திருவள்ளுவர் ஆண்டு 2051 தைத்திங்கள் 5
19.01.2020
இசைத்தமிழ்ப் பொங்கல் பொங்குகவே!
யாழ்சேர் பாணன் இசைப்பொங்கல்
இன்பத் தமிழின் புகழ்மீட்டும்!
கீழ்சேர் உலகைச் சரிசெய்து
கீர்த்தி காண வழிகாட்டும்!
ஆழ்சேர் கடலின் வளமுடைய
அமுதத் தமிழே துயர்..ஓட்டும்!
ஊழ்சேர் பொழுதில் இறைவனுடன்
ஒளிரும் எங்கள் தமிழ்மொழியே!
இசையாய் வாழ்க்கை இனிக்கட்டும்!
எழிலாய் உள்ளம் சிறக்கட்டும்!
அசையாய்ப் பிறக்கும் நேர்நிரையே!
அறத்தால் பிறக்கும் சீர்நிறையே!
தசையாய்.. உயிராய்த் தமிழ்மொழியைத்
தாங்கி வாழ்வோம்! தகைகாண்போம்!
நசையாய்ச் சொன்ன கருத்தேந்தி
நாளும் பொங்கல் பொங்குகவே!
பாட்டரசர் கி. பாரதிதாசன்,
கம்பன் கழகம், பிரான்சு,
தொல்காப்பியர் கழகம், பிரான்சு.
Aucun commentaire:
Enregistrer un commentaire