jeudi 19 juillet 2018

கேட்டலும் கிளத்தலும்

கேட்டலும் கிளத்தலும்
  
எனக்கொரு ஐயம் தீர்த்துவைப்பீரா
இலக்கணங்கற்ற மேதைகாள்...
  
மழலைச்சிறு மொழியிற்சில
வடுகும்சில தமிழும்
குழறித்திரி கருநாடியர்
குறுகிக்கடை திறமின்! - இது பரணி.
  
வெய்யோனொளி தன்மேனியில்
விரிசோதியின் மறைய
பொய்யொவெனும் இடையாளொடும்
இளையானொடும் போனான்!- இது கம்பன்.
  
வலியோர்சிலர் எளியோர்தமை
வதையேபுரி குவதோ
மகராசர்கள் உலகாளுதல்
நிலையாமெனும் நினைவோ! - இது பாவேந்தர்.
  
இவை என்ன வகைப் பா? விருத்தம் எனில் கடைச்சீர் மாச்சீராயும் மற்ற அனைத்தும் கனிச்சீராகவும் வந்துள்ளதே. பாவேந்தரின் பாடலில் இது மட்டும் மக/ரா/சர்/கள் பூச்சீராக ஓரிடத்தில் வருகிறதே. இதன் இலக்கணம் என்ன? சந்த விருத்தமெனில் ஓசைமட்டுமே கணக்கா? கற்ற அறிஞர்கள் கழறினால் தெளிவு கிடைக்கும்.
  
பொற்கைப் பாண்டியன்
மதுரை
  
------------------------------------------------------------------------------------------
  
வணக்கம்!
  
வெய்யோனொளி தன்மேனியின் விரிசோதியின் மறையப்
பொய்யோவெனும் இடையாளொடும் இளையானொடும் போனான்!
மையோமர கதமோமறி கடலோமழை முகிலோ
ஐயோவிவன் வடிவென்பதொ ரழியாவழ குடையான்!
  
[கம்பராமாயணம் 1926 ஆம் பாடல்]
  
தந்தானன தந்தானன தந்தானன தனனா
  
என்ற அமைப்புடைய சந்தக் கலிவிருத்தம். முதல் மூன்று இடங்களில் தனதானன, தந்தாதன, தனதந்தன, தந்தானன, தானந்தன ஆகியனவும் வரும். முதல் மூன்று சீர்கள் ஆறு சந்த மாத்திரையைப் பெறும். நான்காம் சீர், தானா, தனனா, தனனம், தனதாம், தந்தாம் என நான்கு சந்த மாத்திரையைப் பெறும்.
  
வலியோர்சிலர் எளியோர்தமை வதையேபுரி குவதோ
மகராசர்கள் உலகாளுதல் நிலையாமெனும் நினைவா ?
உலகாள உமதுதாய்மிக உயிர்வாதை யடைகியாள்
உதவாதினி ஒருதாமதம் உடனேவிழி தமிழா!
  
[பாவேந்தர் - வாளினை எடடா - 1]
  
இப்பாடல் ஓர் அடிக்கு எண்சீர்களைப் பெற்று வந்த சந்தக் குறட்டாழிசை. கம்பன் பாடிய வெய்யோனொளி என்ற சந்தக் கலிவிருத்தத்தின் சந்தத்தையே இந்தக் சந்தக் குறட்டாழிசை அரையடிக்குப் பெற்றுள்ளது. மகராசர்கள் என்ற சீரில்'ர்' என்ற எழுத்துக் கணக்கில் எடுப்பதில்லை.
  
பச்சைமா மலைபோல் மேனி
பவளவாய் கமலச் செங்கண்
அச்சுதா! அமர ரேறே!
ஆயர்தம் கொழுந்தே! என்னும் [ திருமாலை 3]
  
இப்பாடலில் ஆயர்தம் என்ற சீரை விளமாகக் கொள்ள வேண்டும். இதுபோல் வெண்பாவில் கன்னல்மொழி, புலவர்பல எனக் கனிச்சீர் வருவதுண்டு. இச்சீர்களிலும் இடையின மெய்களை நீக்கிக் கணக்கிடுவர்.
  
மழலைத்திரு மொழியிற்சில வடுகும்சில தமிழும்!
குழறித்திரி கருநாடியர் குறுகிக்கடை திறமின்!
  
[கலிங்கத்துப் பரணி 43].
  
இப்பாடல் ஓரடிக்கு நான்கு சீர்களைப் பெற்று வந்த சந்தக் குறட்டாழிசை. பாவேந்தரின் குறட்டாழிசை எண்சீர்களைக் கொண்டது. மேற்கண்ட மூன்று பாடல்களும் முதல் மூன்று சீர்கள் 6 சந்த மாத்திரையையும், நான்காம் சீர் 4 சந்த மாத்திரையைப் பெற்று வரும்.
  
இந்த மூன்று பாடல்களும் சந்த மாத்திரைக் கணக்கால் ஒற்றுமையுடையன.

ஓரடிக்கு இருசீர்களைப் பெற்ற நான்கடிகள் ஓரெதுகையில் அமைவது வஞ்சித்துறையாகும். ஓரடிக்கு முச்சீர்களைப் பெற்ற நான்கடிகள் ஓரெதுகையில் அமைவது வஞ்சி விருத்தமாகும். ஓரடிக்கு நான்கு சீர்களைப் பெற்ற நான்கடிகள் ஓரெதுகையில் அமைவது கலிவிருத்தமாகும். ஓரடிக்கு ஐந்துக்கு மேற்பட்ட சீா்களைப் பெற்ற நான்கடிகள் ஓரெதுகையில் அமைவது ஆசிரிய விருத்தமாகும்.
  
மேற்கண்ட நான்கடிகளில் அமையும் பாடல்களில், இரண்டு அடிகளை மட்டும் பெற்று வருவதைக் குறள் வெண்செந்துறையாகவும், குறட்டாழிசையாகவும் கொள்ளலாம்.
  
விழுமிய பொருளும் ஒழுகிய ஓசையும் உடைய சமமான இரண்டடிகளை உடைய பாடல் குறள் வெண்செந்துறை. சீர்வரையறை தளைவரையறை இல்லை.
  
விழுமிய பொருளும் ஒழுகிய ஓசையும் இன்றி வரும் செந்துறைச் சிதைவு குறட்டாழிசையாகும். [முதலடியைவிடச் சீர்கள் குறைந்து வரும் இரண்டாம் அடியை உடைய இரண்டடிப் பாடலும், தளைதட்டி வரும் குறள்வெண்பாவும் குறட்டாழிசையாகும்]
  
நான்கடிகளைப் பெற்ற விருத்தத்தில் இரண்டடிகளைச் மட்டும் பெற்ற பாடலைச் செந்துறை என்றும், குறட்டாழிசை என்றும் சொல்ல இடமுள்ளதுபோல், இரண்டு செந்துறைகள் ஓரெதுகையில் அமைந்தால் இரண்டையும் சேர்த்து ஒரு விருத்தம் என்று சொல்ல இடமுண்டு.
  
பாவேந்தரின் வாளினை எடடா என்ற பாடல் நான்கு சந்தக் குறட்டாழிசையைப் பெற்றுள்ளது. நான்கு சந்தக் குறட்டாழிசையும் ஓரெதுகையில் அமைந்துள்ளன. முதல் இரண்டு பாடல்களை இங்குத் தருகிறேன்.
  
1.
வலியோர்சிலர் எளியோர்தமை வதையேபுரி குவதோ
மகராசர்கள் உலகாளுதல் நிலையாமெனும் நினைவா ?
உலகாள உமதுதாய்மிக உயிர்வாதை யடைகியாள்
உதவாதினி ஒருதாமதம் உடனேவிழி தமிழா!
  
2.
கலையேவளர்! தொழில்மேவிடும்! கவிதைபுனை தமிழா!
கடலேநிகர் படைசேர்கடு விடநேர்கரு கிகள்சேர்!
நிலமேஉழு நவதானிய நிறையூதியம் அடைவாய்!
நிதிநுால்விளை! ஒயிர்நுால்உரை நிசநுால்மிக வரைவாய்
  
மேற்கண்ட இரண்டு சந்தக் குறட்டாழிசையை ஒன்றாகச் சேர்த்தால் எண்சீர்ச் சந்த விருத்தத்தைப் பெறலாம்.
  
வலியோர்சிலர் எளியோர்தமை வதையேபுரி குவதோ
   மகராசர்கள் உலகாளுதல் நிலையாமெனும் நினைவா ?
உலகாள உமதுதாய்மிக உயிர்வாதை யடைகியாள்
   உதவாதினி ஒருதாமதம் உடனேவிழி தமிழா!
கலையேவளர்! தொழில்மேவிடும்! கவிதைபுனை தமிழா!
   கடலேநிகர் படைசேர்கடு விடநேர்கரு கிகள்சேர்!
நிலமேஉழு நவதானிய நிறையூதியம் அடைவாய்!
   நிதிநுால்விளை! உயிர்நுால்உரை நிசநுால்மிக வரைவாய்!
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
19.07.2018   
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
19.07.2018

Aucun commentaire:

Enregistrer un commentaire