ஒரு பொருண்மேல்
ஐந்து அடுக்கி
நிரையொன்றாசிரியத்
தளையான் வந்த
நேரிசை வெண்டாழிசை
இளையவள்… இனியவள்...
இலைபுரி பசுமையை
இடுபவள்! இளையவள்!
கொலைபுரி விழிகளின்
குலமகள்! - மலைமகள்!
கலைப்புரி அவளுடைக்
கழுத்து!
கருங்குழல்
உடையவள்! கருணையின் கடலவள்!
அருங்குறள்
நெறியினை அணிந்தவள்! - திருமகள்!
ஒருகுறை இனியிலை
உயிர்க்கு!
சிலையென மிளிர்பவள்!
செழுமையைத் தருபவள்!
தலையெனத் தமிழினைத்
தரித்தவள்! - கலைமகள்!
மலையெனக் கனவுகள்
வரும்!
அமுதென இனிப்பவள்!
அழகொளிர் பொழிலவள்!
குமுதென மலர்ந்தவள்!
குயிலவள்! - தமிழ்மகள்!
எமக்கினி வருமிடர்
இலை!
கனியவள்! கவியவள்!
கலையவள்! களிப்பு..அவள்!
பனியவள்! பயிரவள்!
பளிங்கவள்! - இனியவள்!
இனி..எவள்
அவளிணை இயம்பு?
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்
கம்பன் கழகம் - பிரான்சு
உலகத்
தமிழ்ச் சிறகம்
தொல்காப்பியர்
கழகம், பிரான்சு.
பாவலர்
பயிலரங்கம், பிரான்சு.
15.08.2025
Aucun commentaire:
Enregistrer un commentaire