samedi 4 janvier 2020

காலை வெண்பா


திருவள்ளுவர் ஆண்டு 2049 மார்கழி 19
04.01.2020
  
நல்லார் உறவின் நலந்தருவாய்! பாட்டுலகின்
வல்லார் உறவின் வலந்தருவாய்! - செல்லுமிடம்
வெற்றிப் புகழை விளைத்திடுவாய்! நற்றமிழே!
பற்றி யளிப்பாய் பயன்!
  
நாடோங்கும் தொண்டளிப்பாய்! நன்னெறியை என்னெஞ்சக்
கூடோங்கும் வண்ணம் குவித்தளிப்பாய்! - ஏடோங்கும்
நற்புலமை நல்கிடுவாய்! நற்றமிழே! நல்லவையுள்
சொற்பெருமை ஈவாய் சுடர்ந்து!
  
நின்னைச் சரணடைந்தேன் நீடு தமிழ்மொழியே!
பொன்னை நிகர்த்த புகழளிப்பாய்! - முன்னை
இலக்கணத்தை முற்றும் எடுத்துரைப்பாய்! என்றன்
தலைக்கனத்தை முற்றும் தகர்த்து!
  
நீரலையாய் ஓங்கும் நினைவலைகள்! வான்தவழும்
காரலையாய் ஓங்கும் கவியலைகள்! - தாரழகே!
சீரலையாய் ஓங்கும் செழுந்தமிழே! உன்னருளால்
பேரலையாய் ஓங்கும் பெயர்!
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
நிறுவுநர்
கம்பன் கழகம் பிரான்சு
தொல்காப்பியர் கழகம் பிரான்சு

1 commentaire: