samedi 9 août 2025

வெள்ளொத்தாழிசை

 


நேரிசை வெள்ளொத்தாழிசை

.

புரட்சியாளர் பெரியார்

.

நாடு திருத்தி நலம்பெற வேண்டுமென

ஓடு தளர்ந்தும் உழைத்திட்டார்! - சூடுவர
ஏடு படைத்தார் எமக்கு!

.

மண்ணே திருத்தி மகிழ்ச்சிபெற வேண்டுமென

கண்ணே தளர்ந்தும் தினங்கற்றார்! - வெண்மனத்தால்

பண்ணே படைத்தேன் பணிந்து!

.

மக்கள் திருத்தி உயிர்மானம் வேண்டுமெனப்

பக்கம் தளர்ந்தும் படித்திட்டார்! - எக்காலும்

நக்கும் நரியை நசித்து!

.

தந்தை பெரியார்!

.

தந்தை பெரியாரைச் சாற்றும் திசைநான்கும்

சிந்தை யுலகத்தைச் சீர்திருத்தும்! - எந்நாளும்

விந்தை புரிந்தார் விழித்து!

.

எங்கள் பெரியாரை ஏத்தும் திசைநான்கும்!

மங்கும் உலகத்தை மாற்றியவர்! - செங்கதிராய்

அங்கம் உடையார் அவர்!

.

வல்ல பெரியாரை வாழ்த்தும் திசைநான்கும்!

நல்ல வுலகத்தை நன்குரைத்தார்! - சொல்யாவும்

வெல்லும் பகையை விரைந்து!

.                            

தன்மானப் பாசறை

.

ஈரோட்டுப் பாசறையின் போரீட்டிச் சிந்தனையால்

சீராட்டும் நல்வாழ்வைப் பார்காணும்! - பாராட்டி

ஏரோட்டும் என்றன் எழுத்து!

.

காராடைப் பாசறையின் போரீட்டிச் சிந்தனையால்

பேரோடை போல்மேடை சீரளிக்கும்! - கேரளத்தில்

வேரோடு சாய்த்தார் விதி!

.

தன்மானப் பாசறையின் பொன்னான சிந்தனையால்

நன்மானங் காத்து நலம்பெற்றோம்! - இன்புற்றோம்!

தென்ஞான முற்றோம் தெளிந்து!

.

பகுத்தறிவு வேந்தர்!

.

பகுத்தறிவு வேந்தர்! படைத்தபுகழ்ப் பாதை

வகுத்தறிவு ஊட்டும்! வளர்க்கும்! - தொகுத்து

மிகுத்தறிவு சூட்டும் விரைந்து

.

வெல்லறிவு வேந்தர் விடுதலை ஏடளித்தார்!

வல்லறிவு சூட்டும்! வழிகாட்டும்! - நல்லவரைச்

சொல்!..அறிவு பூக்கும் சுடர்ந்து!

.

சீர்திருத்த வேந்தர்! செயல்யாவும் தன்மான

வேர்நிறுத்தி மேன்மை விளைத்தனவே! - பார்..திருத்தி

கூர்நிறுத்தித் தீர்த்தார் குறை!

.

பாட்டரசர் கி. பாரதிதாசன்

தலைவர்
கம்பன் கழகம் - பிரான்சு

உலகத் தமிழ்ச் சிறகம்

தொல்காப்பியர் கழகம், பிரான்சு.

பாவலர் பயிலரங்கம், பிரான்சு.

07.08.2025

Aucun commentaire:

Enregistrer un commentaire