ஆசைக் கடலில்....
ஆசைக் கடலில் நீந்துகிற
ஆட்டம் போதும்! செந்தமிழாம்
ஓசைக் கடலில் மனமுழுகி
ஒளிரச் செய்வாய் திருமாலே!
மீசை முறுக்கி வீண்சண்டை
வினைகள் போதும்! உள்ளொன்றிப்
பூசை அறையில் தவநெறியைப்
புரியச் செய்வாய் திருமாலே!
அகத்தை யுடைத்தே எண்ணங்கள்
அலைதல் போதும்! பற்றற்றுச்
சுகத்தைக் காணும் நல்லமைதி
சூழச் செய்வாய் திருமாலே!
முகத்தைப் பார்த்தே உயிர்சொக்கி
முணங்கல் போதும்! கவிபாடிச்
செகத்தை வெல்லும் உயர்புலமை
செழிக்கச் செய்வாய் திருமாலே!
அதையும் இதையும் அடைந்திடவே
ஆடல் போதும்! பழியான
எதையும் புரியா நெஞ்சத்தை
எனக்குக் தருவாய் திருமாலே!
சதையும் எலும்பும் அழகென்று
சாற்றல் போதும்! மண்ணுக்குள்
புதையும் முன்னே ஞானவொளி
பொலியச் செய்வாய் திருமாலே!
மண்ணும் பொன்னும் பெரிதென்ற
மயக்கம் போதும்! வண்டமிழின்
பண்ணும் பாட்டும் வாழ்வென்று
பணியச் செய்வாய் திருமாலே!
பெண்ணும் கண்ணும் போதையெனப்
பிதற்றல் போதும்! மேலுள்ள
விண்ணும் என்னுள் ஆட்பட்டு
மின்னச் செய்வாய் திருமாலே!
நான்றான் நான்றான் என்றெண்ணி
நவிலல் போதும்! தற்பெருமை
ஏன்றான் ஏன்றான் தெளிவுற்றே
இயங்கச் செய்வாய் திருமாலே!
வான்றான் வான்றான் காதலென
வாழ்தல் போதும்! இறையொளிதான்
தேன்றான் தேன்றான் சுவையூறித்
திளைக்கச் செய்வாய் திருமாலே!
பொய்யே புழுத்துப் புரளுகிற
புன்மை போதும்! எந்நாளும்
மெய்யே பூத்து மணக்கின்ற
மேன்மை செய்வாய் திருமாலே!
அய்யே யென்று பிறர்சொல்லும்
அல்லல் போதும்! விளைந்தோங்கும்
செய்யே போன்று நலமீயச்
செம்மை செய்வாய் திருமாலே!
அறிவே யின்றி வினையாற்றி
அழிதல் போதும்! நல்லோரின்
நெறியே உணர்ந்து கைப்பற்றி
நிறைவைத் தருவாய் திருமாலே!
வெறியே கொண்டு தள்ளாடும்
வேட்கை போதும்! உடலுற்ற
பொறியே யடங்கி தவமோங்கும்
புத்தி தருவாய் திருமாலே!
கள்ளம் நிறைந்து வாழ்ந்திட்ட
காலம் போதும்! மெய்ந்நெறியே
உள்ளம் நிறைந்து மிளிர்கின்ற
உயர்வைத் தருவாய் திருமாலே!
துள்ளும் இளமைப் பருவத்தின்
துன்பம் போதும்! சிந்தைனையுள்
பள்ளம் குள்ளம் இல்லாமல்
பசுமை தருவாய் திருமாலே!
நம்பி வந்தோர்க் கின்னலிடும்
நாசம் போதும்! எம்மக்கள்
தம்பி நீயே என்றோதும்
தன்மை தருவாய் திருமாலே!
தும்பி வாலில் நுாலிட்ட
துன்பம் போதும்! இனிவாழ்வில்
இம்மி பாவம் இல்லாமல்
இயங்கச் செய்வாய் திருமாலே!
புறமே பேசித் திரிகின்ற
போக்குப் போதும்! தமிழ்தந்த
அறமே பேசி யொளிர்கின்ற
அழகே தருவாய் திருமாலே!
திறமே பேசி உழல்கின்ற
செய்கை போதும்! வரிப்புலியின்
மறமே பேசி வெல்கின்ற
வன்மை தருவாய் திருமாலே!
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்
கம்பன் கழகம், பிரான்சு
தொல்காப்பியர் கழகம், பிரான்சு.
பாவலர் பயிலரங்கம், பிரான்சு
27.11.2023
Aucun commentaire:
Enregistrer un commentaire