dimanche 17 juillet 2022

வெண்பா மேடை - 220

 

வெண்பா மேடை - 220

பொருள்கோள் இலக்கணம்

பொருள்கோள் = பொருள் கொள்ளும் முறை

தொடை முதலிய நயங்கருதிச் சொற்கள் விகாரப்படுமாறு கூறி அந்நயங் காரணமாகச் செய்யுட்கண் முறைபிறழக் கிடக்கும் சொற்களை முறைப்படுத்திப் பொருள்கொள்ளும் மொழிபுணரியல்பைப் பொருள்கோள் மரபு எனக் கூறுவர் புலவர். மொழிபுணரியல்பு நான்கு வகைப்படுமெனத் தொல்காப்பியம் கூறும்.

பொருள்கோள் எட்டு வகையென நன்னுால் உரைக்கும்.

 

1. யாற்றுநீர்ப் பொருள்கோள்

2. மொழிமாற்றுப் பொருள்கோள்

3. நிரனிறைப் பொருள்கோள்

4. விற்பூட்டுப் பொருள்கோள்

5. தாப்பிசைப் பொருள்கோள்

6. அளைமறி யாப்புப் பொருள்கோள்

7. கொண்டுகூட்டு் பொருள்கோள்

8. அடிமறிமாற்றுப் பொருள்கோள்

 

இலக்கணவிளக்கம் [361], தொன்னுால் விளக்கம் [305] ஆகிய இரண்டு நுால்களும் நான்னுால் கருத்தையே எடுத்தோதும்.

 

பொருள்கோள் ஒன்பது வகையென யாப்பருங்கல உரையில் காணலாம். தண்டியலங்காரம்  நிரனிறையணி என இரண்டு வகையை எடுத்துரைக்கும். மாறனலங்காரம்  நிரனிறை அணியைப் பன்னிரண்டு வகையாகக் கூறும். வீரசோழிய உரை பொருள்கோள் இருபது என விரித்துரைக்கும். இறையனார் களவியல் உரை பொருள்கோள் ஐந்தெனக் காட்டும்

 

விற்பூட்டுப் பொருள்கோள் வெண்பா

வில்லை நாணேற்றும் போது, நாண் கயிற்றைக் கீழே இருந்து இழுத்து, மேலே கொண்டுபோய் முடிந்து வில்லை வளைத்தல்போல், பாடல் முதலில் நிற்கும் சொல்லும், பாடல் இறுதியில் நிற்கும் சொல்லும் தம்முள் பொருள் முடிபு கொள்ளுதல்  விபூட்டுவில் பொருள்கோளாகும்.

 திறந்திடுமின், தீயவை பிற்காண்டும் மாதர்
இறந்து படின்பெரிதாம் ஏதம் - உறந்தையர்கோன்
தண்ணார மார்பன் தமிழர் பெருமானைக்
கண்ணாரக் காணக் கதவு

[முத்தொள்ளாயிரம் - 42]

 பாடல் விளக்கம்

தீங்குகள் நேருமாயின் பின்பு பார்த்துக் கொள்வோம்.சோழனைக் காணுதற்கு மிக்க ஆசை கொண்டு வந்துள்ள மகளிர், அவனைக் காணாமையாலாகிய வருத்த மிகுதியால் இறந்தொழிந்தால் பெண் கொலையாகிய பெரும் பாவம் விளையும். ஆதலால், உறையூர் மன்னன், குளிர்ந்த முத்துமாலைகளை அணிந்த மார்பன், தமிழ் வல்லார்க்குத் தலைவனாகிய சோழனைக் கண்கள் களிக்கக் கதவுகளைத் திறந்துவிடுங்கள்.

 கதவு என்ற ஈற்றுச் சொல், திறந்திடுமின் என்ற முதல் சொல்லுடன் பொருள் கொண்டது.

 மாடுதின்பான் பார்ப்பான் மறையோது வான்குயவன்
கூடிமிக மண்பிசைவான் கொல்லனே - தேடி
இரும்படிப்பான் செக்கானெண் ணெய்விற்பான் வண்ணான்
பரும்புடைவை தப்பும் பறை.

[காளமேகப் புலவர்]

பாடல் விளக்கம்

 பறையன்  இறந்த மாட்டைக் கொண்டு சென்று தின்பான். அந்தணன் வேதத்தை ஓதுவான். குயவன் மண்ணை நன்றாகப் பிசைந்து பாண்டம் செய்வான். கொல்லன் இரும்பினைக் காச்சி அடிப்பான். வாணியன் எண்ணெயாடி விற்பான். வண்ணான் சேலைகளைத் தோய்ப்பான்.

கொலுசொலிரும் கையில் வளையொலிரும் கூந்தல்

மலரொளிரும் காது மணியொளிரும் கண்ணிமைகள்

காரொளிரும் நாக்குக் கவியொலிரும் வேயிருதோள்

தாரொளிரும் பெண்ணவள் தாள்

[பாட்டரசர்]

தாள் கொலுசொலிரும்! கையில் வளையொலிரும்! கூந்தல் மலரொளிரும்!

காது மணியொளிரும்! கண்ணிமைகள் காரொளிரும்! நாக்குக் கவியொலிரும்!

வேயிருதோள் தாரொளிரும் பெண்ணவள்!

 என இவ்வெண்பாவின் ஈற்றுச்சீரிலிருந்து முதல்சீருக்குப் பொருள் பூட்டி உரை காண்பது விற்பூட்டுப் பொருள்கோளாகும்

பாட்டரசர் கி. பாரதிதாசன்

கம்பன் கழகம் பிரான்சு

தொல்காப்பியர் கழகம் பிரான்சு

பாலவர் பயிலரங்கம் 

17.07.2022


Aucun commentaire:

Enregistrer un commentaire