செம்மொழிக் கிளிக்கண்ணி
அடி : ஆதி தாளம்
சீர் : மும்மை நடை
செந்தமிழ்த் தாய்மொழியைக் - கிளியே
சிந்தையில் நான்பதித்தேன்
சிந்தெழில் பாக்களையே - கிளியே
சீர்பெற நான்வடித்தேன்
நற்குறள் பொன்னெறியைக் - கிளியே
நாடிட வாழ்வுயரும்
பற்றுடன் தாய்மொழியைக் - கிளியே
பாடிடப் பேருயரும்
தேனகப் பாடல்களைக் - கிளியே
தேர்ந்திட ஊர்..சிறக்கும்
வானருள் நன்மழையாய்க் - கிளியே
வண்டமிழ்ச் சீர்நிறைக்கும்
வன்புறப் பாக்களையே - கிளியே
வாழ்வுற மாண்பொளிரும்
இன்புறக் கற்பியலைக - கிளியே
ஏந்திட அன்பொளிரும்
தார்மண வாசகத்தைக் - கிளியே
தாழ்ந்து பணிந்திடுவேன்
சீர்மணப் புகழ்ஆழ்வார் - கிளியே
செந்தாள் அணிந்திடுவேன்!
பெண்ணணிப் பாவலரைக் - கிளியே
பேணிய நன்மொழியாம்
கண்ணணிக் காவியங்கள் - கிளியே
காத்துள செம்மொழியாம்
நல்லருள் கம்பனையே - கிளியே
நாடிநாம் கற்றிடுவோம்
வெல்லருள் ஆற்றலினைக் - கிளியே
விஞ்சிடப் பெற்றிடுவோம்!
வள்ளலார் கோத்தமொழி - கிளியே
வாழ்வியல் காத்தமொழி
உள்ளெலாம் இன்பமுறக் - கிளியே
ஓதிடப் பூத்தமொழி!
பாரதி வந்துலகில் - கிளியே
பல்வகைச் சிந்தளித்தான்
பாரிதில் பைந்தமிழே - கிளியே
பார்..சுவை என்றுரைத்தான்!
பண்ணொலிர் பாட்டரசன் - கிளியே
பாடிய அருஞ்சிந்து
மண்ணெணொளிர் வாழ்வணிந்து - கிளியே
வாழ்த்துமே புவிப்பந்து
பாட்டடரசர் கி. பாரதிதாசன்
21.03.2021
Aucun commentaire:
Enregistrer un commentaire