வெண்பா மேடை - 79
கிளி வெண்பா
நஞ்சி நலிந்திங்கு நற்றமிழர் வாடுவதேன்?
கொஞ்சுங் குணக்கிளியே கூறுவாய்! - நெஞ்சத்துள்
பற்றின்றித் தம்மினப் பண்பின்றி, ஒற்றுமையாம்
பொற்பின்றிப் போனார் புறம்!
[பாட்டரசர் கி. பாரதிதாசன்]
சின்னஞ் சிறுகிளியே! சீதளப் பாட்டிசைத்த
மன்னவன் கொண்ட மலையென்ன? - பொன்னனையத்
தாளாப் பெருமை தமிழ்போலச் சேர்த்ததவன்
மாளாப் புகழே மலை!
[கவிப்பேரரசு வைரமுத்து, அறிஞர் அண்ணா திருத்தசாங்கம்]
பச்சை மணிக்கிளியே! பாவியெனக் கே,யோகப்
பிச்சை யருளிய..தாய் பேருரையாய்! - இச்சகத்தில்
பூரணமா ஞானப் புகழ்விளக்கை நாட்டுவித்த
பாரதமா தேவியெனப் பாடு!
[மகாகவி பாரதியார், பாரத தேவியின் திருத்தசாங்கம்]
தாதாடு பூஞ்சோலைத் தத்தாய்! நமையாளும்
மாதாடும் பாகத்தான் வாழ்பதியென்? - கோதாட்டிப்
பத்தரெல்லாம் பார்மேல் சிவபுரம்போல் கொண்டாடும்
உத்தர கோசமங்கை ஊர்!
[மாணிக்கவாசகர், திருவாசகம்]
நேரிசை வெண்பாவில், முதல் ஏழு சீர்களில் கிளியிடத்தில் ஒரு கேள்வியைக் கேட்பதாகவும், அதற்கான பதிலைத் தனிச்சொல்லில் இருந்து பின் இரண்டு அடிகளில் கிளி உரைப்பதாகவும் வெண்பா அமைய வேண்டும்.
விரும்பிய பொருளில் கிளி வெண்பா ஒன்று பாடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
"பாவலர் பயிலரங்கம்" என்ற குழுவில் இணைந்து தங்கள் கிளி வெண்பாவைத் தனிப்பதிவாகப் பதிவிட வேண்டுகிறேன்!
அன்புடன்
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
15.07.2018
Aucun commentaire:
Enregistrer un commentaire