dimanche 21 mars 2021

கிளிக்கண்ணி

 


சிந்துப்பா மேடை - 16

 

கிளிக்கண்ணி

 

தமிழ்மொழி இயல் இசை, நாடகம் என்று செழிப்புடன் திகழ்வதால், முத்தமிழாகப் போற்றி மகிழ்கிறோம்.

 

இயற்றமிழ் என்பது கருத்தை உணர்த்துவதை நோக்கமாக உடையது என்றும், இசைத்தமிழ் என்பது இசையின்பம்  அளித்தலை முதன்மை நோக்கமாக உடையது என்றும், முனைவர் இரா. திருமுருகனார் உரைப்பார். [சிந்துப்பாடல்களில் யாப்பிலக்கணம் பக்கம் - 3]

பேச்சு, உரைநடை, செய்யுள்  ஆகியவை இயற்றமிழாகும். இயற்றமிழ்ப் செய்யுள் இயற்பா எனப்படும். வெண்பா, ஆசிரியப்பா, வஞ்சிப்பா. மருட்பா இயற்றமிழைச் சேரும்.

 

இசைத்தமிழ்ப் பாடல் இசைப்பா எனப்படும். கலிப்பா, பரிபாடல், தாழிசை, விருத்தம், துறை, சந்தப்பா, வண்ணப்பா, சிந்துப்பா, உருப்படி அகியவை இசைப்பாவாகும்.

இயலும் இசையும் இணைந்து வருவது நாடகத்தமிழாகும்.

 

இசைப்பாக்களில், தாளமின்றிப் பண்ணுடன் மட்டும் பாடப்படுவன என்றும், பண்ணுடனும் தாளத்துடனும் பாடப்படுவன என்றும் இருவகையுண்டு.

 

சிந்து என்னும் இசைப்பா, இசைத் தாளத்துடன் பாடிப்பாடி இயற்ற வேண்டும். இரண்டு சமமான அடிகள் ஓரெதுகை பெற்றுத் தாளத்துடன் நடப்பது சிந்துப்பாவாகும். [சிறுபான்மை நான்கடி பெற்றுவருவதும் உண்டு] 

கிளிக்கண்ணி -1

 

பண் : செஞ்சுருட்டி  
அடி: ஆதி தாளத்தில் 2 வட்டணை     
சீர் : நான்மை நடையது

நெஞ்சில்  உரமுமின்றி
நோ்மைத் திறமுமின்றி

வஞ்சனை சொல்வாரடீ - கிளியே!

வாய்ச்சொல்லில் வீரரடீ!

 

பழமை பழமையென்று

பாவனை பேசலன்றிப்

பழமை இருந்தநிலை - கிளியே!

பாமரர் ஏதறிவார்?

 

[மகாகவி பாரதியார்]

 

ஓரெதுகையில் அமைந்த இரண்டடிகள் கண்ணி என்று பெயர்பெறும். கிளியே என்ற முன்னிலை உடைமையால் கிளிக்கண்ணி என்று பெயர்பெற்றது. கிளிக்கண்ணி பலவகை அடிகளாலும் தாள நடைகளாலும் நடக்கும். சீர், தளை வரையறை இல்லை.

 

பாரதியின் கிளிக்கண்ணியில் நெஞ்சில் - திறமுமின்றி ஓரடியாகும். வஞ்வனை - வீரரடீ மற்றோர் அடியாகும். நெஞ்சில் - வஞ்சனை எதுகையாகும். நெஞ்சில் - நேர்மை, வஞ்சனை - வாய்ச்சொல் மோனையாகும்.

 

அசை பிரித்தல்

 

oooநெஞ் சில்oஉo ரoமுo மின்றிoo
oooநோ் மைoத்திo றoமுo மின்றிoo

oooநெஞ் சில்oஉo ரoமுo மின்றிoo
oooநோ் மைoத்திo றoமுo மின்றிoo

oooவஞ் சoனைo சொல்oவாo ரடீoo

oooo  oooo - கிoளிo யேooo

oooவாய்ச் சொல்oலில்o வீoரo ரடீoo

oooo  oooo - கிoளிo யேoo

 

இலக்கண சுருக்கம்

 

இக்கண்ணி,  நெடிலசையில் தொடங்கும் அரையடி 7 சிந்தசைகளையும், குறிலசையில் தொடங்கும் அரையடி 8 சிந்தசைகளையும் பெற்றுவரும்.  இரண்டாம் அரையடிக்குப் பின் 'கிளியே'  - தனிச்சொல் வரும்.

 

கிளிக்கண்ணி - 2

 

அந்தமுடன் ஆதி அளவாமல் என்னறிவில்
சுந்தரவான் சோதி துலங்குமோ பைங்கிளியே.

ஒவ்வோர் அடியும் எட்டுச் சீர்களைப் பெற்றிருக்கும். 'அந்தமுடன்' முதல் 'என்னறிவில்' வரை ஓரடி. 'சுந்தர' முதல் 'கிளியே' என்பது வரை மற்றோரடி. ஆதி தாளம் என்பதால் ஒவ்வோர் அடியும் எட்டுச் சீர்களைப் பெற்றிருக்கும். ஒவ்வோர் சீரும் 4 அசைகளைப் பெற்றிருக்கும். மேலுள்ள தாயுமானவர் கண்ணியில் ஓரடியில் 14 அசைகள் உள்ளன. மீதி யசைகள் அளபெடுத்து நீண்டு இசைக்கும். ஒவ்வொரு சீரும் இரண்டு அசைகளுக்குக் குறையாமல் அளபெடுக்கும். 

 

இரண்டடியும் ஓரெதுகை பெறும் [அந்தமுடன் - சுந்தரவான்]

 

ஒவ்வோர் அடியிலும் மோனை யமைய வேண்டும்

 

அசை பிரித்தல்

ooஅந்த முoடன்o ஆoதிo அoளo

வாoமல்o என்oனo றிoவில்o oooo
ooசுந்த ரoவாoன் சோoதிo துoலங்o

குoமோo பைoங்o கிoளிo யேooo

 

 இலக்கச் சுருக்கம்

 

 ஓரடியில் 14 சிந்தசைகள் வர வேண்டும்

 

கிளிக்கண்ணி - 3

 

அடி : ஆதி தாளம்

சீர் : மும்மை நடை

 

ஆதி சிதம்பரதே - கிளியே

ஆடி வணங்கிக் கொண்டு

சோதி யிலக்கணத்தைக் - கிளியே

சொல்லுகிறேன்  உனக்கு

 

ஒவ்வோர் அடியும் எட்டுச் சீர்களைப் பெற்றிருக்கும். ஆதி  கொண்டு வரை ஓரடி. சோதி முதல் உனக்கு என்பது வரை மற்றோரடி. ஆதி தாளம் என்பதால் ஒவ்வோர் அடியும் எட்டுச் சீர்களைப் பெற்றிருக்கும். மும்மை நடை என்பதால் ஒவ்வோர் சீரும் 3 அசைகளைப் பெற்றிருக்கும்.  ஒவ்வோர் அடியிலும் மூன்றாம் சீர் ஓரசை மட்டும் வந்து இரண்டு அசை நீளும். ஏழாம் சீர் ஓரசை மட்டும் வந்து ஐந்தசை நீண்டொலிக்கும்.

 

இரண்டடியும் ஓரெதுகை பெறும் [ஆதி - சோதி]

 

ஒவ்வோர் அடியிலும்  1, 5 மோனை யமைய வேண்டும். [ஆதி - ஆடி] [சோதி - சொல்லு]

 

அசை பிரித்தல்

 

ஆ/தி/சி   தம்/ப/ர   தே/o/o   -   கி/ளி/யே

ஆ/டி/வ   ணங்/கிக்/கொண்   டு/o/o   o/o/o

சோ/தி/யி   லக்/க/ணத்   தை/o/oக்   -   கி/ளி/யே

சொல்/லு/கி   றேன்/உ/னக்   கு/o/o   o/o/o

 

இலக்கணச் சுருக்கம்

 

நான்கு அரையடிகளும் ஏழு சிந்தசைகளைப் பெற்றுவரும். முதல் அரையடி ஈற்றில் இரண்டாம் அரையடியின்  ஈற்றில் 'கிளியே' என்ற தனிச்சொல் வரும்.

 

மேலும் விளக்கம் பெற விரும்புவோர் Paavalar Payilarangam  என்ற you Tube  காணொளியைப் பார்க்கவும்.

 

மூன்று வகையிலும் ஒவ்வொரு கிளிக்கண்ணி எழுதுமாறு அன்புடன் வேண்டுகிறேன்

 

பாட்டரசர் கி. பாரதிதாசன்

21.03.2021

 

 


Aucun commentaire:

Enregistrer un commentaire