சித்திர கவி மேடை - 9
திருவாழிச் சித்திரம்
சுற்றும் பிறப்பறுப்பாய்! தொல்லைத் தொடரறுப்பாய்!
பற்றும் பழிவினை முற்றொழிப்பாய்! - கற்றும்
துயரெனை யுற்றுச் சுழல்வதோ? மண்ணில்
வயவெனை யாள்வதோ, மாற்று!
வயவு - ஆசை
வெண்பா 70 எழுத்துக்களைப் பெறும். சித்திரம் 67 எழுத்துக்களைப் பெறும். சக்கரத்தின் மையத்தில் பாடல் தொடங்கிச் சுழன்றுவந்து பாதத்தில் நிறைவுறும்
ஒன்றிவரும் எழுத்துக்கள் [29- 35] [40 - 48] [53 - 59]
வெண்பாவில் மோனை எதுகை அமையவேண்டும். தளை தட்டாமல் அமைய வேண்டும். சிலர் முகநுாலில் தளை தட்டுகிறது என்று எழுதியே சித்திரத்தை வெளியிட்டு இக்கலைக்கலைக்கு இழிவு செய்கின்றனர். சிலர் யாப்பிலக்கணம் அறியாமல் சித்திர நுால்களை எழுதிப் பொய்ப்புகழில் திளைக்கின்றனர்.
எளிதாக எழுதும் வண்ணம் திருவாழிச் சித்திரத்தை அமைத்துள்ளேன். பாவலர் பயிலரங்க அன்பர்கள் முயற்சி செய்யுமாறு அன்புடன் வேண்டுகிறேன். ஆசிரியப்பாவிலும் இக்கவிதையைத் தீட்டலாம்.
திருவாழிச் சித்திரம் எழுத வேண்டுமென விருப்பத்தைத் தெரிவித்துப் படம் வரைந்தளித்த திருமதி பத்மினி கேசவகுமார் அவர்களைப் பாராட்டுகிறேன.
பாட்டரசர் கி. பாரதிதாசன்
10.03.2021
Aucun commentaire:
Enregistrer un commentaire