பூங்கிளிக் கண்ணி
அடி : ஆதிதாளம்
சீர் : நான்மை நடை
கண்ணால்
கவிபாடும்
காரிகையைால் உள்ளுருகும்
புண்ணால்
வாடுகிறேன்
போயுரைப்பாய் பூங்கிளியே!
முத்தாடும் மூக்கழகில்
மோகத்தீ மூளுதடி
சித்தாடும் காதலைச்
செப்பிடுவாய் பூங்கிளியே!
கூர்விழிப் பேரழகு
கூட்டுதடி உணர்வலையை!
ஓர்வழி நன்றே
உரைத்திடுவாய் பூங்கிளியே!
கார்தவழும் நீள்குழலைக்
கண்டு மனமேங்கும்!
சீர்தவழும்
சொல்லேந்திச்
செப்புவாய் பூங்கிளியே!
மல்லி மணக்குதடி
மங்கை தலையழகு!
சொல்லில் சுவையூறிச்
சொக்குகிறேன் பூங்கிளியே!
மின்னொளி வீசுகின்ற
பொன்னணி காதழகு!
என்னென இங்கெழுத
என்னுயிர் பூங்கிளியே!
பல்லழகு பார்த்ததும்
பாடல் பலநுாறு
சொல்லழகு மேவிச்
சுரக்குமே பூங்கிளியே!
வில்வளைவு தேனுதடு
விந்தை வியப்பூட்டும்!
பல்வளைவு மேனி
பசியூட்டும் பூங்கிளியே!
புன்னகை பூத்தவுடன்
புத்தி சுழலுதடி!
பொன்னகை பொங்குதடி
போதையைப் பூங்கிளியே!
தாமரைச் செவ்விதழைத்
தாங்குமெழில் சீர்நாக்கு!
மாமனை வாட்டுதடி
வண்ணஞ்சேர் பூங்கிளியே!
பாட்டரசர் கி. பாரதிதாசன்
21.03.2021
Aucun commentaire:
Enregistrer un commentaire