வெண்பா மேடை - 89
நடையோசை வெண்பா!
முன்னவனே! யானை முகத்தவனே! முத்திநலஞ்
சொன்னவனே! துாய்மெய்ச் சுகத்தவனே! - மன்னவனே!
சிற்பரனே! ஐங்கரனே! செஞ்சடையஞ் சேகரனே!
தற்பரனே நின்தாள் சரண்!
[திருவருட்பா, சிவநேச வெண்பா - 1]
வந்தருள்வாய்! மாண்பருள்வாய்! வன்னருள்வாய்! வாழ்த்திடுவாய்!
தந்தருள்வாய் தண்ணிலவாய்! சால்பருள்வாய்! - சிந்தருள்வாய்!
பண்னருள்வாய்! பண்பருள்வாய்! பைந்தமிழ்..வாய் ஈந்தருள்வாய்!
மண்ணருள்வாய்! வாழ்வருள் வாய்!
நன்மைவரும்! நட்புவரும்! நன்றே செயலாற்ற
வன்மைவரும்! மாட்சிவரும்! வான்மழையின் - தன்மைவரும்!
முன்மைவரும்! முன்னைநெறி மூத்துவரும்! முப்பாலால்
மென்மைவரும் வாழ்வில் மிகுத்து!
[பாட்டரசர் கி. பாரதிதாசன்]
மேற்கண்ட முதல் வெண்பாவில் முன்னவனே, முகத்தவனே, சொன்னவனே, மன்னவனே, சிற்பரனே, ஐங்கரனே, சேகரனே, தற்பரனே, எனச் சீர்கள் வந்துள்ளன. வெண்பாவில் வந்துள்ள பல சீர்கள் 'னே' என்ற ஈற்றைப் பெற்றதனால் பாட்டின் நடையோசை சிறக்கிறது.
இரண்டாம் வெண்பாவில் 14 சீர்கள் 'வாய்' என்ற ஈற்றைப் பெற்றுள்ளது.
மூன்றாம் வெண்பாவில் எட்டுச் சீர்கள் 'வரும்' என்ற ஈற்றைப் பெற்றுள்ளன.
ஒரு வெண்பாவில் பல சீர்களில் ஈற்றெழுத்து ஒன்றிவரும் வண்ணம் விரும்பிய பொருளில் 'நடையோசை வெண்பா' ஒன்றைப் பாடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
"பாவலர் பயிலரங்கம்" என்ற குழுவில் இணைந்து நடையோசை வெண்பாவைத் தனிப்பதிவாகப் பதிவிட வேண்டுகிறேன்!
அன்புடன்
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
28.07.2018
Aucun commentaire:
Enregistrer un commentaire