dimanche 12 novembre 2023

புகழ் மாறன்


பேரன் புகழ் மாறன்

 

பேரன் மாறன் வந்தாலே

        பேதை யாகும் என்மனமே!

வாரம் வாரம் அவன்வரவால்

        மழலை யாகி யான்தவழ்வேன்!

சேரன் போன்ற நடையழகன்!

        சிந்தை கவரும் உடையழகன்!

வீரன்! தீரன்! தமிழ்காக்க

        விரைந்து வளர்வான் வாழ்த்துகிறேன்!

 

பந்து தட்ட அழைத்திடுவான்!

        பாயும் புலிபோல் பார்த்திடுவான்!

வந்து வந்து தொட்டிடுவான்!

        வணக்கஞ் சொல்லி மயக்கிடுவான்!

தந்து தந்து பிடுங்கிடுவான்

        தாவித் தாவிக் குதித்திடுவான்!

நொந்து போன என்நெஞ்சின்

        நோயைப் போக்கும் அவன்முகமே!

 

இங்கும் அங்கும் தாவிடுவான்!

        என்னைக் குதிரை யாக்கிடுவான்!

தொங்கும் படத்தைக் கேட்டிடுவான்!

        தொடர்ந்து தொல்லை செய்திடுவான்!

எங்கும் உள்ள பொம்மைகளை

        எடுத்தே வந்து குவித்திடுவான்

சுங்கும் காய்கள் இறைத்திடுவான்

        தோழ னாக அவனாவான்!

 

பாடி யிறையை யான்தொழுதால்

        பக்கம் நின்று வணங்கிடுவான்!

தேடி யெடுத்துத் திருநீற்றைத்

        தேக மெங்கும் பூசிடுவான்!

ஓடி வந்து கன்னத்தில்

        ஒற்றை முத்தம் தந்திட்டால்

கோடிப் பிறவி இன்பத்துள்

        கொழிக்கும் என்றன் கவிநெஞ்சே!

 

வாடி யன்றே அழைத்தவுடன்

        வந்தே மடியில் அமர்ந்திடுவான்!

மூடி வைத்த  மிட்டாயை

        முற்றுங் கேட்டுப் பிடிங்கிடுவான்!

ஆடி யாடிக் காட்டிடுவான்!

        ஆகா சொருக்கம் அதுவன்றோ?

நாடி நரம்பு முழுமையிலும்

        நற்றேன் ஊறிப் பாயுதடா!

 

சின்ன சின்ன வண்டிகளைச்

        சீராய் அடுக்கி வைத்திடுவான்!

சொன்ன வுடனே அவைகளையே

        சுா்என்[று] ஓட்டிக் காட்டிடுவான்!

அன்ன மென்ன பால்வெண்மை!

        அழகன் பல்முன் கால்வெண்மை!

கன்ன லமுதம் தோற்றோடும்!

        கண்டால் உள்ளம் கூத்தாடும்!

 

வண்ணந் தீட்டிக் காட்டிடுவான்!

        வந்த துயரை ஓட்டிடுவான்!

கண்ணன் போன்று குறும்புகளைக்

        கணக்கே யின்றிச் செய்திடுவான்!

மண்ணின் பெருமை ஈட்டிடுவான்!
        மலைபோல் புகழைச் சூட்டிடுவான்!

கண்ணின் இமைபோல் செந்தமிழைக்

        கால முழுதுங் காத்திடுவான்!

 

யானை யாக மாறிடுவேன்!  

        மோனை யாகத் தொடர்ந்திடுவேன்!

பூனை யாகக் கத்திடுவேன்!

        பூத மாகக் கூத்திடுவேன்!

மானைப் போன்று துள்ளிடுவான்!

        மதுவாம் கடலுள் தள்ளிடுவான்!

தேனை நிகர்த்த அவன்சொற்கள்

        செவிக்குள் சுவையைக் கூட்டிடுமே!

 

தத்தி தத்தி நடந்ததுவும்,

        தானே யெழுந்து நின்றதுவும்,

சுற்றிச் சுற்றி வந்ததுவும்,

        சொல்லும் பொருளைத் தந்ததுவும்,

கத்திக் கத்தி யழைத்ததுவும்

        கம்மென்[று] இருந்து பார்த்ததுவும்,

முற்றிப் பழுத்த கனியாக

        மூளைக் குள்ளே இனிக்குதடா!

 

தாத்தா வென்றே அவன்சொன்னால்

        தங்கம் வைரம் முத்து..உதிரும்!

சீத்தா கொய்யாக் கனியாவும்

        சேர்த்த கலவை சிரிப்பாகும்!

கூத்தா? பாட்டா? கலையாவும்

        கூடிப் பிறந்த உருவொளிரும்!

ஆத்தா மாரி வேண்டுகிறேன்

        அவனைக் கவிஞன் ஆக்குகவே!

 

பாட்டரசர் கி. பாரதிதாசன்
12.11.20230

Aucun commentaire:

Enregistrer un commentaire