mardi 7 janvier 2020

மார்கழிப் பெண்ணே


மார்கழிப் பெண்ணே
  
[மார்கழியைக் காதலியாக எண்ணிப் பாடிய வெண்பா மாலை. ஆண்டாள் அருளிய திருப்பாவைப் பாடல்களின் முதல் சீர்களைக் கொண்டு இந்நுால் அமைந்துள்ளது]
  
காப்பு
  
மணமோங்கும் மார்கழி மங்கை வடிவைக்
குணமோங்கும் வண்ணம் கொடுக்க, - அணியோங்கும்
தாயே! தமிழணங்கே தாள்பணிந்தேன்! நீ..என்றன்
வாயே இருந்து வழங்கு!
  
1.
மார்கழிப் பெண்ணே! மதுமலர்க் கண்ணே!உன்
சீர்பொழி பேரழகில் சிக்குண்டேன்! - ஊர்..பொழி
லாடை தரிக்கும்! அமுதே..உன் பார்வை,பா
வோடை சுரக்கும் உளத்து!
  
2.
வையத்துப் பேரழகே! வாழ்கவி என்னெஞ்சின்
மையத்துப் பேரொளியே! மாங்குயிலே! - ஐயத்[து]
இடமின்றிச் சொல்வேன் இசைத்தேன்..நீ! பொன்னார்
குடமொன்றிக் கொள்வேன் குளிர்!
  
3.
ஓங்கி யொளிர்பவளே! ஒண்டமிழை உள்ளத்துள்
தாங்கித் தழைப்பவளே! தண்கொடியே! - ஏங்கி..நான்
நிற்கின்றேன்! நீள்விழி நேரிழையே! நின்னுருவில்
கற்கின்றேன் காதல் கவி!
  
4.
ஆழிபோல் சுற்றுதடி அன்பே நினைவலைகள்!
மேழிபோல் பற்றுதடி மேனியை! - ஊழிபோல்
என்னை யுருட்டாதே! ஏற்றருள்வாய்! உன்னுறவு
முன்னைத் தவத்தின் முளைப்பு!
  
5.
மாயனைச் சேர்ந்த திருமகளாய்ப் பாட்டரசு
நேயனைச் சேர்ந்த நிறைமதியே! - தாயனைய
பொன்மகளே! பொங்கும் புகழ்மகளே! நன்மணிகள்
மின்மகளே தாராய் விருந்து!
  
6.
புள்ளும் இசைபாடப் பூவும் நடமாட
அள்ளும் அழகோ அகஞ்சூடத் - துள்ளும்
கயல்விழிப் பெண்ணே! கனிமொழியே! உன்னால்
உயா்வழி காணும் உயிர்!
  
7.
கீசுகீ சென்று கிளையாடும்! என்னாசை
வீசுவீ சென்று விளையாடும்! - பேசுபே
சென்று மனமேங்கும்! என்னவளே! நான்மகிழ
என்றும் தருவாய் இடம்!
  
8.
கீழ்வானம் போலழ[கு] ஆழ்ஞானம் சூடுதடி!
சூழ்மானம் பூத்தபுகழ்ச் சுந்தரியே! - வாழ்வானாய்!
என்றன் வளமானாய்! ஈடில் கவிபாட
உன்றன் உறவமுதை யூட்டு!
  
9.
துாமணியே! இன்பச் சுவையணியே! என்னுயிர்ப்
பாமணியே! தேனுாறும் பண்மணியே! - மாமணியே!
மார்கழிப் பெண்மணியே! மாண்பொளிர் கண்மணியே!
சீர்மொழி தந்தெனைச் சேர்!
  
10.
நோற்றுனை யிங்கீந்த நுண்மையைப் போற்றுகிறேன்!
காற்றுனைச் சுற்றிக் களிப்புறுமே! - ஊற்றென
நெஞ்சம் குதிக்குதடி! நேரிழையே! உன்னழகில்
தஞ்சம் உறுமே தமிழ்!
  
11.
கற்றுக் களிக்கின்றேன்! காதல் கவித்தேனைப்
பெற்றுக் குடிக்கின்றேன்! பெண்ணழகே! - முற்றுமுனைப்
பாடத் துடிக்கின்றேன்! பாவையுனைப் பாற்கடலில்
ஆட அழைக்கின்றேன் ஆழ்ந்து!
  
12.
கனைத்திளம் எண்ணத்தைக் காட்டுகிறேன்! பெண்ணே!
நினைத்துளம் பாராய்! நிலவே! - அணைத்துளம்
இன்புற வேண்டுமடி! என்னவளே! வள்ளுவம்போல்
அன்புற வேண்டுமடி ஆழ்ந்து!
  
13.
புள்ளின்வாய் ஓசை புலவன் உணர்வினை
நெல்லின்வாய் போல்குத்தும்! நேரிழையே! - சொல்லின்வாய்
உன்னைக் கவிபாட உள்ளுருகும்! மார்கழியே!
என்னை மடியில் இருத்து!
  
14.
உங்கள் கவியால் உருகுகிறேன் என்றாள்!நற்
றிங்கள் முகத்தழகி! தேரழகி! - தங்க
அகத்தழகி! ஆரமுத அன்பழகி! என்றன்
தவத்தழகி தந்தாள் தமிழ்!
  
15.
எல்லே உனதழகு! ஈடில் உயர்வழகு!
சொல்லே மயக்குஞ் சுவையழகு! - வில்லே
விடுக்கும் விழியழகு! வெல்லழகு! இன்பம்
கொடுக்கும் மொழியழகு கூர்ந்து!
  
16.
நாயகனாய் நான்வாழ நற்றவமே நீவேண்டும்!
தாயகமாய் மேன்மை தரவேண்டும்! - துாயவளே!
வண்ணக் கவிபாட மாலையிலே நீவேண்டும்!
எண்ணம் இனிக்க இணைந்து!
  
17.
அம்பரமே மின்ன அசைந்துவரும் பேரழகே!
எம்பரமே போன்றிங் கெனைக்காப்பாய்! - செம்மலரே!
ஏங்கும் இதயத்தைத் தாங்கும் அருள்பொழிவாய்!
தேங்கு நலந்தருவாய் சேர்ந்து!
அம்பரம் - ஆடை
  
18.
உந்தும் கனவுகளை, உள்ளம் உவந்துருக
முந்தும் நினைவுகளை மூட்டுகிறாய்! - வந்தென்னைச்
சேரும் திருநாளைச் செப்பிடுவாய்! கொண்டாடும்
ஊரும் உறவும் உவந்து!
  
19.
குத்து விழியம்பு கூட்டும் மயக்கத்தை!
கொத்து மொழியம்பு கோலமிடும்! - முத்தும்
செவிகண்டு தள்ளாடும் மோகத்தால்! செந்தேன்
கவிகண்டு தள்ளாடும் கண்!
  
20.
முப்பத்து மாதங்கள் மோகத்தால் வாடுகிறேன்
எப்பற்றுப் போக்கும் இதயவலி! - குப்பத்துக்
காட்டுக்கு வந்திடுவாய்! கண்ணே! கனிமொழியே!
பாட்டுக்குச் சேர்ப்பாய் பதம்!
  
21.
ஏற்ற செயல்யாவும் என்றும் எழில்மேவும்!
ஆற்ற லொளிரும் அணியழகே! - ஊற்றென
ஆசை சுரக்குதடி! அன்புறவே என்னகம்
பூசை புரியுதடி பூத்து!
  
22
அங்கண்..மாச் சீரினிமை! மின்னும் அணிமூக்கு
செங்கண்மா லீந்த சிறப்பாகும்! - இங்குன்..மா
வேற்றம் எழுதச்சொல் லேதாம்! இளமயிலே!
சீற்றம் விடுத்தெனைச் சேர்!
  
23.
மாரி நிகர்..கூந்தல்! மான்நிகர் பார்வை!சீர்
ஏரி நிகர்..பசுமை ஏந்துநலம்! - பாரிநிகர்
நன்னெஞ்சம் கொண்டவளே! நற்றமிழே! எந்நாளும்
உன்னெஞ்சம் தாராய் உணர்ந்து!
  
24.
அன்றிவ் வலைகள் அடித்த அகத்துள்ளே
நன்றிவ் வழகை..நீ நல்கினாய்! - சென்றெங்கும்
நற்புகழை நாட்டுகிறேன்! நாளும் மனத்துள்..உன்
பொற்புகழைத் தீட்டுகிறேன் பூத்து!
  
25.
ஒருத்தியுனை ஒண்டமிழாய் ஓதியே காப்பேன்!
விரும்பியுனைச் சீர்கள் விளைப்பேன்! - விருத்தியுரை
நல்லழகை நாடி நவின்றிடுவேன்! சொக்கிடுவேன்
பல்லழகைப் பாடிப் பணிந்து!
  
26.
மாலே பெருகுதடி! மங்கையுன் கண்ணிரண்டில்
சேலே தவழுதடி! சித்திரமே! - பாலேபோல்
உள்ளம் படைத்தவளே! ஒண்ணுதலே! நற்பதிலைத்
துள்ளும் இளமானே சொல்!
  
27.
கூடாரைப் போன்றென்னைக் கூறி வெறுக்காதே!
கேடாரைப் போன்றென்னைக் கீறாதே! - நாடகமே
ஆடாதே! ஆருயிரே! ஆசை அகமிருந்தும்
ஓடாதே உள்ளம் ஒளித்து!
  
28
கறவைகள் மேய்கின்ற காட்டினிலே, காதல்
பறவைகள் பாடிப் பறக்கும்! - உறவைமனம்
எண்ணி இளகுதடி! ஏந்திழையே! என்னெஞ்சுள்
கண்ணி கமழுதடி காத்து!
  
29.
சிற்றஞ் சிறுபொழுதே சிந்தனை ஓயாமல்
முற்றும் உளத்தை முறுக்குதடி! - சற்றுமெனைப்
பாராமல் செல்வதுமேன்? பைங்கொடியே! உன்னருள்
நேராமல் வாடுதடி நெஞ்சு!
  
30.
வங்கக் கவிக்கடலே! மங்கையிவள் தாள்தொட்டே
அங்கம் குளிர்ந்தனையோ? யானறியேன்! - பொங்குதமிழ்
பாடி அகங்குளிர்ந்தேன்! மார்கழிப் பாவையை
நாடி நலமடைந்தேன் நான்!
  
நுாற்பயன்
  
காதல் சுவைபாயும்! கன்னல் கவிபூக்கும்!
ஓதல் பணிசிறக்கும்! உள்ளுவக்கும்! - மாதவமாம்
மார்கழி மாண்பொளிரும்! வாயாரப் பாடியே
சீர்வழி காண்பீர் செழித்து!
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
கம்பன் கழகம் பிரான்சு
தொல்காப்பியர் கழகம் பிரான்சு
29.12.2019

1 commentaire: