கலிவிருத்தம் - 3 [இழைபு அமைந்தது]
குறிலீற்றுமா + கூவிளம் + கூவிளம்+ கூவிளம்
மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈசன் எந்தை யிணையடி நீழலே!
[திருநாவுக்கரசர் தேவாரம்]
சிந்தை இன்புறும்! செவ்வுரை சீர்தரும்!
முந்தை நன்னெறி முன்வரும் பேர்தரும்!
விந்தை மின்னிட மேன்மையின் தார்தரும்!
எந்தை பாடிய இன்றமிழ் வண்ணமே!
[பாட்டரசர்]
கன்னல் ஊறிடும்! காதலை ஏந்திடும்!
இன்னல் மாறிடும்! இன்னிலை ஓங்கிடும்!
தென்றல் வீசிடும்! தேன்கவி பேசிடும்!
என்னுள் வந்தவள் என்னவோ செய்கிறாள்!
[பாட்டரசர்]
வல்லொற்றே வாராமல் நெடிலும் மெல்லொற்றும் மிகுதியாக வரும் பாடல் இசைக்கு ஏற்றதாயிருக்கும். அதனை இழைபு என்னும் வனப்பு என்பர். மேற்கண்ட பாடல்களில் இவ்வியல்புகளைக் காண்க.
கலிவிருத்தம் ஓரடியில் நான்கு சீர்களைப் பெறும். நான்கடிகள் ஓரெதுகையில் அமையும். ஒன்று மூன்றாம் சீர்களில் மோனை வரும்.
மேலுள்ள இழைபு கலிவிருத்தம் குறிலீற்றுமா + கூவிளம் + கூவிளம்+ கூவிளம் என்ற வாய்பாட்டில் அமைந்தது.
இவ்வகைக் கலிவிருத்தத்தில் கூவிளம் வரும் இடங்களில் மாங்காய் அருகி வரும்.
விளம்வரும் இடத்தில் மாச்சீர் வந்து அடுத்து வரும்சீர் நிரை முதலால் அமையும்!
இவ்வகையில் நேரசையில் தொடங்கினால்
11 எழுத்தும், நிரையசையில் தொடங்கினால் 12 எழுத்தும் இருக்கும்.
குறிலீற்றுமா + கூவிளம் + கூவிளம்+ கூவிளம் என்ற வாய்பாட்டில் விரும்பிய தலைப்பில் இழைபு கலிவிருத்தம் ஒன்று இயற்றுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
அன்புடன்
பாட்டரசர் கி. பாரதிதாசன்
கம்பன் கழகம் பிரான்சு
தொல்காப்பியர் கழகம், பிரான்சு
25.06.2022
Aucun commentaire:
Enregistrer un commentaire