வெண்பா மேடை - 153
உண்மையொளிர் குறள்!
முகம்நக நட்பது நட்பன்று, நெஞ்சத்[து]
அகம்நக நட்பதே நட்பு!
[திருக்குறள் - 786]
இக்குறட்பா, எது உண்மையான நட்பு? எது உண்மை நட்பன்று? என்பதை உரைக்கின்றது. இதைப்போன்று கல்வி, செல்வம், புகழ், உறவு, உயர்வு..... போன்ற எதாவது உங்களுக்கு விருப்பமான ஒருபொருளைக் கருவாகக்கொண்டு உண்மையொளிர் குறள் ஒன்றைப் பாடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
அன்னைத் தமிழே!
1.
அன்னியச் சொற்கள் அமுதன்று! பண்பூறும்
அன்னையின் சொற்கள் அமுது!
2.
பன்மொழி காத்தல் தகையன்று! பாங்குடன்
தன்மொழி காத்தல் தகை!
3.
கற்ற அயல்மொழி காக்கும் உறவன்றாம்
உற்ற தமிழே உறவு!
4.
பொன்னும் பொருளும் அழகன்று! சேய்..காக்கும்
அன்னை மொழியே அழகு!
5.
வன்மை படையும் அரணன்று! வண்டமிழாம்
அன்னையே வாழ்வின் அரண்!
6.
வண்ண வளமும் வளமன்று! குன்றாத
வண்டமிழே வாழ்வின் வளம்!
7.
ஓங்கித் தழைத்தல் உயர்வன்று! தண்டமிழைத்
தாங்கித் தழைத்தல் உயர்வு!
8.
பிறமொழி வாழ்கல்வி பீடன்று! தாயால்
பெறுமொழிக் கல்வியே பீடு!
9.
பிறமொழிப் போதை அழகன்று! பெற்ற
அறவழிப் பாதை அழகு!
10.
அயல்மொழி மோகம் அறிவன்றாம்! அன்னை
உயர்மொழித் தாகம் அறிவு!
அன்புடன்
பாட்டரசர் கி. பாரதிதாசன்
கம்பன் கழகம் பிரான்சு
தொல்காப்பியர் மன்றம் பிரான்சு
18.01.2020
கம்பன் கழகம் பிரான்சு
தொல்காப்பியர் மன்றம் பிரான்சு
18.01.2020
ஆகா... அருமை ஐயா...
RépondreSupprimer