lundi 13 avril 2015

பாரீசு பார்த்தசாரதி




பாரீசு பார்த்தசாரதி மணிவிழா வாழ்த்துமலர்!

நன்பார்த்த சாரதியும் நற்றவ வத்சலாவும்
இன்பார்த்த வாழ்வின் எழில்பெறுக! - பொன்னார்த்த
நல்லிணையர் நண்ணும் மணிவிழா ஓங்கிடுக!
நல்லணையான் நாமம் நவின்று!

ஓங்குதமிழ் உயர்புதுவைக் குடிபிறந்த அன்பர்
     ஒப்பில்லாக் குருசாமி பேர்விளங்கச் செய்தார்!
வீங்குதமிழ் படைத்திட்ட வியனாழ்வார் உருவை
     விழியேந்திக் களித்திங்குப் பெருவாழ்வைப் பெற்றார்!
தாங்குதமிழ் தலைக்கொண்டு நற்பணிகள் ஆற்றித்
     தாயடியைத் தாம்தொழுதார்! தருமநெறி காத்தார்!
தேங்குதமிழ்ச் சீரேந்தி மணிவிழாக் கண்டார்
     செழும்பார்த்த சாரதியும் வத்சலாவும் வாழ்க!

வில்லாதி வீரன்தன் சரணங்கள் சொல்வார்!
     விருதங்கள் மேற்கொண்டு வேங்கடனைத் தொழுவார்!
நல்லாதிப் பண்புகளை நாடிமனம் மகிழ்வார்!
     நல்லதமிழ்ப் பேரவையை நன்கேங்கச் செய்வார்!
சொல்லோதி உவக்கின்ற தூயதமிழ் மேடை
     சுவை..கோடி வழங்கிடவே புத்தாண்டு வைப்பார்!
வல்லோதி வரமுற்று மணிவிழாக் கண்டார்
     வளர்பார்த்த சாரதியும் வத்சலாவும் வாழ்க!

மதுக்கவிதை வடிக்கின்ற மணி.சித்தன் தாளை
     மனத்துக்குள் பதித்தவர்கள்! இதழுலகம் ஏத்த
புதுக்கவிதை வடிக்கின்ற பொங்குதிறன் பூத்துப்
     புகழ்நூல்கள் புனைந்தவர்கள்! புதுமைஅணிந் தவர்கள்!
எது..கவிதை கேட்பவர்க்கே என்னெழுத்தைக் காட்டி
     எழிலுரைக்கும் இனியவர்கள்! நட்பைவளர்த் தவர்கள்!
இதுகவிதை என்றுரைக்க மணிவிழாக் கண்டார்
     இன்பார்த்த சாரதியும் வத்சலாவும் வாழ்க!

வளம்மணக்கும்! நலம்மணக்கும்! வண்டமிழ்ச்சீர் மணக்கும்!
     வாழையடி வாழையெனத் தலைமுறைகள் மணக்கும்!
உளம்மணக்கும்! உரைமணக்கும்! உறவுகள்தாம் மணக்கும்!
     ஒளிர்கின்ற திருப்பாவை ஊறும்தேன் மணக்கும்!
குளம்மணக்கும் தாமரைபோல் கொண்டொளிரும் வாழ்வில்
     குறள்மணக்கும்! குணம்மணக்கும்! இன்பமெலாம் மணக்கும்!
தலம்மணக்கும் திருவருளால் மணிவிழா மணக்கும்
     தண்பார்த்த சாரதியும் வத்சலாவும் வாழ்க!

12.04.2015

18 commentaires:

  1. வாழ்த்து மலர் அருமை எமது வாழ்த்துகளும்.... பாரீசு பார்த்தசாரதி அவர்களுக்கு.
    தமிழ் மணம் 2

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      தமிழ்மணம் தந்து தழைத்திடச் செய்தீர்!
      அமுதச் சுவையை அளித்து!

      Supprimer
  2. வணக்கம்
    ஐயா
    மணிவிழா காணும் பார்த்த சாரதி ஐயாவுக்கு வாழ்த்துக்கள்..மணி விழாமலர் மிக அருமையாக உள்ளது பகிர்வுக்கு நன்றி. த.ம 3

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      மணிவிழாச் செல்வர் மகிழ்வுடன் வாழ்க!
      அணிவிழா மேலும் அடைந்து!

      Supprimer
  3. தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்

      தைத்திரு நாளே தமிழாின் புத்தாண்டு
      மையுறு சித்திரையை மாற்று

      Supprimer
  4. குளம்மணக்கும் தாமரைபோல் கொண்டொளிரும் வாழ்வில்
    குறள்மணக்கும்! குணம்மணக்கும்! இன்பமெலாம் மணக்கும்!
    தலம்மணக்கும் திருவருளால் மணிவிழா மணக்கும்
    தண்பார்த்த சாரதியும் வத்சலாவும் வாழ்க!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      குறள்மணக்கும் வண்ணம் குடியோங்க வேண்டும்!
      அறம்மணக்கும் வாழ்வை அமைத்து!

      Supprimer
  5. மணக்கும் வரிகள் ரசித்தேன் ஐயா... வாழ்த்துக்கள்...

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      மணக்கும் தமிழை வளமுறச் செய்து
      வணங்கும் நபர்களை வாழ்த்து!

      Supprimer
  6. மணக்கின்ற வாழ்த்துப்பா மணிவிழா சிறப்பினைச் சொல்கிறது. பார்த்தசாரதி ஐயாவிற்கு வாழ்த்துகளும் . தங்களுக்கு எனது வணக்கமும்.

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      வாழ்த்துப்பா கண்டு மகிழ்வுற்றேன்! இவ்வுலகைத்
      தாழ்த்தும் செயல்களைத் தாக்கு!


      Supprimer
  7. அன்பு நண்பரே!
    வணக்கம்!
    மன்மத ஆண்டில் மகுடம் சூடி மகிழ்வு பெறுக!
    இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துகள்
    நட்புடன்,
    புதுவை வேலு
    WWW.KUZHALINNISAI.BLOGSPOT.COM

    சித்திரைத் திருநாளே!
    சிறப்புடன் வருக!

    நித்திரையில் கண்ட கனவு
    சித்திரையில் பலிக்க வேண்டும்!
    முத்திரைபெறும் முழு ஆற்றல்
    முழு நிலவாய் ஒளிர வேண்டும்!


    மன்மத ஆண்டு மனதில்
    மகிழ்ச்சியை ஊட்ட வேண்டும்!
    மங்கலத் திருநாள் வாழ்வில்!
    மாண்பினை சூட வேண்டும்!

    தொல்லை தரும் இன்னல்கள்
    தொலைதூரம் செல்ல வேண்டும்
    நிலையான செல்வம் யாவும்
    கலையாக செழித்தல் வேண்டும்!

    பொங்குக தமிழ் ஓசை
    தங்குக தரணி எங்கும்!
    சீர்மிகு சித்திரைத் திருநாளே!
    சிறப்புடன் வருக! வருகவே!

    புதுவை வேலு

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      உளம்மேவும் ஒண்டமிழின் ஒப்பில்..தை நாளே
      வளம்மேவும் என்பேன் வடித்து!

      Supprimer
  8. வலையுலக தமிழர்களின் சார்பிலும் மணி விழா தம்பதியர்க்கு வாழ்த்துகள்!
    தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      வலையுலக வாழ்த்தை வடித்து மகிழக்
      கலையுலக மாகும் கனவு!

      Supprimer

  9. மணிவிழா கண்டு மணக்கும் இணையர்
    அணிவிழா மேலும் அடைக! - மணிவண்ணன்
    எல்லா வளங்களும் ஈந்துவக்க! வாழ்கவே
    பல்லாண்டுப் பாக்கள் படைத்து!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      பல்லாண்டு பாடிப் படைத்த கவிதையின்
      சொல்லாண்டு நிற்கும் சுவையுண்டேன்! - மல்லாண்டு
      வில்லாண்ட எங்கள் வியன்ராமன் காத்திடுவான்
      தொல்லாண்ட மாண்பைத் தொடுத்து!

      Supprimer