 

மாற்றான் மலரும் மணம்வீசும் என்றுரைத்தார்!

போற்றார் வியக்கப் புகழ்பெற்றார்! பேரறிஞர்

ஊற்றாய் அளித்தார் உவப்பு!

                          

அண்ணா பிறந்தார் அறி!

 

எண்ணா யிரங்கோடி எம்மண் தவமிருந்து

பண்ணார் தமிழின் படைநடத்தப் பேரறிஞர்

அண்ணா பிறந்தார் அறி!

 

மண்ணார் மடமையெலாம் மாய்ந்தொழிய, ஈடில்லாத்

தண்ணார் தமிழின் தகையொளிரப் பேரறிஞா்

அண்ணா பிறந்தார் அறி!

 

கண்ணீர் துடைத்திடவும் கன்னல் அளித்திடவும்

விண்ணீர் நலமாய் விளைந்திடவும் பேரறிஞா்

அண்ணா பிறந்தார் அறி!

                          

தமிழ் மணக்கும் பேரறிஞர்

 

சீர்மணக்க நம்நிலத்தைச் செந்தமிழ் நாடென்று

பேர்மணக்கச் செய்த பெருமகனார்! பேரறிஞர்

பார்மணக்கத் தந்தார் பயன்!

 

பண்மணக்கும் பைந்தமிழை மண்மணக்கப் பேசியவர்

பெண்மணக்குங் சட்டங்கள் பேணியவர்! பேரறிஞர்

விண்மணக்குங் செங்கதிர் வேந்து!

 

தேர்மணக்கும் தென்னவரின் வேர்மணக்கும் நல்லாட்சி!

ஊர்மணக்கும் நற்றொண்டு! தார்மணக்கும் பேரறிஞர்!

நேர்மணக்கும் என்றன் நினைவு!

 

எங்கள் அண்ணா!

 

வானறிவு! சொற்கள் மதுவூற்று! பூங்காற்று!

நானறிவு பெற்ற நறுஞ்சாலை! மின்னெருப்பு!

தேனறிவு அண்ணா சிறப்பு!

 

சொல்லேந்தும் தீ!தேன் சுவையேந்தும் சிந்தனை!

மல்லேந்தும் போர்நிலம்! வான்மழை! மென்காற்று!

வல்லேந்தும் அண்ணா மனம்!

 

கவிவூற்று! கன்னல் கலைமன்றம்! வான்சீர்

குவியாற்றுத் தென்றல்! கொடும்பகைக்குத் தீ!இப்

புவிபோற்றும் அண்ணா புகழ்!

 

பாட்டரசர் கி. பாரதிதாசன்

தலைவர்
கம்பன் கழகம் - பிரான்சு

உலகத் தமிழ்ச் சிறகம்

தொல்காப்பியர் கழகம், பிரான்சு.

பாவலர் பயிலரங்கம், பிரான்சு.

07.08.2025


Aucun commentaire:

Enregistrer un commentaire