வழிநடைச்சிந்து
ஆண்
கைத்தறிச் சேலைகட்டி வாடி - கண்ணே
கார்குழலில் வாசமலா்க் கட்டுப்பல சூடி!
பைத்தியம் ஆக்குமாசை கூடி - உன்றன்
பார்வையினால் பாடுகவே பாடல்பல கோடி
பெண்
கம்பனை விஞ்சுகின்ற கண்ணா - உன்றன்
காதல்மொழி கேட்டுக்கரை யாதவளும் பெண்ணா
நம்..பனைத் தோளுடைய மன்னா - என்றன்
நாடிநரம் புருகிடும் நல்லகவி சொன்னா
ஆண்
ஏரிகரைப் பாதைவழி செல்ல - அன்பே
என்னுடன் வந்திடுவாய் அன்னமென மெல்ல
வாரியுனை நானணைத்துக் கொள்ள - அங்கே
வண்ணமலர்ச் சோலையுண்டு மன்மதனை வெல்ல
பெண்
ஆழ்கிணறு பாயும்வயல் காடு - அங்கே
அல்லிமலர் வண்டுடனே ஆடும்உற வோடு
யாழ்வளைவு மங்கையுட லோடு - கொஞ்சி
ஈந்தஇசை கேட்டிடவே ஏங்கும்உயிர்க் கூடு
ஆண்
கத்தரிக்காய்க் கொல்லைதனில் அன்று - உன்றன்
கட்டழகில் காளையிவன் கண்மயங்கி நின்று
சத்தியமாய்ச் சொல்லுகிறேன் ஒன்று - உன்றன்
தங்கவுடல் மின்னியதே தண்ணிலவை வென்று!
பெண்
தென்னைமரச் சாலைதனை முந்து - பாடும்
சிந்தைதனில் பொங்கிவரும் சந்தமொலிர் சிந்து!
முன்னேவரும் ஐயன்கோவில் சந்து - மச்சான்
முக்கழகு முட்டுமெனை மோகநிலை தந்து
ஆண்
வந்தது..பார் வாழைமரத் தோப்பு - வீசும்
வாடையென வாட்டுதடி வஞ்சியுன்..மா ராப்பு!
தந்தது..பார் தாழைமனங் காப்பு - நீ..தான்
தாவிவந்து தாளமிடும் தங்கத்தமிழ் யாப்பு
பெண்
முட்டுவழிச்
சாலையினைத் தாண்டி - வாழ்வில்
மோதுவினை நீங்கிடவே முன்னவனை வேண்டி
எட்டுவழிச் சந்தையிலே தோண்டி - வாங்கி
ஏற்றிடுவாய் தலைமீதே என்னழகைத் தீண்டி
ஆண்
முத்துமாரி அம்மன்அரு ளாலே - வண்டு
முத்தமிட்டு மொய்க்குதடி முல்லைமலர் மேலே
பித்துமேறி வாடுமனத் தாலே - உன்றன்
பின்னழகு
தாக்குதடி மின்னலொளி போலே!
பெண்
நீர்பாயும் நெல்வயலைப் பாரு - வாய்க்கால்
நீந்திவரும் மீன்மகிழ நீயிடுவாய் சோறு
மார்பாயும் காதலெனும் ஆறு - மச்சான்
மதுபாயும் வண்டமிழை வாய்மணக்கக் கூறு
பாட்டரசர் கி பாரதிதாசன், 31.03.2021
Aucun commentaire:
Enregistrer un commentaire