வெண்பா மேடை - 82
அடி முரண் தொடை வெண்பா!
நன்னெறியை நாடுமனம் நன்குயரம்! எந்நாளும்
புன்னெறியை நாடுமனம் போயொழியும்! - என்..தோழா!
வாழ்வு வளங்காண வள்ளல் வழியேற்றுத்
தாழ்வுக்[கு] அளிப்பாய் தடை!
இனிக்கின்ற சொல்லிருக்க என்னவளே! ஏனோ
கசக்கின்ற வண்ணம் கதைத்தாய்? - பசிக்கின்ற
ஏழைபோல் வாடுகிறேன்! ஏந்திழையே! அன்பிலாச்
செல்வர்போல் செல்வதேன் செப்பு?
[பாட்டரசர் கி. பாரதிதாசன்]
முரண்படும் சொற்களைப் பாடலின் அடித் தொடக்கங்களில் அமைத்து எழுதுவதை அடி முரண் தொடை என்பார்கள். மேற்கண்ட முதல் வெண்பாவில் முன்னிரண்டு அடிகளின் தொடக்கத்தில் 'நன்னெறி x புன்னெறி' என்ற முரண் அமைந்துள்ளது. பின் இரண்டு அடிகளில் 'வாழ்வு x தாழ்வு' என்ற முரண் அமைந்துள்ளது. முரண் தொடையுள் எதுகையும் அமைந்துள்ளது.
எதுகையின்றி முரண் தொடை பெற்றுப் பாடல் அமைவதுண்டு. இரண்டாம் வெண்பாவில் 'இனிக்கின்ற x கசக்கின்ற', 'ஏழை x செல்வர்' என முரண் தொடை அமைந்து எதுகையின் இடத்தைத் தாங்கிக்கொள்கிறது.
விரும்பிய பொருளில் 'அடி முரண் தொடை வெண்பா' ஒன்று பாடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
"பாவலர் பயிலரங்கம்" என்ற குழுவில் இணைந்து அடி முரண் தொடை வெண்பாவைத் தனிப்பதிவாகப் பதிவிட வேண்டுகிறேன்!
அன்புடன்
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
18.07.2018
Aucun commentaire:
Enregistrer un commentaire