வெண்பா மேடை - 89
சொற்பொருள் பின்வரு நிலையணி வெண்பா!
அணி என்ற சொல்லுக்கு அழகு என்பது பொருள். பொன்னணிகளை அணிந்து பெண்மணிகள் அழகு பெறுவதுபோல், அணி என்னும் உறுப்பால் கவிதை அழகு பெறுகிறது. மொழிக்கு அழகு செய்யும் அணியிலக்கணத்தை மாறனலங்காரம், தண்டியலங்காரம், அணியிலக்கணம் ஆகிய நூல்கள் எடுத்துரைக்கின்றன.
செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்துள் எல்லாம் தலை! [குறள் - 411]
பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்
பொருளல்ல தில்லை பொருள்! [குறள் - 751]
கண்ணோட்டம் இல்லவர் கண்ணிலர் கண்ணுடையார்
கண்ணோட்டம் இன்மையும் இல் [குறள் - 751]
வைகலும் வைகல் வரக்கண்டும் அஃதுணரார்
வைகலும் வைகலை வைகுமென்று இன்புறுவர்
வைகலும் வைகல்தம் வாழ்நாள்மேல் வைகுதல்
வைகலை வைத்துணரா தார் [ நாலடியார் - 39]
மேற்கண்ட பாக்களில், முதல் குறட்பாவில் 'செல்வம்' என்னும் சொல் பொருள் என்னும் ஒரே பொருளில் ஐந்து முறை பயின்று வந்துள்ளது.
இரண்டாம் குறட்பாவில் 'பொருள்' என்ற சொல் அதே பொருளில் நான்கு முறை வந்துள்ளது.
முன்றாம் குறட்பாவில் 'கண்' என்ற சொல் அதே பொருளில் நான்கு முறை வந்துள்ளது.
வெண்பாவில் 'வைகலும்' என்னும் சொல் பின்னர்ப் பலவிடத்தும் வந்தும் ஒருபொருளையே தந்து நின்றது.
ஒரு செய்யுளில் ஒரு சொல் பலமுறை ஒரே பொருளில் பயின்று வருவது சொற்பொருள் பின்வரு நிலையணி எனப்படும்.
தமிழைப் படித்தல் தமிழைப் படைத்தல்
தமிழை வளர்த்தல் தலையே! - தமிழை
நினைந்துருகிப் போற்றல் நிறைகவி யாற்றில்
நனைந்துருகி ஆடல் நலம்!
மாலை மணக்குதடி! மாலை மதியழகால்
மாலை மயக்குதடி! மாலையே - மாலையே
கோடிக் கவிகள் குவிக்குதடி! மாலையை
நாடி கிடக்குதடி நாள்!
தத்திவரும் பிள்ளைநடை! தாவிவரும் கொல்லைமுயல்!
சுற்றிவரும் தேன்வண்டு! சூழ்ந்துவரும் - நற்காகம்!
ஓடிவரும் தண்ணாறு! பாடிவரும் மாங்குயில்
தேடிவரும் பாக்கள் திரண்டு!
[பாட்டரசர் கி. பாரதிதாசன்]
இவ்வாறு ஓரேசொல் ஒரே பொருளில் மூன்றுமுறைக்குக் குறையாமல் வருமாறு விரும்பிய பொருளில் ஒரு வெண்பா பாடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
"பாவலர் பயிலரங்கம்" என்ற குழுவில் இணைந்து சொற்பொருள் பின்வரு நிலையணி வெண்பாவைத் தனிப்பதிவாகப் பதிவிட வேண்டுகிறேன்!
அன்புடன்
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
உங்கள் படைப்பு அருமை. நான் கவிதையிலக்கணம் என்னும் வாட்ஸப் குழுவில் உறுப்பினராக உள்ளேன். அங்கு மரபுக்கவிதை இலக்கணம் சொல்லித் தருகிறார்கள். அங்கு உங்கள் வலைத்தளத்தைப் பகிர்ந்த போது பாராட்டியிருந்தார்கள். நீங்களும் பங்கெடுத்துக் கொள்ள விரும்பினால் எனக்கு +94728211081 என்னும் இலக்கத்துக்கு வாட்ஸப் செய்யுங்கள். தமிழால் இணைவோம்!
RépondreSupprimerநமது வலைத்தளம் : சிகரம்
இலக்கியம் | அரசியல் | விளையாட்டு | பல்சுவை | வெள்ளித்திரை | தொழிநுட்பம் -அனைத்துத் தகவல்களையும் அழகு தமிழில் தாங்கி வரும் உங்கள் இணையத்தளம் - #சிகரம்
https://newsigaram.blogspot.com/
வணக்கம்!
Supprimerதொலைப்பேசி எண்களைச் சரியாக எழுதவும்