உன்னுள் கலந்த உயிர்!
1.
கா..கா.. என..நீ கதைத்துக் சிணுங்குவதும்
வா..வா.. எனும்நல் வரவேற்பாம்! - போ..போ..போ
என்று வெறுப்பதுவும் இன்றுநம் ஊடலினை
வென்று அளிக்கும் விருந்து!
2.
வவ்வவே என்று வடிவெடுத்துக் காட்டுவது
எவ்வளவு இன்பம்! இளையவளே! - செவ்வானம்
மெல்ல இருட்டுதடி! மேனிக்குள் ஏதேதோ
செல்லத் துடிக்குதடி சேர்ந்து!
3.
ஏனடி பார்த்தாயோ? என்னடி செய்தாயோ?
தேனடிப் பாக்கள் திரளுதடி! - வானமுதே!
பொன்னுள் கலந்த பொருளாக மின்னுதடி
உன்னுள் கலந்த உயிர்!
4.
என்னப்பா என்றென்னை ஏங்கி அழைத்தவுடன்
இன்தெப்பம் தன்னில் இறங்குகிறேன்! - பொன்னப்பா
என்றிறையைப் போற்றி இறைஞ்சுகிறேன்! நீயன்றோ
என்குறையைப் போக்கும் எழில்!
5.
வண்ண மயிலென்று வார்த்த கவியிசை
எண்ணம் முழுதும் இனித்ததடி! - உண்ணப்
பிடிக்காமல் உள்ளம் துடிக்குதடி! அன்பே
நடிக்காமல் வா..வா நடந்து!
6.
மங்கை சிவகாமி மாமல்லன் காதலினை
எங்கை எழுத இசைத்தவளே! - செங்கரும்பே!
திங்கள் முகத்தழகே! தென்னங் குருத்தழகே!
பொங்கல் சமைப்போம் புணர்ந்து!
7.
என்னை உனக்கே எழுதிக் கொடுத்தபின்
உன்னைத் தடுத்திட உள்ளார்யார்? - அன்னையென
அன்பைப் பொழிபவளே! ஆற்றல் அளிப்பவளே!
துன்பைத் துடைப்பவளே சொல்?
8.
வண்டுவந்து நெஞ்சுள் வருடுவதேன்? ஆசைகளைக்
கொண்டுவந்து நெஞ்சுள் குவிப்பதுமேன்? - விண்டுவந்து
வீசியெனைக் கொல்லுவதேன்? விந்தை விளையாட்டில்
ஆசையெனைத் தள்ளுவதேன் ஆழ்ந்து?
9.
இங்கோர் உயிருறும் இன்னல் அறியாமல்
அங்கே அழகாய் அமர்ந்துள்ளாய்! - அங்கத்துள்
புல்லரிக்கும் இன்பம் புகுந்தாட வேண்டுமடி!
சொல்லினிக்கும் பாக்கள் தொகுத்து!
10.
மஞ்சள் மணக்கும் மதிமுகமே! நீயனுப்பும்
அஞ்சல் அளிக்குமடி ஆரமுதை! - வஞ்சியே!
பன்முறை உன்னரும் பாக்களைப் பார்த்துவப்பேன்
இன்மறை என்றே இசைத்து!
RépondreSupprimerஉன்னுள் கலந்த உயிரென்னும் வெண்பாக்கள்
என்னுள் கலந்த இனிப்புரைக்கச் - சொன்னாடி
நிற்கின்றேன்! என்றன் நினைவோடு நெஞ்சொன்றிக்
கற்கின்றேன் காதல் கலை!
Supprimerவணக்கம்!
காதல் கலையுரைக்கும் கன்னல் கவிதைகளை
ஓதி யுணர்ந்தே உவந்திடுக! - சோதியென
உள்ளம் ஒளிரும்! உயர்வுவரும்! இன்பத்தின்
வெள்ளம் பெருகும் விரைந்து!
உள் கலந்த உயிரைப் பற்றி அழகான வரிகள். ரசிக்கும்படி இருந்தது. நன்றி.
RépondreSupprimer
Supprimerவணக்கம்!
உட்கலந்த பேரழகை ஒப்பில்லா ஊா்வசியைச்
சொற்கலந்து தந்தேன் சுவைத்து
விந்தையான விளையாட்டை ரொம்பவே ரசித்தேன் ஐயா...
RépondreSupprimer
Supprimerவணக்கம்!
சிந்தை மணக்கும் செழுமலர் காட்டுகிறாள்
விந்தை மணக்கும் விழி!
கன்னித் தமிழகை காரிகைக்கு பாட்டெழுத
RépondreSupprimerமின்னிச் செழிக்கும் வனப்பு.
வணக்கம்
RépondreSupprimerஐயா
காதல் அமுதம் சுவை சொட்ட
சொல்லிய வரிகளில் வஞ்சியின் அழகு தெரியுது.
சொல்லி சொல்லி இசைத்தது மனம்
உண்டு கழித்தேன் பாக்களை நிதம்.
அருமையாக சொல்லியுள்ளீர்கள் பகிர்வுக்கு நன்றி த.ம 8
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
அழகான நடையில் வியக்கவே செய்கின்றேன் உங்களின் இனிமைத்தமிழ் கண்டு,நன்றி அய்யா..
RépondreSupprimerஆற்றும் செயல்கள் அவளுக்காய் ஆனதனால்
RépondreSupprimerகாற்றிலும் கன்னித் தமிழ் !
அருமையான வெண்பாக்கள் படித்தேன் சுவைத்தேன் ஐயா அருமை
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
தம +1
அடடா.... அடடா....
RépondreSupprimerஅருமை அருமை....
Supprimerவணக்கம்!
சுடரும் கொடியவள்! துாயவள்! நெஞ்சுள்
படரும் இனியவள் பாட்டு!