vendredi 22 juillet 2022

தாப்பிசைப் பொருள்கோள்

 


தாப்பிசைப் பொருள்கோள்

 

இடைநிலை மொழியே ஏனை ஈரிடத்தும்

நடந்து பொருளை நண்ணுதல் தாப்பிசை

 

[நன்னுால் - 415] [ இலக்கண விளக்கம் - 366]

 

தாப்பிசை முதல்கடைத் தன்பொருள் தருமொழி

யாப்பிசை இடையே இயம்புதல் என்ப.

 

[தொன்னுால் விளக்கம் - 310]

 

இடைமொழி முதலினும் ஈற்றினும் எய்தித்

தருவது பொருளைத் தாப்பிசை யாகும்.

 

[முத்துவீரியம் செய்யுளணி - 28]

 

... நடுச்சொல் முதல் கடைபோய் தெளிதல்....

 

[சுவாமி நாதம் - 69.2.3]

 

தாம்பு + இசை =  தாப்பிசை [வலித்தல் திரிபு

தாம்பு -  ஊஞ்சல் கயிறு

இசை - சொல்

 

செய்யுளின் இடையில் நிற்கும் சொல் ஊஞ்சல் கயிறு போல் முன்னும் பின்னும் சென்று பொருள் கொள்ளுமாறு அமைவது தாப்பிசைப் பொருள்கோள் எனப்படும்.

 

உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊன்உண்ண

அண்ணாத்தல் செய்யாது அளறு

 

இக்குறளில் ஊன் என்பது இடைநிலை மொழி.

 

ஊன் உண்ணாமை உள்ளது உயிர்நிலை

ஊன் உண்ண அண்ணாத்தல் செய்யாது அளறு

 

இடையிலே நின்ற ஊன் என்ற ஒருசொல் முன்னும் பின்னும் வந்து 'ஊன் ஊண்ணாமை', 'ஊன் உண்ண' என்று பொருள்கொள்வது தாப்பிசைப் பொருள்கோள் ஆகும்.

 

துன்பம் நிறைந்திடுமோ? தொல்லை தொடர்ந்திடுமோ?

இன்னல் வெறுப்பும் இருந்திடுமோ?  - அன்பிருந்தால்

முற்றி உறவோங்கும்! சுற்றி மகிழ்வோங்கும்!

பற்றிப் படர்ந்தோங்கும் பண்பு!

 

மேலுள்ள வெண்பாவில் இடையில் நின்ற சொல் அன்பிருந்தால் துன்பம், தொல்லை, இன்னல் இல்லையென முன்னுள்ள அடிகளுக்கு, அன்பிருந்தால் உறவு, மகிழ்வு? பண்பு  ஓங்கும் என பின்னுள்ள அடிகளுக்கும் பொருள்கொள்ளச் செய்தது.

 

இதனை இடைநிலைத்தீவகம் என்ற பொருளணி வகையாக்குவர் அணி நுாலார்.

 

பாட்டரசர் கி. பாரதிதாசன்

03.10.2021

Aucun commentaire:

Enregistrer un commentaire