dimanche 29 décembre 2019

காலை வெண்பா


இனிய வணக்கம்!
  
திருவள்ளுவர் ஆண்டு 2049 மார்கழி 13
29.12.2019
  
தைம்மகளே! தங்கத் தமிழ்மகளே! கண்ணழகு
மைம்மகளே! வண்ண மலர்மகளே! - கைம்மணக்கும்
பாட்டளிப்பாய்! பார்மணக்கும் பண்பளிப்பாய்! பாவலரின்
கூட்டளிப்பாய் மேன்மை குவித்து!
  
தொண்டுளம் தந்திடுவாய்! துாய குறணெறியின்
பண்டுளம் தந்திடுவாய்! பண்ணமுதைக் - கண்டுளம்
ஓங்கவே தந்திடுவாய்! ஒப்பில் உயர்தமிழே!
தாங்கவே தந்திடுவாய் சால்பு!
  
தோன்றும் கதிர்நீயே! துாய மழைநீயே!
ஊன்றும் புகழ்நீயே! ஒண்டமிழே! - ஆன்ற
நிலம்நீயே! தீநீயே! நற்காற்றும் நீயே!
வளம்நீயே! வாழ்வே வழங்கு!
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
நிறுவுநர்
கம்பன் கழகம் பிரான்சு
தொல்காப்பியர் கழகம் பிரான்சு

1 commentaire:

  1. சாற்றரிய பாக்கள் தருகின்ற பாட்டரசே!
    போற்றரிய செம்புலவர் போரேறே! - ஊற்றாய்ப்
    பொழிகின்றீர், நற்குறளைப் பொற்கவியால் ஏத்தி
    எழில்தந்தீர் இன்பத் தமிழ்க்கு!

    - இமயவரம்பன்
    http://solvelvi.blogspot.com/

    RépondreSupprimer