lundi 4 juillet 2022

நன்றி..நன்றி..நன்றி..

நன்றி..நன்றி..நன்றி..


ஏன்பிறந்தேன் என்றெண்ணி வாடும் வேளை

        இவ்வரங்கின் பாவலர்காள்  ஒன்றாய்க் கூடி

நான்பிறந்தேன் தமிழ்காக்க, உரிமை காக்க,

        நற்றமிழர் மாண்பியலை நன்றே காக்க,

வான்பிறந்தேன் மழையாக, கம்பன், கீரன்,

        வழிபிறந்தேன்! மறவரணி பிறந்தேன்! சந்தத்

தேன்பிறந்தேன் என்றழகாய்ப் போற்றிப் பாடிச்

        சீருரைத்தீர்! மகிழ்வுற்றேன்! நன்றி! நன்றி!!

 

முன்வினையின் செயலென்று மூளை சோர்ந்து

        மூலையிலே முடங்கியுயிர் கிடக்கும் வேளை

என்வினையின் செயல்யாவும் தமிழர் ஏற்றம்!

        எண்டிசையும் புகழ்பாடி நாளும் போற்றும்!

பொன்வினையின் அணியாகப் பாக்கள் மின்னும்!

        புலவர்தம் உள்ளத்தைச் சேர்த்தே பின்னும்!

இன்வினையின் நலமாக வாழ்த்துப் பாடி

        என்னுயிரை மகிழ்வித்தீர்! நன்றி! நன்றி!!

 

என்னென்றும் ஏதென்றும் அறியா வண்ணம்

        என்றலையைத் துயர்கூடி அழுத்தும் வேளை

துன்பென்னும் கடலுக்குள் முழுகா வண்ணம்

        தேணியெனக் கவியளித்தீர்! கரையைக் கண்டேன்!

வென்றென்றும் வாழ்கின்ற புலமை போற்றி,

        விழியிரண்டில் கமழ்கின்ற கருணை சாற்றி,

அன்பென்னும் ஆரமுதை யள்ளி யூட்டி

        அகங்குளிரச் செய்வித்தீர்! நன்றி! நன்றி!!

 

நாளெல்லாம் நற்பணிகள் செய்த போதும்

        நலிவுற்ற காரணத்தை அறியா வேளை

தோளெல்லாம் கவிமாலை சுமக்கச் செய்தீர்!

        துணையில்லா வாழ்க்கைக்குத் துணிவைத் தந்தீர்!

தாளெல்லாம் கிறுக்குகின்ற குழந்தை போன்று

        தத்தளித்து மகிழ்வுற்றேன்! தமிழே யுண்டேன்!

கோளெல்லாம் என்செய்யும்? உங்கள் வாழ்த்துக்

        குன்றெனவே எனைக்காக்கும்! நன்றி! நன்றி!!

 

விதிசெய்த சூழ்ச்சியிலே சிக்கிச் சிக்கி

        வீழ்வுற்றுத் துயரடியில் சுருண்ட வேளை

மதிசெய்த செந்தமிழால் விடிவைக் காட்டி,

        மதுச்செய்த விருத்தத்தால் இனிமை கூட்டி,

நதிசெய்த இருகரையாய்க் காவல் நாட்டி,

        நரம்புக்குள் புத்துணர்வை நன்றே ஏற்றி,

துதிசெய்த அருட்பாவாய் வாழ்த்தைத் தந்தீர்!

        தொடர்கின்றேன் தமிழ்ப்பணியை! நன்றி! நன்றி!!

 

பாட்டரசர் கி. பாரதிதாசன்

கம்பன் கழகம் பிரான்சு

தொல்காப்பியர் கழகம் பிரான்சு

02.07.2022

Aucun commentaire:

Enregistrer un commentaire