முன் பதிவில் கருத்தெழுதியவர்கள் தொடுத்த இரண்டு வினாக்களுக்கு அனைவரும் பயனுறும் வண்ணம் இங்குப் பதில் எழுதுகிறேன்.
விற்பன்னத்துக்கும் விற்பனத்துக்கும் என்ன வேறுபாடென்பதைத் தயவு செய்து விளக்கவும், நன்றி.
விற்பனம் = கல்வி,
அறிவு, நுண்ணறிவு, மூலம், புதுமை, வியனிலை, உரைபொழிவு.
விற்பன்னர் = கல்விமான்,
வியத்திறவோன்.
விற்பனம், விற்பன்னம் என்ற
இரண்டு சொற்களும் ஒருபொருள் குறித்தவை.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
வணக்கம்
ஐயா!
உயர்திணை முன் வல்லினம் மிகாது. தாய்க்கொலை என்று மிகுத்து எழுதியுள்ளீர். விளக்கம் தர வேண்டுகிறேன்.
உயர்திணை முன் வல்லினம் மிகாது. தாய்க்கொலை என்று மிகுத்து எழுதியுள்ளீர். விளக்கம் தர வேண்டுகிறேன்.
இரண்டாம் வேற்றுமை உருபு
"ஐ" ஆகும்.
இரண்டாம் வேற்றுமை உருபு,
தொகையாய் வரும் இடத்தில் வல்லினம் மிகாது.
தமிழ் படித்தான், கனி
தின்றான், நாடு பிடித்தான், தோ் செய்தான்.
தமிழைப் படித்தான் என்ற
விரிவு தமிழ் படித்தான் என்று தொகையாக வந்தது.
இரண்டாம் வேற்றுமை விரியில்
வல்லினம் மிகும்.
தமிழைப் படித்தான், கனியைத்
தின்றான், நாட்டைப் பிடித்தான், தேரைச் செய்தான்.
இரண்டாம் வேற்றுமை
உருபும் பயனும் உடன்தொக்க தொகையில் வல்லினம்
மிகும்.
யானைப் பாகன், தயிர்க் குடம்,
சிற்றுண்டிச் சாலை, காய்கறிக் கடை
யானையை ஓட்டும் பாகன்
என்று உருபும் பயனும் மறைந்து வந்தன
இரண்டாம் வேற்றுமைத்
தொகை முன்னும், உயர்திணைப் பெயர் முன்னும் பெரும்பான்மை வல்லினம் மிகாது. சிறுபான்மை
மிகும் எனக் கொள்க.
உயர்திணைப் பெயர்,
இரண்டாம் வேற்றுமைத் தொகையாக வரும் இடங்களில் வல்லினம் மிகும்.
தாய்க்கொலை, ஒன்னலர்க்
கொன்றான், தெளிந்தார்ப் பேணுமின்
தாயைக் கொலைசெய்தான், ஒன்னலரைக்
கொன்றான், தெளிந்தாரைப் பேணுமின் என்று பொருட்படும்.
மரபின்
நெறிகளை மாண்புடன்
கற்றுப்
பரவும்
தமிழைப் படைப்பீர்!
- விரவும்நல்
அன்பால்
உரைத்தனன்! என்பால் தமிழ்தந்த
இன்பால்
அளித்தனன் இங்கு!
04.08.2014
வணக்கம்
RépondreSupprimerஐயா.
தெளிவான இலக்கணவிளக்கம். தெளிவாக புரிந்துகொள்ளக்கூடியதாக உள்ளது. மேலும் தொடர எனது வாழ்த்துக்கள் ஐயா.த.ம 2வது வாக்கு
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
Supprimerவணக்கம்!
தேனாய் இனிக்கும் தெளிதமிழ் சீா்கற்றால்
வானாய்ப் பொழியும் வளம்!
அய்யா வணக்கம்.
RépondreSupprimerதாமதமாக வருகின்றமைக்கு பொறுக்க!
இளமதியாரின் அறிதல் வேட்கையும், தங்களின் ஆழ்ந்த விளக்கமும் காணும் போது தமிழில் என்னைப் போன்றவர்கள் செல்ல வேண்டிய தூரம் தெரிகிறது.
தொல்காப்பியப் புள்ளி மயங்கியலின் 63 மற்றும் 64 ஆம் நூற்பாக்களைக் குறித்த ஓர்மையில் சகோதரி இளமதியார் இவ்வினாவைத் தொடுத்திருப்பதாகக் கருதுகிறேன்.
“ தாயென் கிளவி யியற்கை யாகும் “ எனச் சொல்கிறது புள்ளி மயங்கியலின் 63 ஆம் நூற்பா.
இதற்கு இளம்பூரணரும், நச்சினார்க்கினியரும் தாய் என்னும் கிளவியை( சொல்லை) நிலைமொழியாகக் கொண்டு புணருங்கால் வல்லெழுத்து மிகாமல் இயல்பாகவே புணரும் என்று கூறுவதுடன், அதற்கு தாய்கை, தாய்செவி, தாய்தலை, தாய்புறம் எனச் சான்று காட்டுவர்.
“மகன் வினை கிளப்பின் முதனிலை யியற்றே“ என அதற்கடுத்து வரும் புறனடை நூற்பாவில் தாய் என்னும் சொல் மகன் என்னும் அடையைப் பெற்று அவனது வினையைக் கூறுமிடத்து மட்டுமே வல்லெழுத்து மிகும் என்று உரையாசிரியர் இருவரும் கூறுவர்.
சான்றாக “ மகன்தாய்க் கலாம்“ என்பதைக் காட்டுவர். (மகனுக்கும் தாய்க்கும் கலகம் மூண்ட தமிழ்ச்சமூதாயம் எனச சமூகவியலாளர்களால் பெருக எடுத்தாளப்படுமளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்த சான்றாக இந்த ஒரு எடுத்துக்காட்டு இருந்திருக்கிறது.)
எனவே தொல்காப்பிய மூல பாடத்தின் படியும் அதனை அடியொற்றி அமைந்த உரையாசிரியர் கருத்தின் படியும் “ தாய்கொலை “ என்பதே சரியானதாகும்.
ஆனால் பாவலரேறு பாலசுந்தரம் அவர்கள் கூறும் உரையே இங்கு மிகப் பொருத்தம் வாய்ந்ததாகும்.
அவர்
“ தாயென் கிளவி யியற்கை யாகு
மதன் வினை கிளப்பின் முதனிலை யியற்றே“
என்று மூலபாடத்தைத் திருத்திப் பாடங்கொள்வார் ( யாகு மதன் என்பது உரையாசிரியர் காலத்தில் யாகும், மகன் எனத் திரிந்திருக்கிறது)
தாய் என்னும் சொல்லை அடுத்து வரும் சொல் முன் வல்லினம் மிக வேண்டியதில்லை.
அதற்கு அடுத்து தாய் குறித்த வினையோ வினைப் பண்போ வருமாயின் அங்கு ஒற்று மிகும் எனப் பாவலரேறு பாலசுந்தரம் அவர்கள் உரைப்பது மிக மிகப் பொருத்தமானதாகும்.
எனவே தாய்க் கொலை, தாய்க் குரல் , தாய்க் கட்சி, என்பது சரியானதாகும்.
முன்னோர் மொழியைப் பொன்னே போல் போற்றுவது தவறென்பதற்கும்,
யார் யார் வாய்க் கேட்பினும் மெய்ப் பொருள் காண்பது அறிவென்பதற்கும் சான்றாக இதைக் காண்கிறேன்.
பாவலரேறு பாலசுந்தரனாரின் தொல்காப்பிய உரைகளைப் படிக்க வேண்டிய தேவை தமிழறிஞர்களுக்கு இருக்கிறது என்பதை தாய்க்கொலை காட்டுகிறது.
நன்றி!
Supprimerவணக்கம்!
நல்ல தமிழாற்றல் நாடும் வகையுரைத்தீா்
வல்ல புலமையை வார்த்து!
சிறப்பான இலக்கண விளக்கம்! தமிழை தவறின்றி எழுத உதவும் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்!
RépondreSupprimer
Supprimerவணக்கம்!
தமிழைத் தவறின்றித் தந்துவக்க வேண்டி
அமுதை அளித்தேன் அருந்து!
வணக்கம் ஐயா!
RépondreSupprimerநல்ல விளக்கம் தந்தீர்கள் ஐயா!
படிக்குங் காலத்தில் படித்ததெல்லாம் (என்னைப் பொறுத்து இங்கு ஏற்பட்ட வாழ்க்கை முறை நெருக்கடியோடு சில சூழ்நிலைச் சிக்கல்களினாலும்) மறக்கப்பட்டுச் சின்னா பின்னமாகச் சிதறிப் போயிருந்தது.
நல்ல வேளையாக இங்கு உங்கள் விளக்கத்தினால் என் சந்தேகம் தீர்ந்தது.
மறந்திருந்ததை மீட்டிடக் கூடியதாகவும் இருக்கின்றது.
வேற்றுமை உருபுகள் மறைந்து வருவது வேற்றுமைத் தொகை என்றும் வேற்றுமை ஏற்று விரியும்போது விரிவு ஆகவும் கூறப்படுகிறது.
’தாய்க்கொலை’யில் இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை
வல்லினம் மிகும் என்பதனையும் நன்கு விளங்கிக் கொண்டேன்!
மிக்க நன்றியுடன் என் வாழ்த்துக்களும் ஐயா!
Supprimerவணக்கம்!
தாய்க்கொலை
இரண்டாம் வேற்றுமைத் தொயைில், நிலைமொழி உயர்த்திணையாக இருந்தால் வல்லினம் மிகும்!
நன்றே தெளிந்து நறுந்தமிழைக் கற்றிடுக!
அன்றே உதிக்கும் அழகு!
பயனுள்ள பதிவுகள் ஐயா
RépondreSupprimerநானும் கற்றுக் கொண்டேன் நன்றி
வாழ்க வளமுடன் !
தம 6
Supprimerவணக்கம்!
கற்றுக் களிப்பீா் கனித்தமிழ் நுட்பத்தை
உற்றுக் களிப்பீா் உயர்ந்து!
பயன் தரும் பதிவு சிறப்பான விளக்கம். மிக்க நன்றி தொடர வாழ்த்துக்கள் ....!
RépondreSupprimer
Supprimerவணக்கம்!
பயன்தரும் என்றே படைத்தேன் இதனை!
உயர்வுதரும் என்றே உணர்ந்து!
RépondreSupprimerஎன்றென் றுரைப்பேன்? இனிக்கும் இலக்கணத்தைப்
பொன்னென் றுணா்ந்துநான் போற்றுகிறேன்! - நன்றென்று
தந்த நலமொழிகள் தண்டமிழ்ப் பற்றேந்தி
வந்த மனத்தின் வளம்!
Supprimerவணக்கம்!
குருவருள் தந்த குளிர்தமிழை இங்கே
இருளகன் றோட இசைத்தேன்! - பெருங்கவி
பல்லோர் படித்திதைப் பாராட்டும் நற்புகழ்
எல்லாம் இறைவனுக் கே!
சிறந்த இலக்கண விளக்கப் பதிவு
RépondreSupprimerதொடருங்கள்
Supprimerவணக்கம்!
சிறந்த இலக்கணத்தின் செந்தேன் அளிக்கச்
திறந்தேன் கடையைத் தெளிந்து!