சுதந்தர வெண்பா!
அஞ்சா மறவர் அளித்த தியாகத்தால்
கொஞ்சும் விடுதலையைக் கூடினோம்! -
நெஞ்செரிந்து
சொல்கின்றேன்! பெற்ற சுதந்தரத்தை
வீண்செய்தீர்!
செல்கின்றேன் சிந்தை சிதைந்து!
சும்மா கிடைத்ததா இந்தச் சுதந்தரம்?
அம்மா! அளத்தல் அரிதன்றோ? - இம்மண்ணை
முற்றும் சுரண்டி முடிக்கின்றார்!
நாம்..உரிமை
பெற்ற அடிமைப் பிறப்பு!
சுதந்தரக் காட்சிகளைச் சொல்லி வடிக்கப்
பதங்களைத் தேடிப் பறந்தேன்! - இதமாக
இன்றிருக்கும் இந்தநிலை எய்த
உயிர்கோடி
சென்றிருக்கும் மண்ணும் சிவந்து!
வாட்டும் சிறைதனில் வாடியதை எண்ணுவதா?
காட்டில் கிடந்ததைக் காட்டுவதா? -
நாட்டினது
வெற்றித் திருநாளைக் கொட்டி
முழங்குகிறோம்!
தொற்றித் தொடரும் துயர்!
அன்னியன் ஆட்சி அறுத்தோம்! நமதுயிரில்
பின்னிய மோகம் பிழிந்தோமா? -
எம்மண்ணில்
எங்கே தமிழன் இருக்கின்றான்?
எவ்விடத்தும்
பொங்கும் பிறமொழி பூத்து!
கையூட்(டு) ஒழிந்திடக் கைப்பூட்டு
செய்தோமா?
மையூட்டும் போதையில் மாய்ந்தொழிந்தோம்! -
பையூட்டி
வாழும் வகையொழித்தால் வாய்த்த
சுதந்தரத்தால்
சூழும் நலங்கள் சுடர்ந்து!
மதுகுடித்(து) ஆடுவதோ? மங்கையரை
மேய்ந்து
பொதுவிடத்தில் அய்யய்யோ! பொல்லாத் -
சுதந்தரத்தைக்
கொன்று புதைத்துக் கொழிக்கின்றார்!
நம்முரிமை
என்று வருமோ இயம்பு?
செக்கில் சிறைப்பட்டுச் சீரிழந்த
வ.உ.சி
கக்கித் துவண்ட கதைமறந்தாய்! -
நக்கிப்
பொறுக்கும் இழிவுற்றாய்! பொய்சூடி
நாட்டை
அறுக்கும் பழியுற்றாய் ஆழ்ந்து!
பிறப்புரிமை என்று சுதந்தரத்தைப்
பெற்றோம்!
சிறப்புரிமை என்று செழித்தார்! -
அறிவுடைமை
கொன்ற கொடியோர்! கொலைகொள்ளை
கொண்டாட்டம்!
வென்ற விடுதலை வீண்!
வெள்ளை உடையணிந்து கொள்ளை
அடிக்கின்றார்!
கள்ளைக் கொடுத்துக் கவிழ்க்கின்றார்!
- தொள்ளையிடும்
கன்னக்கோல் கண்ணுடையார்! இன்பச்
சுதந்தரத்தால்
இன்னும்கேள்... எல்லாம் இழிவு!
15.08.2014
வணக்கம் !
RépondreSupprimerஉண்மை நிலையை எடுத்துரைக்கும் அழகிய வெண்பா !
வாழ்த்துக்கள் ஐயா .
Supprimerவணக்கம்!
அம்பாள் அளித்த அமுத அடிகண்டே!
எம்..மால் அருளென ஏத்து!
வெள்ளை உடையணிந்து கொள்ளை அடிக்கின்றார்!
RépondreSupprimerகள்ளைக் கொடுத்துக் கவிழ்க்கின்றார்! - //
உண்மையே! அழகான கவிதை ஐயா!
பதைபதைக்கும் நிகழ்வுகள் நடக்கையிலே
சுதந்திரம் பெற்றுவிட்டோமா என
கதறிக் கேட்கத் தோன்றுதையே
அதை யாரிடம் கேட்பது தெரியவில்லையே!
Supprimerவணக்கம்!
தில்லையார் தீட்டிய செந்தமிழைக் கண்டுவந்தேன்!
எல்லையே இல்லா இனிப்பு!
உண்மை நிலையை அருமையாக எடுத்துரைக்கிறது....
RépondreSupprimerவாழ்த்துக்கள் ஐயா...
Supprimerவணக்கம்!
கோட்டையை ஆளுகின்ற வேட்டை நரிகளை
கூட்டுக்குள் போட்டடைத்துப் பூட்டு!
சுதந்தரக் காட்சிகளைச் சொல்லி வடிக்கப்
RépondreSupprimerபதங்களைத் தேடிப் பறந்தேன்! - இதமாக
இன்றிருக்கும் இந்தநிலை எய்த உயிர்கோடி
சென்றிருக்கும் மண்ணும் சிவந்து!
அருமை அருமை அநியாயங்களையும் அவல நிலையினையும் எடுத்துரைக்கு அழகிய வெண்பா ! வாழ்த்துக்கள் கவிஞரே ...!
Supprimerவணக்கம்
துயரைத் துடைக்கத் துணிந்துகவி தந்தேன்!
உயா்வை உலகுக்கு உரைத்து!
வணக்கம் ஐயா!
RépondreSupprimerஉள்ளத்தி னுள்ளே உறுத்தும் வலிகளை
தெள்ளத் தெளிவாகத் தீட்டினீர்! - வெள்ளமாய்ப்
பாய்ந்தது வேதனை! பண்பற்றுத் தானழித்தோம்
வாய்த்த உரிமை வதைத்து!
வடித்த வெண்பாவில் வழிந்த வலிகள் கண்டேன்!
துயரங்கள் தீர்ந்து விரைவில் நல்வழிகள் பிறக்கட்டும்!
உணர்வுமிக்க பகிர்விற்கு நன்றியுடன் வாழ்த்துக்கள் ஐயா!
வணக்கம் ஐயா!
Supprimerசிறு விளக்கம் கேட்கின்றேன்.
சுதந்தரம் - சுதந்திரம் இரண்டிற்கும் வேறுபாடான
விளக்கமோ கருத்தோ இருக்கின்றதா?
சாதாரணமாகக் கூடுதலானவர்கள் சுதந்திரம் என எழுதுவதைத்தான்
நான் பார்த்திருக்கின்றேன்.
நீங்கள் சுதந்தரமென எழுதியுள்ளீர்களே! அதனாற் கேட்கிறேன்.
நன்றி ஐயா!
வணக்கம் ஐயா!
Supprimerஅறிந்ததே யில்லை அருஞ்சொல் லிதனைத்
தெரிந்து தெளிந்தேனே இன்று!
மிக்க நன்றி ஐயா!
Supprimer"சுதந்திரம்" சொல்தான் வழுவெனத் தொங்கும்!
"சுதந்தரம்" என்பதே சொல்!
Supprimerவணக்கம்!
நாட்டில் உலவும் நாிகளை மாய்த்திடவே
பாட்டில் படைதொடுத்தேன்! பைந்தமிழர் - ஏட்டில்
இருக்கின்ற இன்னெறியை ஏற்றுஅரசு ஆள
தாிக்கின்றேன் போர்வாள் தனை!
கவியின் கனல் தெறிக்கும் கங்குகளில் வெந்து சாகட்டும், வெள்ளையுடை கொள்ளையர்கள்.
RépondreSupprimerநாளையெனும் தொல்லை வேண்டாம் நமது பிள்ளைகளுக்கு...
Supprimerவணக்கம்!
வெள்ளையுடை கொண்டொளிரும் கொள்ளையரைத் தீயிட்டால்
சள்ளையெலாம் நீங்கும் தகா்ந்து!
வணக்கம் கவிஞரையா!
RépondreSupprimerவெண்பாவாய்த் தொடுத்துக் கொடுமைகளை
விளாசித் தள்ளினீர்கள்!...
சுதந்திரம் இன்னும் கிடைக்கவில்லை… வருத்தமே தான்!
வாழ்த்துக்கள் கவிஞரே!
Supprimerவணக்கம்!
பூங்கொடி வந்து புனைந்த கருத்தெல்லாம்
மாங்கனி என்பேன் மகிழ்ந்து!
வணக்கம்
RépondreSupprimerஐயா.
விடுதலை நாளுக்கு தீட்டிய நாவெண்பா வரிகள்
படிப்பவர்கள் சிந்தைதனை தெளிவாக்கும்
என்றுணரும் படி எடுத்தியம்பிள்ளீர்கள்
சொல்வீச்சும் கருத்தாடலும்
தெள்ளத் தெளிவாக உள்ளது.
நன்றாக உள்ளது ஐயா. படிக்க படிக்க இரசனை கூடுகிறது பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
இனிய சுதந்திர தின நல் வாழ்த்துக்கள்
த. ம8வது வாக்கு
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
Supprimerவணக்கம்!
வாக்களித்து வாழ்தும் வளா்ரூபா! உன்னுடைய
போக்கனைத்தும் பூத்த பொழில்!
தேவை சுய விழிப்புணர்வு. இன்றைய நிலை உணர்ந்து வேதனை கொள்ள வைத்த வரிகள்.
RépondreSupprimer
Supprimerவணக்கம்!
சிரீராம் தந்துள்ள சிந்தனையை எண்ணித்
தாித்தால் உடையும் தடை!
முத்துகள் சிதறினவோ முழுநிலவு ஒளிர்ந்தனவோ-என
RépondreSupprimerதித்திக்க வெண்பாவை திகட்டாது தருகின்றீர்
எத்திக்கும் புகழ்மணக்க எழுதுகின்ற ஐயாநீர் -வாழ்க!
எங்கும் இலக்கியத் தமிழ் சூழ்கவே!
Supprimerவணக்கம்!
வலையுலகம் வாழ்த்தும் வளமார் புலவா்!
அலையென ஓங்கிவரும் அன்பு!
தமிழ்ச்சான்றீர் வணக்கம்!
RépondreSupprimerநாம்..உரிமை, வ.உ.சி. என்பன விட்டிசையாய் நின்றதும்,
நாட்டினது என்பதில் வரும் அது எனும் அசைநிலையும்
தற்காலத்தில் பயில வழங்கப்படாதன.
தக்க இடத்து ஆண்டமை சிறப்பு!
பையூட்டி என்பதில் பை என்பது முதலில் புரியவில்லை.
வெறும் பை என்பதிலும் பணம்சேர்த்து என்பதிலும் ஊட்டுதல் எனும் வினை பைசேராது நிற்கக் குழம்பினேன். உண்ணா மரபினை உண்டது போலக் கூறல் எனுமாறு அமைதி காணலாமோ என்று எண்ணினேன்.
பின்தான்
“ஊற்றைச் சரீரத்தைஆபாசக் கொட்டிலை ஊன்பொதிந்த
பீற்றற் துருத்தியைச் சோறிடுந் தோற்பையைப் பேசரிய
காற்றிற் பொதிந்த நிலையற்ற பாண்டத்தைக் காதல் செய்தே
ஏற்றித் திரிந்துவிட் டேனிறைவா கச்சியேகம்பனே!
எனும் பட்டினத்தார் பாடல் நினைவுக்கு வர அது குறிப்பது உடல் எனப்புரிந்து கொண்டேன்.
நன்றி அய்யா!
Supprimerபேராசிரியர் அவர்களுக்கு வணக்கம்!
உங்கள் இலக்கணச் செம்மையைக் கண்டு வியக்கின்றேன்.
சிறந்த விளக்கம். மகிழ்வும் நன்றியும்.
வ.உ.சி என்னும் சீரைச் சிலர் புளிமா என்றுரைப்பார்.
இச்சீரைத் தேமாங்காய் என்று நுண்ணியப் புலமையுடையோர் கொள்வார்.
இனிய என்ற சீரைப் புளிமாவாகக் கொள்ளலாம். இ.னி.ய. என்று பிரித்துச் சொல்லும்பொழுது ஓசை நீண்டொலிக்கும். வ.உசி. என்ற சீரைப் புளிமாவாகக் கொள்ளுதல் பிழையாகும். இக்கருத்தைப் பாவேந்தரிடம் பாடம் கற்ற என் ஆசிரியர் பாவலர்மணி சித்தன் அவர்கள் எனக்கு அளித்தார்.
அது என்ற சொல் இலக்கியங்களில் சுட்டுவாகவே பெரும்பான்மை வரும்.
நாட்டினது வெற்றி, கடலினது ஆழம், என்று அசையாகக் கொண்டு எழுதும் வழகத்தை இன்றும் பல படைப்புகளில் காண்கின்றேன்.
அயற்சொற்களுக்குத் தகுந்த தமிழ்ச்சொற்களை உண்டாக்குவதும், மரபுக்கு உட்பட்டுப் பல புதிய சொற்களை உண்டாக்குவதும் என் கடமையாகக் கொண்டுள்ளேன்.
ஊழல், லஞ்சம், என்ற சொற்களைக் குறிக்கக் கையூட்டு என்ற சொல்லைத் தமிழில் வழங்குகிறோம். கையூட்டுப் போன்றே பையூட்டு!
கைகளில் கொடுப்பது கையூட்டு!
பைகளில் கொடுப்பது பையூட்டு!
கையூட்(டு) ஒழிந்திடக் கைப்பூட்டு செய்தோமா?
மையூட்டும் போதையில் மாய்ந்தொழிந்தோம்! - பையூட்டி
வாழும் வகையொழித்தால் வாய்த்த சுதந்தரத்தால்
சூழும் நலங்கள் சுடர்ந்து!
இந்த வெண்பாவில் "பையூட்டி வாழ்தல்" என்பது "பை" வழியாகக் கொடுக்கும் ஊழலைக் குறிக்கும். தங்கள் கூறிய மற்றோர் பொருளும் இதற்குப் பொருந்தி வருகிறது, ( இதயத்தைப் பையென்றும், உடலைப் பையென்றும் முன்னோர் உரைபார்)
அன்புடன் வந்தே அளித்த கருத்துக்கள்
இன்புடன் என்னுள் இணைந்தனவே! - என்றென்றும்
நன்றி யுடையேன்! நறுந்தமிழ்த் தொண்டருடன்
ஒன்றி வளர்த்தேன் உறவு!
சுதந்தர வெண்பாக்கள் சுட்டெரிக்கும் மண்ணில்
RépondreSupprimerமதம்பிடித்த மாந்தர் மறைந்தே - இதந்தரும்
இவ்வுலகம் இல்லாமை போக்கும் இனிதாகும்
செவ்வென இன்பம் செழித்து !
சுதந்தர நாட்டின் இன்றைய நிலைகளை வலிகளோடு வார்த்த பாக்கள் அருமை ஐயா வாழ்க வளமுடன்
தம 11
Supprimerவணக்கம்!
கொடுமையைக் கண்டு கொதிக்கின்றேன்! வாடும்
கடுமையைக் காய்கின்றேன்! கண்ணில் - கடமையை
ஏந்திக் கவிதை இசைக்கின்றேன்! போா்க்களத்தில்
நீந்திப் படைக்கின்றேன் நீடு!
த.ம 12
RépondreSupprimerஅஞ்சா மறவர் அளித்த தியாகத்தால்
கொஞ்சும் விடுதலையைக் கூடினோம்! - நெஞ்செரிந்து
சொல்கின்றேன்! பெற்ற சுதந்தரத்தை வீண்செய்தீர்!
செல்கின்றேன் சிந்தை சிதைந்து!
அருமையாக உள்ளது ஐயா.
Supprimerவணக்கம்!
கமழ்துளசி வந்து கவிபடித்தாா்! தந்த
தமிழணியை நெஞ்சம் தாித்து!
RépondreSupprimerசுதந்திரம் பெற்றும் சுகம்வர வில்லை!
இதந்தரும் சட்டங்கள் இல்லை! - விதியெனக்
கொள்வதா? மீண்டும்நாம் கொள்ளையரைப் போா்தொடுத்துக்
கொல்வதா? தோழனே கூறு!
Supprimerவணக்கம்!
புற்றுநோய் போல்நாட்டைத் தொற்றிவரும் கையுயூட்டை
முற்றும் ஒழிக்க முடிந்திடுமோ? - பற்றிலா
மக்கள்! மதியின்றி மாக்களென வாழ்கின்றார்!
துக்கம் முடியாத் தொடர்!
எங்கிருந்தாலும் தங்களின் இந்திய உணர்வைக்கண்டு மெய்சிலிர்க்கிறேன்
RépondreSupprimer
Supprimerவணக்கம்!
நற்கண்ண தாசனின் சொற்களை நான்கண்டு
பொற்கிண்ணம் தந்தேன் புகழ்ந்து!
வெண்பாவாய்த் தொடுத்துக் கொடுமைகளை
RépondreSupprimerவிளாசித் தள்ளியுள்ளீர்கள்
தம +1
Supprimerவணக்கம்!
வாக்களித்து என்னை வளமுறச் செய்துள்ளீா்
நாக்கினித்துச் சொன்னேன் நலம்!
RépondreSupprimerபடிக்கப் படிக்க இனிக்கும்
சிறந்த பாவடிகள்
Supprimerவணக்கம்!
படிக்கப் படிக்க இனிக்கும் பாக்கள்
வடித்த தமிழின் வளம்!
இதுபோல் இனியும் வேண்டும்...! இடிந்து உரைக்கும் உங்கள் கவிதை வரிகள்.... மண்ணில் ஒழிந்திட.. இனியும் வேண்டும்...! சந்தடி சாக்கில் சாக்கடை சாதி, சத்தமில்லாக் கையூட்டு நிகழ்வு ஒழிய.... இதுபோல் கவிதை இனியும் வேண்டும்....! பிஞ்சுக் குழந்தை நெஞ்சம் பதைக்கும்... பாலியல் துயரம் பட்டு ஒழிந்தோட... இதுபோல் கவிதை இனியும் வேண்டும்....! வாழ்வு சிறக்க... வையகம் காத்திட... உங்கள் கவிதை போல் உண்மை உரைக்கும் உயர்தமிழ்க் கவிதை வீறுகொண்டெழுத உங்கள் தயவு இம்மண் காத்திட.... இதுபோல் கவிதை இனியும் வேண்டும்...! - Saran Alagu
RépondreSupprimer
Supprimerவணக்கம்!
என்ன உரைத்தாலும் ஏற்கா மனிதரைத்
துன்னும் சிறைக்குள் துவட்டு!
அன்று நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலைகெட்டமனிதரை நினைந்துவிட்டால் என்ற பாரதியின் கவிவரிகளை நினைவூட்டியது உங்கள் கவிதை .நாட்டை நேசிக்கும் எவருக்கும் வரக்கூடிய தார்மீகக்கோபத்தைக் கவிதை வெளிப்படுத்தி நிற்கின்றது ,எதிர்காலத்திலாவது நல்ல மாற்றங்களை எதிர்பாா்போம் .வாழ்த்துக்கள்
RépondreSupprimerThambirajah Pavanandarajah
Supprimerவணக்கம்!
மாற்றம் வருமென்றால் ஏமாற்றம் தான்காண்போம்!
சாற்றும்! கொடுமைக்குச் சாவு!
அண்ணாவின் வரிகளை கண்டதும் துடிப்பாகதான் படித்தேன், ஆனால் இந்த வெள்ளைவேஷ்டி என்று மாறுமோ தெறியவில்லை, என்னன்னவோ எழுதுகிறோம் ஆனால் திருந்ததான் மாட்டேங்குறாங்க,,,,,,
RépondreSupprimerமு. மாரிமுத்து
Supprimerபொல்லாப் பொறுக்கிகளைக் கண்டவுடன் துாக்கினில்
எல்லா இடத்திலும் ஏற்று!
RépondreSupprimerஅருமை. ”நாம் உரிமை பெற்ற அடிமைப் பிறப்பு”. உண்மை.
Rajagopal Govindaswami
Supprimerவணக்கம்!
அடிமை அகற்றா அகத்தினில் உண்டோ
மிடிமை தரும்நல் விடிவு!
RépondreSupprimerநெஞ்சு பொறுக்குதிலையே இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்.
அந்நியன் அன்று சுரண்டினான், விரட்டினோம் தாய்மண்ணைவிட்டே.
சுரண்டல் இன்றும் தொடர்கிறது, சுரண்டுபவன் நம்மவன். மோதி மிதித்திடவும், முகத்தில் உமிழ்ந்திடவும் கூடுவதில்லை ஊழல் கயமைப் பேயினால்.
சொல்லவும் கூடுவதில்லை வஞ்சியருக்கிழைத்திடும் வஞ்சனையை.
தமிழன் என்றோர் இனமுண்டு தனியே அவர்க்கோர் குணமுண்டு.
ஆம் மதுவுக்கு அடிமையாகும் மடமை நினைவிலிகள்.
ஆனந்தப்பள்ளுப் பாடிய பாரதியே நீ இன்றிருந்தால் தாங்கொணாத் துயருருவாய்.
இனியொரு சுதந்திரம் வேண்டிநிற்போம். வென்றெடுப்போம்.
Renugadevi Velusamy
Supprimerவணக்கம்!
சுரண்டும் கொடியவரைத் துாக்கிலிட வேண்டும்!
திரண்டு கொளுத்துவோம் தீது!