dimanche 18 avril 2021

தெம்மாங்கு

 

சிந்துப்பா மேடை - 18

தெம்மாங்கு

வாழையடி யுன்கூந்தல் வயிரமடி பற்காவி

ஏழையடி நானுனக்கு மானே - இன்னும்

இரங்கலையோ உன்மனது தேனே

அடி : நான்மையின ஏகம் நான்மை நடையில் 3 வட்டணையில் அமைந்த ஓரடிப் பாடல்

'வாழை' முதல் 'தேனே' வரை 12 சீர்களையுடை ஓரடி.  ஒவ்வொரு சீரும் 4 சிந்தசைகளைக் கொண்டிசைக்கும். மேலுள்ள பாடலில் 7 சீரின் ஈறு நான்கு அசைகள் நீண்டு ஒலித்து 7, 8 ஆம் சீர்கள் ஒவ்வொன்றும் நான்கு அசைகளைப் பெறும். 11 ஆம் சீரின் ஈறு ஆறு அசைகள் அளபெடுத்து நீண்டிசைக்கும்.

1,5 ஆம் சீர்கள் எதுகை பெற்றுவரும் [வாழை - ஏழை]

1, 3 ஆம் சீர்களில் மோனை பெறவேண்டும் [வாழை - வயிரம்]

5, 9 ஆம் சீர்கள் மோனை பெறவேண்டும் [ஏழை - இரங்கலை]

அசை பிரித்தல்

வா/ழை/ய/டி  யுன்/கூந்/தல்/வ  யி//ர/ம/டி பற்/கா/வி/o

ஏ/ழை/ய/டி  நா/னு/னக்/கு  மா/னே/o/o - o/o/இன்/னும்

இரங்/க/லை/யோ  உன்/ம/ன/து  தே/னே/o/o  o/o/o/o

1.

ஒத்தையடிப் பாதையிலே உன்னதேடி நானும்வரேன்

கொத்துமலர் ஆடுதடி வண்டு - கூடிக்

கோலநடை போடுதடி நண்டு

2.

துள்ளிவரும்  சின்னமுயல் சொல்லுதடி உன்னழகை,

கள்ளியினைத் தேடுதடி நெஞ்சம் - வண்ணக் 

காலழகைப் பாடுதடி மஞ்சம்!

 3.

பின்னுகின்ற சடையாகக் பின்னுகிறாய் என்னுயிரை

மின்னுகின்ற கண்ணழகைக் காட்டி - இன்ப

மீட்டுகின்ற பண்ணழகை யூட்டி

4.

துள்ளிவரும் காளைமனம் சுற்றுமடி உன்னழகை

அள்ளிவரும் ஆசைபல கோடி -  கண்ணே

ஆடி..வரும் மாதமினி வாடி

 5.

பம்பிறைக்கும் நீர்வயலைப் பார்த்துமனம் ஏங்குதடி

வம்பிறைக்கும் உன்செயலை யெண்ணி - நற்றேன்

வாயிறைக்கும் சீர்க்கணக்குப் பண்ணி

6.

அந்தமலை இந்தமலை எந்தமலை ஈடாமோ

சந்தமலைப் பாட்டழகுப் பெண்ணே - மாயத்

தந்திரங்கள் காட்டுமெழில் கண்ணே

7.

முன்னழகு பின்னழகு முட்டுதடி எப்பொழுதும்

என்னழகு என்னழகு ஐயோ - கண்டு
என்றனுயிர் ஆடும்..தையோ தையோ

8.

ஆத்தங்கரைத் தோப்பருகே ஐஞ்சுகாணி நன்வயலில்

நாத்துநட வேண்டுமடி இன்று - ஏக்கம்

நாளுமெனைத் துாண்டுமடி வென்று!

 9.

கட்டுக்குழல் பூமணக்கும்! கம்மாங்கரை தான்மணக்கும்

கட்டழகி காரிகையுன் வரவு - கண்டு

கண்விழித்துப் போகுமடி இரவு

 10.

தாவணியில் உன்னழகு தங்கமணிப் பேரழகு

பாவணியில் நான்புனைந்து தாரேன் - அந்தப்

பட்டுநிலா இன்றுயிலை வாரேன்

மேலும் விளக்கம் பெறக் காணொளியைக் காணவும்
Paavalar Payilarangam - [you Tube]

விரும்பிய பொருளில் இவ்வகைத் தெம்மாங்கில் இரு கண்ணிகள் பாடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

பாட்டரசர் கி. பாரதிதாசன்,

கம்பன் கழகம், பிரான்சு,

தொல்காப்பியர் கழகம், பிரான்சு.

18.04.2021

Aucun commentaire:

Enregistrer un commentaire