வெண்பா மேடை - 77
வெவ்வேறு பொருள் பற்றி அடுக்கி வந்த வெண்டாழிசை
1.
இயற்கையைப் போற்றல், இவ்வுலகைக் காக்கும்
வயல்களை வாழ்த்தல், வளமுடன் வாழ
அயல்மொழி அகற்றல் அழகு!
2.
மரங்களைச் சேர்ப்போம் மாமழை வேண்டியே!
உரங்களைச் சேர்ப்போம் உழுமண் செழிக்கவே!
கரங்களைச் சேர்ப்போம் கணித்து!
3.
தொண்டு புரிந்திடுவோம்! தோழமை காத்திடுவோம்!
நண்டு செயலொழிப்போம்! நற்றமிழை நாளும்
மொண்டு குடிப்போம் முந்து!
4.
காவிரித் தாயே! கண்ணீர் துடைத்திடவே
தாவி..நீ வந்திடுவாய்! தண்டமிழ்ப் பாவலன்
கூவி அழைத்தேன் கொதித்து!
5.
கற்ற கல்வியைக் காதல் புரிந்திடவும்
உற்ற கலையை உயிராய் உவந்திடவும்
நற்றவ நாதனை நாடு!
6.
சாதி வளர்ப்பாரைச் சமயம் வெறியாரை
நீதி குலைப்பாரை நிலமெங்கும் பொய்ம்மையை
ஓதித் திரிவாரை ஓட்டு!
7.
கையூட்டு ஒன்றைக் கடமையென எண்ணிடுவார்!
மையூட்டும் வன்கருமை மனமுடையார் காண்பாரோ
தையூட்டும் இனிமையைத் தான்?
8.
நீட்டென்னும் தேர்வுள் நிலங்கொள்ளாச் சதியினைக்
கூட்டிக் குளிர்காயும் குள்ள நரிகளை
ஓட்டி ஒழிப்போம் உடன்!
9.
போலித் துறவிகள் பூச்சூடித் திரிக்கிறார்!
பாலின் நிறமாகப் பளபளப்பார்! அன்னவர்தம்
காலில் விழுவதோ காப்பு?
10.
வாக்கு வரங்கேட்டு வாசல் வந்தவர்கள்
துாக்குக் கயிறைச் சுழற்றுகிறார்! தீயவர்கள்
ஆக்கும் அரசை அகற்று!
[பாட்டரசர் கி. பாரதிதாசன்]
வெவ்வேறு பொருட்களுடன் பலவடிக்கி வெண்டளையுடன் வேற்றுத்தளை அருகி வந்த வெண்டாழிசை. இவ்வாறு மற்றத் தளைகளிலும் வெண்டாழிசை அமையும்.
விரும்பிய வெவ்வேறு பொருட்களுடன் பலவடிக்கி வெண்டளையுடன் வேற்றுத்தளை அருகி வந்த வெண்டாழிசை ஒன்றைப் பாடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
"பாவலர் பயிலரங்கம்" என்ற குழுவில் இணைந்து தங்கள் வெண்டாழிசைத் தனிப்பதிவாகப் பதிவிட வேண்டுகிறேன்!
குறிப்பு
தளை தட்டாமல் சிந்தியல் வெண்பா ஒரு பொருண்மீது மூன்று அடிக்கு வருதல் வெள்ளொத்தாழியை ஆகும்.
தளை தட்டாமல் சிந்தியல் வெண்பா ஒரு பொருண்மீது மூன்றுக்கு மேல் வந்தால் அவைகளைச் சிந்தியல் வெண்பா என்று உரைத்தல் வேண்டும்.
தளை தட்டி, வேற்றுறளை அருகி வருவது வெண்டாழிசை யாகும்.
அன்புடன்
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
10.07.2018
Aucun commentaire:
Enregistrer un commentaire