vendredi 12 mars 2021

பதினாறு ஆரச் சக்கரம்

 


பதினாறு ஆரச் சக்கரம்

 

ஆசரியப்பா

 

மாறுக!வேர் செம்மொழி மணமெழ! வாயைந்து

மாறண்புக் காவி பொழின்மா வுற்றுக்காண்!

சேர்மின் குணம்!பொழி லாய்ப்பிணை கருணை!

வார்குழை நறுமகழின் மேலற வண்புக

மாமதீ விண்ணரு ளெழிமேவும் விண்டுமிக

நா, மார் பணுவிட் டொழி!யேந்தி நாம்தொழுது

தண்வளஞ் சூடிவழி யேதெண்டா! வழுமிகு

புண்டிளை சுரண்டழி! பொளிக தார்வாழ்வு!

மாற்று மாசையே! சேர்க வாழணி

மாற்று நானுறு தவிப்பு வாதே !

துணைவெண் ணருணை சூடு கவிதை!

கணையே! துலாமே! குணமே வுகவே!

 

சிந்தியல் வெண்பா

 

கண்மிகு தீர்வடியைக் கண்டு தொழுவார்க்கு

நண்ணுஞ் சுழற்பிறவி நாடாதாம்! விம்மருட்

டிண்ணமாய் மேவுந் தெளி!

 

அருஞ்சொற்பொருள்

 

வாய் ஐந்து - மெய், வாய், கண், மூக்கு, செவி

ஆறு - வழி

அண்பு - கிட்டுதல்

காவி - துாய்மை நிறம்

பொழில் - பெருமை, சோலை

வார் - நேர்மை, நுண்மை

அகழி - கேணி

விண்டு - அறநுால்

தெண் - தெளிவு

கணை - நிறைவு

துலாம் - நிறைகோல்

மேவுதல் - ஓதுதல்

விம்மு - மிகுதல்

 

கருத்துரை

 

செம்மொழிவேர் மணமெழும் வண்ணம் நெஞ்சம் மாறவும், ஐம்பொறியைக் அடக்கும் வழியடைந்து செம்மை செழிக்கும் சோலையழகு காணவும், குணங்கள் சேரவும், கருணை மலரவும், நேர்மை இணைந்திருக்கவும், குளிர்கேணியின் தண்மைபோல் ஓங்கும் அறமாகிய கொடைப்பண்பு வரவும், விண்ணருளையும், அழகுதரும் அறநுாலையும் அரிய மதியுள் மிகுக்கவும்,  நாவிலும் மனத்திலும் சிறுமை விட்டொழியவும், மனமொன்றி இறைவனைத் தொழுவோம். தண்வள மேற்று  வாழ்வின் பாதையில் தெளிவைத் தரவும், குற்றமிகு புண்ணில் திளைக்கின்ற செயல்களச் சுரண்டி அழிக்கவும், தார்சூடும் வாழ்வச் செதுக்க வேண்டும். வாழுகின்ற அணிகளை சேர்க்க வேண்டும்.  நாச்சுவைக்குத் தவிக்கின்ற சண்டையை  மாற்ற வேண்டும். திருநீர் மணக்கும் ஈசன் கவிதைகளைச் சூட வேண்டும். அதுவே நமக்கு துணையாகும்.  நிறைவையும், நிறைகோலென வாழுவும், ஒழுக்கமும் அடையவேண்டும் .

 

இது, மேலாரின்முனை தொடங்கியிறங்கிக் கீழாரின் முனையிறுதி சென்று முதலடி முற்றி, அதனையடுத்த இடப்பக்கத்து ஆரின்முனை தொடங்கி வலப்பக்கத்து ஆரின்முனையிறுதி சென்று இரண்டாமடி முற்ற, இவ்வாறே  3, 4, 5, 6, 7, 8 ஆம் அடிகள் முற்றி,  முதலடி தொடங்கிய 'பெ' தொட்டு வட்டைவழியே யிடஞ்சுற்றி 9, 10, 11, 12 ஆம் அடிகள் முற்றியவாறு காண்க.

 

முதற்கண் நின்ற எட்டடிகள் ஒவ்வொன்றும் 17 எழுத்துக்களைப் பெற்றன. ஈற்றில் நின்ற நான்கடிகள் ஒவ்வொன்றும் 12 எழுத்துக்களைப் பெற்றன. செய்யுளில் அமையும் எழுத்துக்கள் 184. சித்திரத்தில் அமையும் எழுத்துக்கள் 161.

 

1, 2, 3, எண்களை இடஞ்சுற்றிப் படிக்கச் சிந்தியல் வெண்பா நிறைவுறும்.

 

பாட்டரசர் கி. பாரதிதாசன்

11.03.2021

Aucun commentaire:

Enregistrer un commentaire